*நாளொரு கேள்வி: 06.12.2020*
*இன்று டாக்டர் அம்பேத்கர் 64 வது நினைவு நாள்*
இன்று நம்மோடு கவிஞர், கட்டுரையாளர் *பெரணமநல்லூர் சேகரன்*
####################
*இருள் விலக்கிய சுடர்*
*கேள்வி:*
அம்பேத்கர் நினைவு நாளில் நம் மனதில் நிற்கும் அவரது பங்களிப்புகள் என்ன?
*பெரணமநல்லூர் சேகரன்*
"அம்பேத்கர் பற்றி உங்களுக்கு மனதில் தோன்றும் பிம்பம் என்ன?” என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், *‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்,* என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழுக்குள் (அது தங்கச் சிமிழேயானாலும்) அடைத்துவிட முடியாது. அவர் அரசியல் சாசனத்தை வடிவமைத்த மகத்தான பணியை செய்தார். ஆனால் அவரின் பன்முக பங்களிப்புகள் மிகவும் விரிந்தவை.
காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் *தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள்.* மனித சமூகத்தின் மேம்பாடு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே வறுமையின் கொடுமையை எதிர் கொண்டவர்கள். அம்பேத்கர் அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என பல துறைகளில் விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் *ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில்* முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அம்பேத்கர் அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், *கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக* இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூகமாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். முன்பே சொன்னதுபோல் காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, *வரலாறு குறித்த புதிய பார்வைகளை* உருவாக்கியது. மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கம் செலுத்தியது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர். அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சி வசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான *சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்* ஆகிய அளவுகோலைக் கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார். ‘’உலகில் உள்ள எல்லா மதங்களும் இறைவன் மனிதனைப்படைத்தார் என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் *‘இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்றுசொல்கிறது”* என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். (மற்ற மதங்களும் ஒடுக்குமுறைக்கு துணை நின்றுள்ளன. எனினும் இந்தியச் சூழலின் பிரத்தியேக தன்மையை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி விளக்கினார்.)
அம்பேத்கர் *சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம்* ஆகிய கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.
நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’ வில் *பெண்களுக்கு சொத்துரிமை* உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. *அம்பேத்கரும் பதவி விலகினார்.* பதவி விலகியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.
கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. *அரசியல் கல்வியை* அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். *“ஓர் அடிமைக்கு அவர் முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவர் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவார்”* என்றார். இந்தியச் *சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான்.* “தாம் இழிவானவர், அடிமை” என்பதை அவர்களையே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதி அமைப்பின் தந்திரம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்தினார்.
//இப்படியான அவரின் தீர்க்கமான, தொலை நோக்குடனான கருத்தியல் பங்களிப்பும், களச் செயல்பாடும் நம் நினைவுகளில் அழியாமல் நிற்கின்றன. இத்தகைய பன்முக பங்களிப்பு நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் என்றும் மிளிர்ந்து கொண்டே இருக்கும்.//
****************
*செவ்வானம்*
ஓவியம் : திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்
அண்ணலின் நினைவினைப் போற்றுவோம்
ReplyDelete