Thursday, November 25, 2021

ஊடகங்களின் தோல்வியும் கூட . . .


 *நாளொரு கேள்வி: 25.11.2021*


தொடர் எண் : *543*

*இன்றோடு வீதிகளில் ஒராண்டை நிறைவு செய்யும் விவசாயிகள்*

நம்மோடு மூத்த ஊடகவியலாளர் *பி.சாய்நாத்*
(தமிழில் : துளசிதரன், கோவை)
##########################

*விவசாயிகளின் வெற்றி: ஊடகங்களின்  தோல்வி*

கேள்வி: 

சமூகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகம் விவசாயிகளின் போராட்டம் பற்றிய உண்மையை தாங்கிப் பிடித்ததா?

*சாய்நாத்*

பெரு ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சித்தன. என்றாலும் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாகத்தான் மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. சில விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் பிரதமர் தவறியதால் அச் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை.

பல வருடங்களில் *உலகம் கண்டிராத மிகப் பெரிய அமைதியான ஜனநாயக போராட்டம்* இது என்பதை ஊடகங்களால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நிச்சயமாக தொற்று நோயின் உச்சத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய போராட்டம் ஒரு வலிமையான வெற்றியைப் பெற்றுள்ளது .

ஒரு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வெற்றி இது. அது *விடுதலைப் போராட்ட பாரம்பரியம்.*  ஆதிவாசிகள் தலித் சமூகம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள்- ஆண்களும் பெண்களும் இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். நமது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் அந்த மாபெரும் போராட்டத்தின் உணர்வை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும், ரத்து செய்வதாகவும் மோடி அறிவித்துள்ளார். *ஒரு பகுதி விவசாயிகளை சம்மதிக்க வைக்கத் தவறியதால் தான்* ரத்து செய்கிறேன் என்று கூறியுள்ளார். மதிப்பிழந்த மூன்று வேளாண் சட்டங்களும் அவர்களுக்கு மிகவும் நல்லது என்றும், ஒரு சிறிய பகுதி விவசாயிகளையே ஏற்றுக் கொள்ள வைக்க முடியவில்லை என்று கூறியதை குறித்துக் கொள்ளவேண்டும். இந்த வரலாற்றுப் போராட்டத்தின் போது *உயிரிழந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.* மூன்று வேளாண் சட்டங்களின் தோல்வியைப் பற்றியோ அல்லது பெருந்தொற்றுக்கு நடுவில் போராடும் விவசாயிகள் மீது அரசு எத்தகைய தாக்குதலைத் தொடுத்தது என்பது பற்றியோ குறிப்பிடவில்லை.

மோடியின் வாதத்தை ஏற்க மறுத்த, மோடி குறிப்பிடுகின்ற சிறு பகுதி விவசாயிகள் *காலிஸ்தானிகள், தேசவிரோதிகள் விவசாயிகள் போல் வேஷம் போடும் போலி ஆர்வலர்கள்* என்ற பட்டங்களைப் பெற்றனர். அவர்கள் சம்மதிக்க மறுத்தனரா? அவர்களை சம்மதிக்க வைக்க *என்ன வழிமுறைகள்* மேற்கொள்ளப்பட்டன? அவர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க தலைநகர் டெல்லிக்கு நுழைய அனுமதிக்க  மறுத்ததன் மூலமா?
அகழிகள் மற்றும் முட்கம்பிகள் மூலம் அவர்களை தடுப்பதன் மூலமா? அவர்களை தண்ணீர் பிரங்கிகளால் தாக்கியதன் மூலமா?  பெரு ஊடகங்கள் மூலம் விவசாயிகளை கொச்சைப் படுத்துவதன் மூலமா? உள்துறை இணை அமைச்சர் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டுள்ள வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றுவதன் மூலமா?  இவைகள் தான் சிறு பகுதி விவசாயிகளை சம்மதிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளா?  

பிரதமர் இந்த ஆண்டு மட்டும் குறைந்தது ஏழு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால் விவசாயிகள் போராட்டம் நாட்டின் எல்லாப் பகுதி மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் பிரதமர் இல்லத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவே உள்ள டெல்லி எல்லைகளில் போராடும் *விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை.* இது தான் விவசாயிகளை சம்மதிக்க எடுக்கப்பட்ட உண்மையான முயற்சிகளா?

இந்த போராட்டம் தொடங்கியது முதலே ஊடகங்களும் மற்றவர்களும் இவர்கள் *எத்தனை காலம் தாக்குப் பிடிப்பார்கள்* என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். அந்த கேள்விக்கு விவசாயிகள் அருமையாக பதிலளித்துள்ளனர். ஆனால் தங்களின் *இந்த அருமையான வெற்றி முதல் படி தான்* என்பது அவர்களுக்கு தெரியும். ரத்து செய்வது என்பது தற்போதைக்கு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் வகையில் இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கேற்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் மற்றும் மற்ற முக்கிய பொருளாதார கொள்கைகளுக்கு இன்னும் தீர்வு கொடுக்கப்படவில்லை .

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 5 மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது என அதிர்ச்சியூட்டும் செய்தியைப் போல தொலைக்காட்சி தொகுப்பாளர் தெரிவிக்கிறார்கள் 

அதே ஊடகங்கள் *நவம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 29 சட்டமன்றம் மற்றும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம்* பற்றிக் கூறத் தவறிவிட்டது. அந்த நாட்களின் தலையங்கங்கள், அந்த நாட்களில் தொலைக்காட்சி பகுப்பாய்வுகளைப் பாருங்கள்! ஆழமான விவாதங்கள் இல்லை. ஆளும் கட்சியின் பின்னடைவுக்கான காரணிகள் தேடப்படவில்லை. சில இடங்களில் உள்ளூர் மக்களின் கோபங்களைப் பற்றியும் விவாதித்தனர். ஆனால் ஒரு சில ஊடக தலையங்கங்கள் *இரண்டு காரணிகள்* இந்த தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவை விவசாயிகள் போராட்டம் மற்றும் கோவிட் பெருந்தொற்றில் அரசின் தவறான நிர்வாகம்  என்றும் கூறின.

திரு மோடியின் இன்றைய அறிவிப்பு கடைசியாக  அவர் குறைந்தபட்சம் அந்த இரண்டு காரணிகளின் முக்கியத்துவத்தையும் புத்திசாலித்தனமாக உணர்ந்து கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற  மாநிலங்களில் சில பெரிய தோல்விகள் அடைந்துள்ளதை உணர்ந்துள்ளார். ஆனால் சில ஊடகங்கள் *பஞ்சாப் மற்றும் ஹரியானா மட்டுமே* தாக்கங்கள் உள்ள மாநிலங்கள் என்று தனது பார்வையாளர்களுக்கு தெரிவிக்கின்றன. *இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம்* ஆகிய மாநிலங்கள் அவர்களது உருப் பெருக்கிக்குள் காரணிகளாக இல்லை .

ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளில் பாஜக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்ததை எப்போது கடைசியாக பார்த்தோம்? அல்லது இமாச்சல் பிரதேசத்தில் அவர்கள் மூன்று சட்டமன்றங்களையும் ஒரு பாராளுமன்றத்தையும் இழந்த தொகுதியில் அவர்கள் பெற்ற வாக்குகளை எடுத்துக் கொள்ளலாமா ?

ஹரியானாவில் போராட்டக்காரர்கள் கூறியதுபோல், முதல்வர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பா.ஜ.க விற்காக பிரச்சாரம் செய்தது. விவசாயிகள் பிரச்சினைக்காக ராஜினாமா செய்த அபய் சவுதாலாவுக்கு எதிராக காங்கிரஸ் முட்டாள்தனமாக வேட்பாளரை நிறுத்தியது. மத்திய அமைச்சர்கள் பெரும் பலத்துடன் களம் இறங்கிய இடத்தில் பாஜக  தோல்வியடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். ஆனால் சவுதாலாவின் வித்தியாசத்தை ஓரளவு குறைக்க முடிந்தது. அவர் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். *விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கத்தை மூன்று மாநிலங்கள் உணர்ந்தன.* கார்ப்பரேட் ஆதரவாளர்கள் போலல்லாமல், பிரதமர் அதை புரிந்து கொண்டார். மேற்கு உத்திரபிரதேசத்தில் நடந்த அந்த எதிர்ப்புகளின் தாக்கத்துடன், லக்கிம்பூர் கேரியில் நடந்த அரசுக்கு சுய சேதத்தை விளைவிக்கக் கூடிய கொடூரமான கொலைகளின் தாக்கமும் சேர்ந்து கொண்டது. மேலும் இன்னும் 90 நாட்களில் அந்த மாநிலத்தில் தேர்தல் வர உள்ளதால் அவருக்கு வெளிச்சத்தை தந்துள்ளது.

விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரட்டிப்பாவதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் சரியாக உணர்ந்து கேள்வியை எழுப்பினால் இன்னும் மூன்று மாதத்திற்குள் வரவிருக்கும் தேர்தலுக்குள்ளாக ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாவது இருக்கட்டும் . *77 வது சுற்று தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை* 2018 -19 இன் படி விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதாக 
தெரிவிக்கிறது. இது பயிர் சாகுபடியிலிருந்து கிடைக்கக்கூடிய உண்மையான வருவாய் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

விவசாயிகள் தங்களது துயரத்தை 2004 தேர்தலில் வெளிப்படுத்தியது போல் இவர்களின் போராட்டம் இந்நாட்டு அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது விவசாய நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வில்லை. *அந்த நெருக்கடியின் பெரிய பிரச்சினைகள் மீதான போரின் புதிய கட்டத்தின் துவக்கம் இது.* விவசாயிகளின் போராட்டம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. குறிப்பாக அனைவரும் வியக்கும் வகையில் 2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் *ஆதிவாசி விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை வரை நடத்திய 182 கிலோமீட்டர் பாதயாத்திரை* தேசத்தை அதிரவைத்தது.

அன்றும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும், உண்மையான விவசாயிகள் அல்ல என்றும் அவதூறுகளைக் கூறிய ஆட்சியாளர்களை அவர்களது அணிவகுப்பு புறம்தள்ளியது.

வரும் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இந்தியராக உணர்ந்தும், இந்தியருக்குச் சொந்தமாகவும் நடத்தப்பட்ட அச்சகத்தின் துவக்கம் என்று சொல்லக்கூடிய *ராஜாராம் மோகன்ராயால் நடத்தப்பட்ட இரண்டு சிறந்த பத்திரிகைகள் துவங்கப்பட்டு 200 வது ஆண்டை* நாம் கொண்டாடுவோம். அதில் ஒன்று மிராத்-உல்-அக்பர். அந்த பத்திரிக்கையில் பிரதாப் நாராயணதாஸுக்கு கொலை தண்டனை அளித்த கொமிலாவில் (தற்போது வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் உள்ளது) உள்ள நீதிபதியின் ஆணைக்கு  காரணமான ஆங்கிலேய நிர்வாகத்தை அவர் மிக அருமையாக  வெளிப்படுத்தினார். தனது சக்தி வாய்ந்த தலையங்கத்தின் மூலம் அன்றைக்கு இருந்த உச்சநீதி மன்றம் அந்த நீதிபதியையே விசாரணைக்கு இழுத்துச் செல்ல வைத்தார்.

இதற்கு பதிலளித்த கவர்னர் ஜெனரல்  பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தினார். *ஒரு கொடூரமான பத்திரிக்கை ஆணையை பிரகடனப்படுத்தி* பத்திரிகையாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். இதற்கு அடிபணிய மறுத்த ராய்,  இழிவுபடுத்தும் மற்றும்  அவமானப்படுத்தும் சட்டங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு அடிபணிவதை விட மிராத்- உல்-அக்பரை மூடுவதாக அறிவித்தார் ஆனால் மற்ற பத்திரிகைகள் மூலம் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்.

*அதுதான் துணிச்சலான பத்திரிக்கை செயல்பாடு.* விவசாயிகள் பிரச்சினைகளில் நாம் கண்ட கார்ப்பரேட் நலன் சார்ந்த பத்திரிகைகள் போலல்ல. கையொப்பமிடாத தலையங்கங்களில் விவசாயிகளைப் பற்றி கவலை தெரிவித்த பத்திரிகைகள், பத்திரிகைகளின் தனிக் கட்டுரைகளில் *பணக்கார விவசாயிகள் பணக்காரர்களுக்காக சோசலிசத்தை தேடுகிறார்கள்* என அவர்களை கண்டித்தன.

*இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா,* ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் இவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள் இவர்களிடம் இனிமையாகத்தான் பேச வேண்டும் எனத் தெரிவிக்கும் அதே வேளையில்  *இந்த வேளாண் சட்டங்கள் மிகவும் நல்லது* எனவும், அவை திரும்பப் பெறக்கூடாது என்றும் கூறிவந்தன. இதை மற்ற பத்திரிகைகள் பின்பற்றின.

ஆனால் இந்தப் பத்திரிகைகள் ஒரு முறையாவது விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே ஆன முரண் பற்றியோ, *முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்துக்களின் மதிப்பு என்பது 84.5 பில்லியன் டாலர்கள் (ஃபோர்ப்ஸ் 2021) பஞ்சாப் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி GSDPஐ (சுமார் 85.5 பில்லியன் டாலர்கள்) மிக வேகமாக நெருங்கி வருவதையோ,* அம்பானி மற்றும் அதானி இருவரின் சொத்து மதிப்பும் பஞ்சாப் அல்லது ஹரியானா மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்பதையோ தனது வாசகர்களுக்கு தெரிவித்துள்ளனரா?

ஆனால் இன்று நிலவும் சூழ்நிலையில் அம்பானி பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளராக உள்ளார். அவருக்கு சொந்தமில்லாத மற்ற ஊடகங்களில் மிகப்பெரிய விளம்பரதாரராக உள்ளார். இரண்டு மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்கள் கொண்டாடப்படும் வகையில் எழுதப்படுகிறது. இது தான் இன்றளவும் கார்ப்பரேட் சார்பு பத்திரிக்கைகளின் நிலை. 

இந்த தந்திரமான உத்தி, பின் வாங்கும் நிலை பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஏற்கனவே பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸிலிருந்து விலகி மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் கிடைத்த வெற்றி என்று முன்னாள் முதல்வர் *அம்ரீந்தர்சிங்* கூறியுள்ளார். இது அங்குள்ள தேர்தல் கருத்துக் கணிப்பை மாற்றும்.

ஆனால் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு அது *யாருடைய வெற்றி என்பது தெரியும்.* இந்தப் பத்து ஆண்டுகளிலேயே மிக மோசமான குளிர், கடுமையான வெயில் மற்றும் மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மோடி மற்றும் அவரது ஆதரவு பத்திரிகைகளால் மிக மோசமாக நடத்தப் பட்ட நிலையிலும் எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளுடன் *பஞ்சாப் மக்களின் இதயங்கள்* இணைந்திருக்கின்றன. 

விவசாயிகள் சாதித்த மிக முக்கியமான அம்சம் மற்ற துறைகளிலும் எதிர்த்து போராட ஊக்கமளித்தது தான். தன்னை எதிர்ப்பவர்களை வெறுமனே சிறையில் அடைப்பது அல்லது அவர்களை துன்புறுத்துவது, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட குடிமக்களைப் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்வது, பொருளாதாரக் குற்றம் என்ற பெயரில் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவது போன்ற செயல்களை இந்த அரசு செய்து வந்தது. இன்று  *விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி சாதாரண வெற்றியல்ல.* சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

*செவ்வானம்*

No comments:

Post a Comment