*நாளொரு கேள்வி: 21.12.2020*
*தொடர் எண்: 204*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
####################
*கர்நாடக முதல்வரின் கார்ப்பரேட் பாசம்*
*கேள்வி:* பெங்களூரு விஸ்ட்ரான் நிறுவனத்தில் என்ன பிரச்சினை? கர்னாடகா பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா தொழிலாளர்களைக் கண்டித்துள்ளாரே!
*க.சுவாமிநாதன்*
இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அறிக்கையின் ஒரு பகுதி. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய இதன் தகவல்கள் உதவும்.
"பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் கம்பெனியின் தொழிற்சாலையில் நான்கு மாதங்களாக அதன் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமல்ல, அவர்களை கூடுதல்நேர ஊதியம் எதுவும் இல்லாமல் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்தித்தும் இருப்பதன் விளைவாக அங்கே வேலைசெய்துவந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். *பன்னாட்டு ( தைவான்) நிறுவனமான இது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். இங்கே பணிபுரியும் பத்தாயிரம் தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிரந்தரமற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களாவார்கள்.* பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் சட்டங்கள் எதையும் மதிப்பதே இல்லை. இந்த நிலையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தபின்பு, இவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதற்கு வெளிப்படையாகவே வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. விஸ்ட்ரான் நிறுவனம் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாக *ஆப்பிள் கார்ப்பரேஷன் நிறுவனமே, குற்றம்சாட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் போராடும் தொழிலாளர்களைக் கண்டனம் செய்திருப்பதும், விஸ்ட்ரான் கம்பெனியை ஆதரித்திருப்பதும் விசித்திரமாக இருக்கிறது.* தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை ஏவியிருப்பதற்கும், பலரையும் கைது செய்திருப்பதற்கும் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டைக் கவர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பதை மோடி அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்."
இனி இந்து பிசினஸ் லைன் (21.12.2020) தலைப்பு செய்திக்கு வருவோம். *"Apple puts Wistron on watch"* என்பது தலைப்பு. ஆப்பிள் விஸ்ட்ரான் உடனான புதிய வணிக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்திருக்கிறது. *"எங்கள் மிக முக்கியமான நோக்கம், எல்லா தொழிலாளர்களும் கௌரவத்தோடும், மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஊதியம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்"* என்று ஆப்பிளின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
முதலில் டிசம்பர் 12 அன்று தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு 437 கோடி ரூபாய் சேதத்தை உண்டு பண்ணி விட்டதாகக் குற்றம் சாட்டிய விஸ்ட்ரான் நிறுவனம் இப்போது சேதம் ரூ 50 கோடிகள் என மதிப்பீட்டில் *பெரிய பல்டி* அடித்துள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனமும், சில தவறுகள் நடந்து விட்டதாகவும், ஊழியர்கள் சிலருக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதன் விசாரணைக் குழு இம் முடிவுகளுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் *" இந்த தவறுகளுக்கு ஆழமாக வருந்துகிறோம். இதற்காக எங்கள் ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் "*
இப்படி மன்னிப்பு கேட்டுள்ள விஸ்ட்ரான் நிர்வாகம் இன்னும் பல தொழிலாளர்களை வேலையில் சேர அனுமதிக்கவில்லை என்பது தனிக் கதை.
இதை விட என்ன வேண்டும் கர்நாடகா முதல்வருக்கு.... ஆனாலும் கர்நாடகா முதல்வரின் கண்களுக்கு இந்த செய்திகள், அறிக்கைகள் கண்களில் படவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்! *கார்ப்பரேட் பாசம் கண்களை மறைக்கிறது!*
******************
*செவ்வானம்*
கார்ப்பரேட் பாசம் மட்டும் காரணமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்தியாவின் ஊழல் முதல்வரான யெட்டியை அந்த நிறுவனம் நன்றாகவே கவனித்திருக்கும். கார்ப்பரேட் பாசத்தோடு காசு வாங்கிய பாசமும் சேர்ந்திருக்கும்.
No comments:
Post a Comment