Monday, December 14, 2020

தோழர் போஸ் - 98

 



தோழர் சந்திர சேகர போஸ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் முக்கியமானவர், பொதுச்செயலாளராக, தலைவராக நீண்ட காலம் சங்கத்தின் பொறுப்பில் தொடர்ந்தவர். இப்போதும் அகில இந்திய மாநாடுகளில் பங்கேற்று வழி காட்டுபவர். இன்று 98 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள தோழர் போஸ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முற்றுகை நாவல் எழுதுவதற்கான தரவுகளைப் பெற அவரோடு நேரத்தை செலவழித்ததும், முற்றுகை நாவலை விசாகப்பட்டிணம் அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டதும் எனக்கு வாழ்வில் கிடைத்த அரிய பேறு.




முற்றுகை நாவல் முழுவதும் தோழர் போஸ் அவர்களை மையப் படுத்தியே எழுதியிருந்தேன். அவரைப் பற்றி மூத்த தோழர் ஒருவர் இளைய தலைமுறைக்கு சொல்வதாக இருந்த பகுதி இங்கே

போஸ் பாபுவைப் பார்த்தால் ரொம்பவுமே அமைதியானவராகத் தெரியும். ஆனால் பயங்கரமான உறுதியானவர். ஊழியர்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்று எப்பவுமே யோசிச்சிக்கிட்டு இருப்பவர். ஹிந்துஸ்தான் கம்பெனியில் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகு போனஸ் பிரச்சினை வருது. ட்ரிப்யூனலுக்கு போயிடுது. அந்த காலத்துல எல்லா கம்பெனிகளும் ரெண்டு கணக்கு நோட்டு வச்சிருப்பாங்க. அரசாங்கத்தையும் பாலிசிதாரர்களயும் ஏமாத்தறதுக்காக பொய்யான நஷ்டக் கணக்கு காண்பிக்கிற நோட்டு ஒன்னு. உண்மையான கணக்கு நோட்டு ஒன்னு. கம்பெனி நஷ்டத்துல போறதனால போனஸ் கொடுக்க முடியாதுன்னு ட்ரிப்யூன்லில் கம்பெனி பொய்க்கணக்கை காண்பிக்குது. போஸ் பாபு ரொம்பவுமே ரகசியமாக அக்கவுண்டண்ட் கிட்ட பேசி உண்மையான கணக்கு நோட்டை எடுத்துடறாரு. ஒரு ப்ரெண்டோட காமெரா மூலமா அதை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலில் சமர்ப்பித்து கம்பெனி பொய் சொல்வதை நிரூபிச்சிடறாரு.

 ட்ரிப்யூனலில் இருந்த நீதிபதியே கடுப்பாயிடறாரு. இப்படி கம்பெனிக்கு துரோகம் செய்யறவங்களை வேலையில் வச்சுக்கக் கூடாது. டிஸ்மிஸ் செய்யுங்க என்று அவரே சொல்றாரு. அப்போ கூட கொஞ்சமும் கலங்காமல் என் மீது என்ன வேணா நடவடிக்கை எடுங்க. ஆனா உண்மையான கணக்கு நோட்டுப்படி லாபம் நிறையவே இருக்கு. போனஸை கொடுக்கச் சொல்லி உத்தரவு போடுங்க என்று சொல்ல நீதிபதி ஆடிப் போயிட்டாரு. போஸ் பாபுவை டிஸ்மிஸ் செஞ்சாங்க. ஆனா கடுமையான போராட்டம் நடந்ததுக்கு அப்புறமா அவர் மறுபடியும் வேலைல சேர்ந்தார்.



No comments:

Post a Comment