Tuesday, December 29, 2020

தரகுப்புயலைக் கவனிச்சுக்குங்க ரஜினி.

 


அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையை பார்த்த போதே 31.12.2020 அன்று ரஜினி அரசியல் கட்சியை அறிவிக்கப் போவதில்லை என்பது தெரிந்து போனது. இன்றைய அறிக்கை மூலம் ரஜினிகாந்த் அதனை உறுதிப்படுத்தி விட்டார்.

 தமிழக அரசியலுக்கு தேவையில்லாத ஆணி ரஜினிகாந்த். எனவே அவரின் முடிவு வரவேற்கத்தக்கது. எழுபதாவது வயதில் மீண்டும் சப்பாணி- பரட்டை கூட்டணி அமையாததுதான் வருத்தமாக இருக்கிறது.

 உங்கள் அறிக்கையைப் பற்றி அறிந்த உடனே நான் மிகவும் கவலைப்பட்டது நம்ம தரகுப்புயல் தமிழருவி மணியன் ஐயா பற்றிதான்.

 தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றி கவலை இல்லை. அவர் பாஜகவில் இருந்து டெபுடேஷனில் வந்தவர். பழைய பணிக்கே திரும்பி விடுவார்.

 எல்லாவற்றையும் நீங்கள் மாற்றி விடுவீர்கள் என்று குதித்துக் கொண்டிருந்த மூமூமூமூமூமூத்த்த்த்த்த்த்தததத பத்திரிக்கையாளர் பற்றியும் கவலை இல்லை. அவருக்கு உங்களிடமிருந்தும் வந்திருக்க வேண்டிய கூடுதல் வருமானம் (அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனால் உங்களிடமிருந்து பத்து பைசா கூட பெயறாது என்பது வேறு விஷயம் ) வராது என்பதற்கு மேல் வேறு இழப்பு இல்லை.

 ஆனால் நம்ம தர்குப்புயல் ஐயா நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!

 உங்க அறிக்கையிலேயே சொன்னது போல உங்களுக்காக எத்தனையோ முறை அசிங்கப்பட்டவர் அவர்தான். நீங்க வருவீங்க, வருவீங்கன்னு கூவிக் கிட்டே இருந்தவரும் அவருதான். நீங்க கட்சி தொடங்குவேன்ன்னு சொன்ன அன்னிக்கை உங்க இடது பக்கத்தில நின்ன அவரோட முகத்தில தெரிஞ்ச தேஜஸை, அந்த புன்னகையை, வெற்றிப் பெருமிதத்தை கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!

 என்னவெல்லாம் அவரு கனவு கண்டிருப்பாரு! நீங்க முதல்வரானா மந்திரியாகலாம், சிவப்பு விளக்கு வைச்ச இன்னொவா காரில் போகலாம். கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அமைச்சர் பங்களாவில் குடியேறலாம், தினசரி தொலைக்காட்சிகளின் மைக் முன்பாக நின்று பேசலாம். காந்தியை கட்டிக் கொண்டு அழாமல் உங்கள் புகழ் பாடி சில்லறையை தேற்றலாம் என்று எத்தனை திட்டம் போட்டிருப்பார்!

 ஒற்றை அறிக்கை மூலம் அவரது அனைத்து கனவுகளையும் தகர்த்து விட்டீர்கள். பாவம் வயதான மனிதர், இனி பிழைப்புக்கு என்ன செய்வார்?

 அதனால் உங்களுக்காக ஏச்சும் பேச்சும் வாங்கிக் கட்டிக் கொண்ட அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.

 உங்களுக்கு சில ஆலோசனைகளை மட்டும் முன்வைக்கிறேன்.

 கிரீன்வேஸ் ரோடு பங்களா மாதிரி இல்லாவிட்டாலும் ஏதாவது டபிள் பெட் ரூம் ஃப்ளாட்டாவது இருபத்தி எட்டாவது மாடியில் வாங்கிக் கொடுங்கள்.

 சிவப்பு விளக்கு வைத்த இன்னோவா காருக்கு பதிலாக குறைந்த பட்சம் ஒரு டாடா நானோ காராவது வாங்கிக் கொடுங்கள்.

 அமைச்சரின் ஊதியத்தை தர முடியாவிட்டாலும் ஒரு எம்.எல்.ஏ பெறுகிற பென்ஷனையாவது ஒவ்வொரு மாதமும் கொடுங்கள்.

 சத்யராஜ் படம் மல்லு வேட்டி மைனர் படத்தில் தன் தந்தை சென்று வந்த பெண்களுக்கெல்லாம் சத்யராஜ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் அனுப்புவது போல ஒரு காட்சி வரும். ஒரு மைனருக்கு உள்ள இரக்கம் உங்களிடம் இருக்காதா என்ன?

 “டெம்போ எல்லாம் வச்சு கடத்தியிருக்கேன், பார்த்து போட்டுக் கொடுங்க” என்று செந்தில் போல அவர் வாய் விட்டு கேட்க மாட்டார்.

 நீங்களாகவே கருணையோடு பார்த்து செய்யுங்கள் ரஜினி.

தயவு செய்து தரகுப்புயல் ஐயாவை கை விட்டு விடாதீர்கள்.

டெம்போ வைக்காமலே உங்களை அரசியலுக்கு கடத்த நினைத்தவர் அவர்!

2 comments:

  1. Ennadhu Tamil naatin system administrator, arasiyalukku Vara maataaraa? Appuram yaaru system'tha upgrade Pannu vaanga?

    ReplyDelete