ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களின் திகிலும் நெகிழ்ச்சியும் கொண்ட உணர்ச்சி பூர்வமுமான ஓர் அனுபவப் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க விரும்புபவர்கள் அவசியம் அறிய வேண்டிய செய்தி.
எனது பழைய ஆல்பத்திலிருந்து.
1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளரால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியிலும் வட மாநிலங்களிலும் வன்முறை வெடித்தது. சீக்கிய மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அன்று நான் என்னுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சியிலிருந்த நண்பர்களுடன் டில்லியிலிருந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாந்தா என்ற மாவட்டத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்று சில வன்முறைகளை கண்ணெதிரே பார்க்க நேர்ந்தது.
அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறை என்னை மிகவும் வருத்தியது. உத்திரப்பிரதேச கிராமப்புற பயிற்சி முடிந்து மசூரி வந்து சேர்ந்தோம். ஆனால் டில்லியிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்த கட்டற்ற வன்முறைச் சம்பவங்கள் உறுத்திக் கொண்டே இருந்தது.
எனது சீக்கிய நண்பர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இணக்க உணர்வின் வெளிப்பாடாக நான் சீக்கியர்களின் தலைப்பாகையை சில நாட்கள் அணிந்து வகுப்பிற்கு சென்று வந்தேன். கடைத்தெருவிற்கும் தலைப்பாகை அணிந்து சென்றேன்.
இந்தியா ஒரு மழைக்காடு.
பன்மியமே அதன் அடித்தளம்.
முந்தைய பதிவின் தொடர்ச்சி.
----------------------------------------------------
பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டார் என்ற தகவல் கசிந்தபோது எங்களது பேருந்து பழைய டில்லி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. டேராடூனிலிருந்து இரவு ரயிலில் வந்து சேர்ந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தினர் அறைகளில் குளித்து ரெடியானோம். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாந்தா என்ற இடத்திற்கு செல்வது எங்களது பயணத்திட்டம்.
பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வானொலி செய்தி கூறினாலும் "அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்ற தகவல் கசிந்து விட்டது போலவே தோன்றியது. ரயில்நிலையம் பகுதியில் ஏற்கனவே பதட்டம் தொற்றிக்கொண்டது.
இந்தச் சூழ்நிலையில் தான் டில்லியை விட்டுக் கிளம்பினோம். சிறிது நேரத்தில் பிரதமரின் மரணச் செய்தி பரவிவிட்டது.
மறக்கமுடியாத பஸ் பயணம் அது. டில்லியில் இருந்து பாண்டா என்ற இடம் 600 கி.மீ. கான்பூர் வழியாக போக வேண்டும். கான்பூர் வரைக்கும் அனைவருக்கும் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தான் நினைவு. டில்லியிலிருந்தே பஸ்ஸில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். வழியெல்லாம் சிறு சிறு நகரங்களிலும் பதட்டமாக கூட்டம் கூட்டமாக மக்கள் காணப்பட்டார்கள். "கட்டாயம் கலாட்டா இருக்கும் கல்வீச்சு இருக்கும்" என்று டிரைவர் வேறு இடையிடையே பீதியை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார். எங்கள் குழுவில் சீக்கியர்கள் இரண்டு பேர் இருந்தனர் என்பது எங்களுக்கு கவலையாக இருந்தது.
கான்பூர் சென்ற போதே எங்கும் பதட்டம் உச்சத்தில் இருந்தது. அங்கு ஒரு கடையில் சாப்பிடும் போதே பதட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. சீக்கியர்களின் கடைகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டோம்.
அவசரம் அவசரமாக பாந்தா சென்று அங்கிருந்து சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜீப்களில் பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பப்பட்டோம். கிட்டத்தட்ட 12 முதல் 14 மணி நேரம் வரை பயணம் செய்ததாக நினைவு.
எங்களுக்கு உரிய கிராமத்தை அடைந்து நாங்கள் ஐந்து பேர் அந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தை ( அங்கு தான் தங்க வேண்டும்) அடைந்தபோது நள்ளிரவாகி விட்டது. எங்களுடைய இந்த ஐவர் குழுவில் ஒரு சீக்கியர் இருந்தார்.
குடிமைப் பணிகளில் சேரும் பயிற்சி அதிகாரிகளுக்கு இந்திய கிராமங்களை அங்குள்ள வாழ்க்கையை அறிமுகம் செய்வது தான் இந்த பயணத்தின் நோக்கம். கிடைத்த இடத்தில் தங்குவதிலிருந்து கழிப்பறை அற்ற தங்குமிடம் போன்ற சூழல்களையும் சமாளிக்க வேண்டும் என்பது நோக்கம். பெருநகரங்களில் இருந்து வந்த கான்வென்ட்காரர்களுக்கு இது புதுமையாக இருக்கும். கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களுக்கு பழகியதாக இருக்கும்.
மறுநாள் விடிந்து வெளியே வந்த போது தான் அந்த ஊர் "எப்படியாப்பட்ட இடம்" என்பது தெரிந்தது. காலைக்கடன் கழிக்கச் செல்பவர்கள் கையில் செம்பில் தண்ணீர் கொண்டு செல்வதோடு அவர்களில் சிலர் இன்னொரு கையில் பெரிய துப்பாக்கியை கொண்டு செல்வதைப் பார்த்து ஆடிப்போய் விட்டோம். அது ஒரு "ஏழரையான இடம்" என்பது உடனே புரிந்து விட்டது. அந்தப் பகுதியில் எப்போதும் வன்முறை நடக்கும் என்றும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள துப்பாக்கியோடு அலைவது சர்வசாதாரணம் என்றும் சொன்னார்கள்.
அன்று மாலை அந்த ஊரிலுள்ள ராதாகிஷன் ( ராதாகிருஷ்ணன் தான்) கோயிலுக்கு போகலாம் என்று உள்ளூர் வருவாய்த்துறை ஊழியர் ( ஆர்.ஐ) ஐடியா கொடுத்தார். ஏற்கனவே ஊர்த்தலைவரை சந்தித்துவிட்டோம். அவருக்கு பக்கத்தில் இரண்டு பேர் துப்பாக்கியோடு நின்றார்கள். ஊர்க்காரர்களையும் சந்திக்கலாம் என்று நினைத்து கோயிலுக்குப் போனோம். ஆரத்தி காண்பித்தார்கள். அப்போது எங்களுடன் இருந்த சீக்கிய நண்பரும் இன்னொருவரும் கோயிலில் விற்கப்பட்ட "பேடா" எனப்படும் ( பால் கோவா துண்டு மாதிரி) பிரசாதத்தை வாங்கி சாமிக்கு படைத்துவிட்டு அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்கள். நானும் ஒரு துண்டு சாப்பிட்டேன்.
பிறகு அனைவரும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டோம். இரவு பதினொரு மணிக்கு மேல் திடீரென்று யாரோ கதவை தட்டும் சப்தம். திறந்து பார்த்தால் உள்ளூர் பள்ளி ஆசிரியர்.அவர் ஏற்கனவே எங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் கொண்டு வந்தது செய்தி அல்ல குண்டு!
எங்களுடன் இருந்த சீக்கியரை எப்படியாவது வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டோம். ஊர்க்காரர்கள் நள்ளிரவில் வந்து அவரை தாக்கப்போகிறார்கள். இன்று கோயிலில் அவர் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடினாராம். அதனால் ஊர்க்காரர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்றார் அவர். எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. பெரிய ஆபத்து வருகிறது என்று அந்த ஆசிரியர் பீதியை கிளப்பினார். நாங்கள் உடனே என்ன செய்வது என்று யோசித்தோம்.
அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு நம்மில் சிலர் ஊருக்குள் போய் அவர்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சீக்கிய நண்பரை யார் கண்ணிலும் காட்டக்கூடாது என்று அவருக்கு காவலாக ஒருவரை வைத்து விட்டு அந்த ஆசிரியருடன் நானும் எனது நண்பர்கள் இருவரும் கிளம்பினோம்.
கும்மிருட்டாக இருந்தது. எனக்கு இந்தியில் நாலு வார்த்தை கூட பேசத் தெரியாது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்த நான் சென்றேன்! என்னுடன் வந்தவர்கள் நன்றாக இந்தி பேசுவார்கள்.
நேராக ஊர்த்தலைவரையே பார்த்து விடுவது என்று முடிவுசெய்து அந்த ஆசிரியருடன் அவர் வீட்டுக்கு போனோம். அவர் தூங்கவில்லை. வெளியே கட்டிலில் உட்கார்ந்து இருந்தார். அப்போதும் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்றார்கள். நாங்கள் நேரடியாக விஷயத்திற்கு வந்தோம்.
அந்த ஆசிரியர் ஊரில் நடக்கும் பேச்சு பற்றி சொன்னார். ஆனால் அது அந்த ஊர்த்தலைவருக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் போலத் தோன்றியது. "அந்த சர்தார் ஏன் இனிப்பு வினியோகம் செய்தார்" என்று அவர் கேட்டார். அதனால் தான் இளைஞர்கள் கோபமாக இருப்பதாக கூறினார்.
என் கூட வந்தவர்களுக்கு இந்தி தெரியும் என்றாலும் அவர்கள் இறங்கிப் பேசாமல் இருந்ததால் அவர்களை மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டு படபடவென்று பேச ஆரம்பித்தேன். எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடன் அடுத்து அடுத்து மனதிற்கு வந்ததை எல்லாம் சொன்னேன். பொய்களும் கூட. பொய்மையும் வாய்மை தானே நன்மை பயக்கும் எனில்.
அந்த சீக்கிய பயிற்சி அதிகாரியின் அப்பா பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ என்று ஆரம்பித்தேன். திடீரென்று மனதிற்குள் தோன்றிய இந்தக் கற்பனையை வார்த்தைகளாக்கினேன். நீங்கள் அவரை தப்பாக புரிந்து கொண்டீர்கள். பஸ்ஸில் வரும்போது இந்திராகாந்தியின் மரணம் குறித்து அதிகம் வருந்தியவர் அவர் தான். அந்த இனிப்பு பேடாவுக்கு காசு கொடுத்தது நாங்கள் தான் அவர் சும்மா வழங்கியிருக்கிறார் என்று ஏதேதோ சொன்னேன். எனது நண்பர்கள் அதை இந்தியில் சொன்னார்கள்.
அந்த ஊர்த்தலைவர் ஏதோ இந்தியில் சொன்னார் எனக்கு விளங்கவில்லை. துப்பாக்கியோடு அவர்கள் நிற்பதை பார்த்தால் எனக்கு "ஷோலே" படம் தான் ஞாபகத்திற்கு வந்தது. பேசிக்கொண்டு இருக்கும்போதே அவருடைய ஊர்க்காரர்கள் போய் தாக்கி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. எனது நண்பர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு திடீரென்று அந்த ஊர்த்தலைவரின் காலைத் தொட்டு வேண்டுகோள் விடுத்தேன். எனது நண்பர்களும் அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்டார்கள். அது "ஒர்க் அவுட்" ஆனது போலத் தோன்றியது.
அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர். தைரியமாக பேசினார். "அதிகாரிகள் சம்பந்தப்பட்டது பெரிய பிரச்சினை ஆகிவிடும்" என்று எடுத்துச் சொன்னார். ( இந்த ஆசிரியர் அதன் பிறகு கொஞ்ச நாள் என்னோடு லெட்டர் தொடர்பில் இருந்தார்)
காதை திருகிக்கொண்டே யோசித்த ஊர்த்தலைவர் "அப்படியானால் அந்த சர்தாரை இந்த ஊரில் இருந்து உடனே அனுப்பிவிடுங்கள். இங்கே இருப்பவர்கள் ஒரு மாதிரியானவர்கள்" என்று அனுமதி கொடுத்தார்.
உடனே அந்த ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளில் அவரை கொண்டு போவதாக அனுமதி கேட்டார். ஊர்த்தலைவர் "சரி" என்றார். நாங்கள் தலைதெறிக்க அறைக்கு ஓடி வந்தோம். அந்த சீக்கியர் பயத்தில் உறைந்து போய் இருந்தார்.
அந்தப் பகுதி தாசில்தார் உள்ள சிறு நகருக்கு அந்த ஆசிரியர் அவரை அந்த நள்ளிரவில் அழைத்துச் சென்றார். அவருக்கும் பயமாக இருந்தது.எங்களுக்கும் பயமாக இருந்தது. ஆனாலும் அனுப்பிவைத்தோம். அப்போதெல்லாம் மொபைல் போன் ஏது. அவர் தாசில்தாரை பார்த்து அங்கிருந்து மாவட்டத் தலைநகருக்கு ஜீப்பில் சென்று கலெக்டரிடம் தஞ்சம் புகுந்தது எல்லாம் மறுநாள் தான் தெரியவந்தது. இரவெல்லாம் தூக்கம் இல்லை.
இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நாங்கள் மசூரி அகாடெமிக்கு திரும்பிய போது மற்ற குழுக்களில் வெவ்வேறு மாநிலங்களுக்கு/ மாவட்டங்களுக்குச் சென்ற பயிற்சி அதிகாரிகள் இதுபோன்ற பல அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் வந்து சேர்ந்தனர்.
சில இடங்களில் சீக்கிய பயிற்சி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த பஸ்கள், ஜீப்கள் தாக்கப்பட்டுள்ளன. சிலர் துரத்தியவர்களிடமிருந்து ஓடித் தப்பியிருந்தனர். அவர்கள் அனைவரின் முகத்திலும் அச்சமும் அதை விட கோபமும் அள்ளிப் பூசியிருந்தது.
அப்போது தான் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பிற்கு செல்வது தெருவில் நடப்பது என்ற யோசனை எனக்குத் தோன்றியது. எனது இன்னொரு நண்பரும் இதில் சேர்ந்து கொண்டார்.
சீக்கியர் தலைப்பாகையுடன் நான் இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்குள் ஏதேதோ எண்ணங்கள்.
அதனால் தான் இந்தப் பதிவு.
No comments:
Post a Comment