கடந்த மாத மத்தியில் வாசன் ஐ கேர் நிறுவனர் இறந்து போனார். அந்த மரணம் மர்ம மரணம் என்றே காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மிகக் கடுமையான நிதிச் சிக்கலில் தவித்ததாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அந்த நிறுவனத்தினைப் பற்றிய என் மதிப்பீட்டை பல வருடங்கள் முன்பே எழுதியிருந்தேன். 19,செப்டம்பர், 2013 அன்று எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
அகலக் கால் வைத்ததின் விளைவு இப்போதைய வீழ்ச்சி.
" நாங்க இருக்கோம் " – எவ்வளவு நாள் இருப்பீங்க?
சமீபத்தில் எனது மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்து விட்டது. கையிருப்பில் வேறு கண்ணாடியும் இல்லை. கைவசம் இருந்தது இப்போது உள்ள பவருக்கு முந்தையது. அதை அணிந்தாலும் சிரமம். போன வருடம் கண் பரிசோதனை வேறு செய்து கொள்ளவில்லை. ஆகவே புதிதாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். வழக்கமாக பரிசோதனை செய்து கொள்ளும் சி.எம்.சி மருத்துவமனைக்கு போனால் பத்து நாட்களுக்குப் பிறகே மருத்துவரைப் பார்க்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கும் நிலைமை. எனவே வேறு வழியே இல்லாமல் நாங்க இருக்கோம் என்று விளம்பரம் செய்யும் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த மருத்துவமனையின் செயல்பாட்டிலோ, சிகிச்சை முறையிலோ எந்த குறைபாடும் கிடையாது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் போன வேலை முடிந்து புதிய கண்ணாடிக்கான சீட்டோடு வெளியே வந்து விட்டேன். ஆனால் அந்த ஒரு மணி நேரமும் அந்த மருத்துவமனையின் செயல்பாட்டையும் நடைமுறையையும் சற்று உன்னிப்பாக கவனித்ததால் ஏற்பட்ட கவலைதான் இந்த பதிவிற்கான நோக்கம்.
யாரையும் அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான மருத்துவர்கள், ஊழியர்களை நியமித்திருப்பது நல்ல விஷயம். ஆனால் பெரும்பாலானவர்கள் கிட்டத்தட்ட சும்மாவேதான் உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளின் வருகை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர்களுக்கும் வேலை இருக்கும். வேலை கிடைக்காத பிரச்சினை உள்ள காலத்தில் அதிகமானவர்களுக்கு வேலை கொடுப்பதை பாராட்டினாலும் இன்னொரு விஷயம் யோசிக்க வைத்தது.
கண் பரிசோதனைக்கான கட்டணம் என்பது குறைவு. எங்கே அவர்களுக்கு வருமானம் வரும் என்றால் அது கண்ணாடி விற்பனையில்தான். எனக்கு பரிசோதனை செய்த மருத்துவர் கூட என்னை வெளியே அனுப்பும் போது “ நம்மிடமே ஆப்டிகல்ஸ் உள்ளது. அங்கேயே கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள் “ என்று மறக்காமல் சொல்லி அனுப்பினார்.
இங்கேதான் வில்லங்கம் இருக்கிறது. கண்ணாடிக்கான பிரேம் காண்பிக்கும்போதே குறைந்தபட்சம் மூன்றாயிரம் ரூபாய் என்று ஆரம்பித்து வரிசையாக கண்ணாடி, கூலிங், என்றெல்லாம் சேர்த்து ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும் என்று பட்டியல் போட்டார்கள். கண்ணாடிக்கான சீட்டை வாங்கிக் கொண்டு பணத்தை எடுத்துக் கொண்டு பிறகு வருகிறேன் என்று சொல்லி வெளியே வந்து வேறு ஒரு கடையில் ஆயிரத்து ஐநூறு ரூபாயில் மொத்த வேலையையும் முடித்து விட்டேன். நான் மட்டுமல்ல அனேகமாக பெரும்பாலானவர்கள் அங்கே கண்ணாடி வாங்காமல் வெளியே வேறு கடைகளில்தான் வாங்குகிறார்கள்.
கல்லூரியில் கிடைத்த அக்கவுண்டிங் புத்தி கொஞ்சம் கணக்கு போடத் தூண்டியது. நகரின் முக்கியப் பகுதியில் அதிக வாடகைக்கு கட்டிடம், குளிர்சாதன வசதி, அதற்கான மின் கட்டணம், ஏராளமான ஊழியர்கள், அவர்களுக்கான ஊதியம் என்று பார்க்கிறபோது அவற்றை சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வருமா என்பது சந்தேகம். சந்தையைப் பிடிப்பதற்கு செய்யப்பட்டுள்ள இந்த வசதிகள் எல்லாம் சில காலத்திற்கு இருக்கும். தொடருமா?
ஒரு குறிப்பிட்ட கிளையில் போதிய வருமானம் இல்லையென்றால் அதை மூட எந்த தனியார் நிர்வாகமும் தயங்காது. மருத்துவர்களுக்கு பெரிய பிரச்சினை கிடையாது. இந்த மடம் இல்லையென்றால் இன்னொரு மடம். தொழில் நுட்பப் பணியாளர்களுக்கும் அது போலத்தான். ஆனால் மற்ற சாதாரண ஊழியர்களின் நிலை?
நான் பார்த்தவரை வேறு வேலைகளை விட்டு இங்கே வந்து சேர்ந்தவர்கள் அதிகம். அவர்களுக்குத்தான் மாற்று வேலைகள் கிடைப்பது கடினம். தேவைக்கு குறைவான ஊழியர்களை நியமித்து இருப்பவர்கள் மீது சுமையேற்றுவதும் தவறு. அதிகமானவர்களை நியமித்து பின்பு கட்டுப்படியாகாமல் பாதியில் நிறுத்துவதும் தவறு. சரியான திட்டமிடல் இல்லாமல் இப்படி பல நிறுவனங்கள் பல ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. அப்படி நேராமல் இருந்தால் நல்லதுதான்.
No comments:
Post a Comment