Tuesday, October 2, 2018

காந்தி 150 - ஏ.ஐ.ஐ.இ.ஏ பார்வையில்


இன்றைய  காலத்திற்கும் பொருத்தமாய் காந்தி . . .
-         தோழர்  அமானுல்லா கான்,
                                                                                                                                                                                                                                         தலைவர்,
                              அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.



மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை சர்வதேச வன்முறை எதிர்ப்பு  தினமாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரிக்கிறது.  ஏகாதிபத்தியத்தால் தூண்டப்படும் போர்களாலும் பிராந்திய வன்முறைகளாலும் உலகம் சீரழிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தாண்டு இத்தினம் வருகிறது. ஏகாதிபத்தியத்தால் ஆட்டுவிக்கப்படும் போர் விளையாட்டுக்களின் களமாக ஒட்டு மொத்த மத்திய கிழக்கு பகுதியும் மாறி விட்டது. தங்களின் தாயகத்திற்காக பாலஸ்தீனியர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். மகாத்மாவின் சொந்த தேசமோ கலவரங்கள் நிறைந்ததாயுள்ளது.  அஹிம்சையையும் சத்யாகிரகப் போராட்டத்தையும் போதித்த அந்த மகானின் போதனைகளை நினைவு கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்வதுதான் அவருக்கான உரிய  அஞ்சலியாக இருக்கும்.

இந்தியர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள விளிம்பு நிலை மக்களின் எதிர்காலத்தையும் கூட வடிவமைத்த மிக முக்கியமான ஆளுமையாக காந்தி திகழ்கிறார். நாடுகளின் எல்லைகள் கடந்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால்  ஒரு முக்கியமான அடையாளமாக அவர் திகழ்வதில் வியப்பேதுமில்லை. 1869 ல் பிறந்த மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின்   வாழ்வு  மூன்று கண்டங்களில் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களில் பங்கேற்பதும் வழி நடத்துவதுமாக அமைந்திருந்தது. மனித குல வரலாற்றில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆப்பிரிக்க நாடுகள் மீது நிகழ்த்திய போர்களை பார்த்தவர் அவர். இரண்டு உலகப் போர்கள் மூலம் நிகழ்ந்த கொடூரங்கள், பேரழிவுகள், மரணங்கள் ஆகியவற்றையும் இத்துணைக்கண்டத்தில் பிரிவினையின் போது பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டதையும் கண்ணுற்றவர்.  இப்போர்களாலும் மோதல்களாலும் மனித குலம் அடைந்த துயரங்ககளே தனது இலக்கை அஹிம்சையினாலும் சத்யாகிரத்தாலும் அடைய வேண்டும் என்ற உறுதியை அவருக்கு அளித்தது.

1915 ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அவர் குறுகிய காலத்திலேயே விடுதலை இயக்கத்தின் தலைமைப்ப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். காந்தியின் வருகைக்கு முன்பு விடுதலை இயக்கத்தின் வீச்சு சுருங்கியே இருந்தது.  தலைமை என்பது அடிப்படையாக உயர் நடுத்தர மக்களிடமே இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிகப் பெரிய மக்கள் திரள் பங்கேற்பாக காந்தி விடுதலை இயக்கத்தை மாற்றினார். இருநூறு ஆண்ட காலணி ஆதிக்கத்திற்கு எதிராக அனைத்து மதத்தினர், மொழியினர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் திரண்டனர். தேச விடுதலை குறித்த கருத்துக்கு ஒரு வடிவமளித்த அவர் ஒட்டு மொத்த உலகிற்குமே எதிர்ப்பு, கண்டனம், அமைதி வழி உடன்பாடு ஆகியவை குறித்த படிப்பினைகளை அளித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளேயே காந்தி ஒரு கொலைகாரனின் தோட்டாக்களுக்கு இரையானார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தன்னுயிரையே அர்ப்பணித்த தியாகியானார். முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் போக்கோடு செயல்படுபவர் என்று கருதி கொலைகாரன் நாதுராம் கோட்சேவும் அவனுக்கு பின்புலமாக இருந்த அமைப்புக்களும் காந்தியை வெறுத்தனர். தேசப் பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்று அந்த அமைப்புக்கள் அவரை அநியாயமாக வசை பாடினர். இன்று காந்தியை கொலை செய்தவன் கொண்டாடப்பட்டு கோயில்களும் கூட அவனுக்கு கட்டப்படுகின்றன.

கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்த வித இயக்கரீதியிலான தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ் பலவீனமான சில முயற்சிகள் செய்தாலும் வரலாற்றுச் சான்றுகள் வேறு விதமாகவே உள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஏன் பிற்காலத்தில் எல்.கே.அத்வானி கூட காந்தியை தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இன்று இந்துத்துவ அடையாளமாக சித்தரிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான் காந்தியின் படுகொலைக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸை தடை செய்தவர். எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய கடிதத்திற்கு 11.09.1948 அன்று அளித்த பதிலில் சர்தார் படேல் “காந்தி கொல்லப்பட்ட பின்பு ஆர்.எஸ்.எஸ் அதனை கொண்டாடியதையும் இனிப்புக்கள் பரிமாறியதையும்” குறிப்பிட்டு தனது கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.

இன்று மோடி அரசும் வலதுசாரி அடிப்படைவாதிகளும் காந்தியை உயர்த்திப் பிடிப்பது போன்ற தோற்றத்தை அளிக்க முயன்றாலும்,  மோடி அரசு காந்திஜியை தூய்மை இந்தியா இயக்கத்தோடு சுருக்கி விட்டது. முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளித்தரும் மோடி, முதலாளிகளுடனான தனது நெருக்கத்தை காந்திக்கும் பிர்லாவுக்குமான நட்பைச் சொல்லி நியாயப்படுத்துகிறார். இந்த ஒப்பீடு அபத்தமானது, கேலிக்குரியது. “தந்திரமிக்க பனியா” என்றழைத்து காந்திஜியை ஜாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறார் பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா.  காந்திக்கு இதை விட வேறென்ன இழிவு  இருக்க முடியும்?

வெறுப்பரசியல் எங்கும் பரவியுள்ளது. தேசிய அளவிலான விவாதம் என்பது இந்து முஸ்லீம் பிரச்சினையாக சுருங்கி விட்டது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையும் அடித்துக் கொல்வதும்  புதிய நடைமுறையாகி விட்டது. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டது. வருமானம் மற்றும் செல்வாதாரங்களில் உள்ள  சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எதிர்க்கருத்து எனும் ஜனநாயக உரிமை துரோகமாக கருதப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தேசிய உணர்வும் தேச பக்தியும் அராஜகமான முறையில் நடுத்தெருவில் சோதிக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட சூழலில் நம் காலத்திய பற்றியெறியும் பிரச்சினைகளில் மகாத்மா காந்தியின் பார்வை என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

அஹிம்சையும் சத்யாகிரகமும் காந்திஜி நம்பிக்கை கொண்டிருந்த இரு வழிமுறைகள். அவர்  போதித்த, தன் ஆதரவாளர்களை பின்பற்ற வைத்த அஹிம்சை மீது இந்துத்துவ சக்திகள் வெறுப்பைக் கக்கினர். காந்தி அஹிம்சையை பின்பற்றியதன் மூலம் தன் சொந்த மக்களின் ஆண்மைத்தன்மையை அகற்றி விட்டார் என்று ஆர்.எஸ்.எஸ் விமர்சித்தது. மிகக் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்த போதும் அஹிம்சையையும் சத்யாகிரகத்தையும் உறுதியோடு பின்பற்றியதன் மூலம் காந்தி அதிகாரத்தில் இருந்தவர்களை கேள்விக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தார். சக்தி மிக்க எதிரிகளிடம் அவர் பெற்ற தார்மீக வெற்றி இது. இன்று உலகம் வெறுப்பாலும் மோதல்களாலும் சிக்கி தவிக்கிற வேளையில் வன்முறையோ போரோ எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இன்று அவையேதான் பிரச்சினைகளாகவே மாறியுள்ளது. அமைதியான உடன்பாடுகள் மூலம் தீர்வினைப் பெற உலகம் காந்தியின் வாழ்விலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும்.

இந்தியா பல வேற்றுமைகளைக் கொண்ட நாடு என்பதை  அவர் உணர்ந்து கொண்டார். மதத்தில், மொழியில் ,கலாச்சாரத்தில் உள்ள இந்த வேற்றுமைகள் மதிக்கப்பட வேண்டும்.  கொண்டாடப்பட வேண்டும். அனைத்து மத நம்பிக்கை உள்ளவர்களும் இந்த நாட்டிலே அமைதியாக வாழ உரிமை உண்டு என்பதை அவர் தன் ஆதரவாளர்களிடத்தில் வலியுறுத்தினார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது அவரது மனதிற்கு நெருக்கமானது. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறையை அவர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அமைதியாகவும் இல்லை. வன்முறைக்கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளுக்கு அவர் பாத யாத்திரை சென்று அமைதியை நிலை நாட்டவும் நல்ல புரிதல் உண்டாகவும் முயற்சிகள் மேற்கொண்டார். மதவெறியில் நிகழ்ந்த மூடத்தனங்களை முடிவுக்கு கொண்டு வர உண்ணா நோன்புகளும் இருந்தார். அவரது தார்மீக நியாயமும் ஆளுமையும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவின.

முஸ்லீம்களை திருப்திப்படுத்தவும் பாதுகாக்கவுமே காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு “இந்தியாவில் தன் உண்ணாவிரதம் முஸ்லீம்களை கொல்லும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரானது, அதே நேரம் பாகிஸ்தானில் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்லும் முஸ்லீம்களுக்கும் எதிரானது” என்று அவர் பதிலளித்தார். காந்திஜியின் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியோ  அவர் காண்பித்த தைரியத்தையும்  உறுதியையும்  பின்பற்றுவதற்கான அருகதையற்றதாக மாறி விட்டது. காந்திஜியை உயர்த்திப் பிடிப்பது போல நடிக்க  முயல்பவர்கள்தான் மத மோதல்களை நிகழ்த்துபவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்கமளிக்கிறார்கள். காந்தி ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருந்தால் சிறுபான்மையினருக்கும் எதிர்ப்புக்குரல் கொடுப்போருக்கும்  எதிரான வன்முறைகளை தூண்டி விடுகிற அரசுக்கு எதிராக நிச்சயமாக பொங்கி எழுந்திருப்பார்.

எதிர்ப்பு என்பதற்கு புதிய அர்த்தம் கொடுத்தவர் காந்தி. அவர் மீது பல முறை தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதியப்பட்டு சிறைவாசமும் அனுபவித்துள்ளார். சுதந்திர இந்தியா தேசத்துரோகச் சட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று காந்திஜி கூறினார். ஆனால் 72 ஆண்டுகளுக்குப் பின்பும் இச்சட்டம் நீடித்து அரசியல் எதிரிகளையும் அரசோடு முரண்படுவோரையும் துனபுறுத்த பயன்படுத்தப்படுவதே இன்றைய நடைமுறையாகி விட்டது.

இன்றைய இந்தியாவில் எதிர்ப்பு என்பது துரோகமாக கருதப்படுகிறது. அரசின் கொள்கைகளைகளை எதிர்ப்பவர்களும் பெரும்பான்மைக் கருத்துக்களை ஏற்காதவர்களும் தேச பக்தியற்றவர்களாகவும் தேச விரோதிகளாகவும் முத்திரை குத்தப்படுகின்றனர். காந்தியைப் பொறுத்தவரை அனைத்து மக்களுடைய நலம்தான் தேச பக்தி. தேச பக்தி என்பது என்னை பொறுத்தவரை சுதந்திரமும் அமைதியும் நிலவும் நாட்டிற்கான என் பயணத்தின் ஒரு பகுதியே என்று கூறியவர் அவர். அவரது தேசியம் என்பது எப்போதுமே குறுகியது அல்ல. அனைவரையும் உள்ளடக்கியது. உலகளாவிய சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அவர். உண்மையிலேயே அவர் உலகளாவிய தன்மை கொண்டவர்.

தீண்டாமையை ஒழிப்பதில் காந்திஜி போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற இன்னொரு விமர்சனமும் அவர் மீது உண்டு. காந்திஜி நிச்சயமாக தீண்டாமைக்கு எதிரானவர், தீண்டாமையை ஒழிப்பதன் மூலம் இந்துயிஸத்தை  பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். அம்பேத்கர் இது விஷயத்தில் காந்தியோடு முரண்பட்டார். தீண்டாமையை உள்ளடக்கிய ஜாதிய முறையே இந்துயிஸத்தின் அடிப்படை என்றும் ஜாதிகளை ஒழிப்பதன் மூலமே தீண்டாமையையும் ஒழிக்க முடியும் என்றார் அவர். மிக முக்கியமான முரண்பாடுகள் இருந்த போதிலும் இருவரும் மற்றவர் மீது நல்ல மதிப்பு கொண்டிருந்தார்கள். ஜாதிகளை ஒழிக்க அரசியல் சாசன அடிப்படையில் அழுத்தம் அளிக்க அம்பேத்கர் முயன்றார். ஜாதிய பாரபட்சத்திற்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களிடம் நல்ல சிந்தனையை உருவாக்குவதும் அவசியம் என்று காந்தி கருதினார்.  தீண்டாமைக்கு எதிராக 1933 ல் காந்தி நாடு தழுவிய ஒரு பிரச்சாரப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். தீண்டாமையை சட்டபூர்வமற்றதாக மாற்றுமாறு இப்பிரச்சாரத்தில் வற்புறுத்தினார்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று காந்திஜியும் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கரும் கண்ட கனவுகள் இன்னும் ஈடேறவில்லை. மாறாக இந்திய சமூகத்தில் ஜாதி இன்னும் வலுவாக வேரூண்றியுள்ளது. தங்கள் அரசியல் லாபங்களுக்காக உழைக்கும் மக்களை பிளவு படுத்தும் ஆயுதமாக ஆட்சியாளர்கள் ஜாதியை பயன்படுத்துகின்றனர்.

பசுக்களை பாதுகாப்பது என்ற பெயரில் “அடித்துக் கொல்லும் கும்பல் வன்முறை” அதிகரித்து வருவதை இந்தியா பார்த்துக் கொண்டு இருக்கிறது. பசுப் பாதுகாப்பு கும்பல்கள் நிர்வாகத்தின் செயலின்மையாலும் அரசின் மறைமுக ஆதரவாலும் ஊக்கம் பெறுகிறார்கள். முந்தைய யு.பி.ஏ ஆட்சிக் காலத்தில் பிங்க் புரட்சி நடந்ததாக 2014 பிரச்சாரத்தின் போது மோடியே குற்றம் சுமத்தி பேசியதின் விளைவு இது.  மோடியின் கடந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் மாட்டிறைச்சியின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதும் உலகிலேயே அதிகமான மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்பது ஒரு நகைமுரண். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள யாரும் முஸ்லீம்கள் அல்ல,மாறாக தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களே.

காந்திஜி இவ்விஷயத்தில் தெளிவான கருத்து கொண்டிருந்தார். அவர் பசுவை மதித்தார். ஆனால் முழுமையான கருத்தொற்றுமை இல்லாமல் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வருவதை எதிர்த்தார். ஒரு சமூகத்தினரின் மத நம்பிக்கை இன்னொரு சமூகத்தினர் மீது திணிக்கப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பசுவைப் பாதுகாக்க மனிதனைக் கொல்லக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். இந்தியாவின் எதிர்காலத்தை அரசியல் சாசனம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர பெரும்பான்மைக் கருத்துக்கள் அல்ல என்று வலியுறுத்தினார். இன்று நடப்பதோ முற்றிலும் முரணானது. தேர்தல் ஆதாயங்களுக்காக பசுவும் ஒரு அரசியல் ஆயுதமாகி விட்டது.

மேற்கத்திய பாணியிலான முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியை காந்தி நிராகரித்தார்.  இதில் அவர் தனித்து இருக்கவில்லை. முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சி  என்பது  நிலைக்கத்தக்கதல்ல என்று பல முற்போக்கு சக்திகளும் கூறினார்கள். சுதேசி முறையும் ஆள்வோருடனான ஒத்துழையாமையும் தன்னிறைவையும் சுய சார்பையும் அடைவதற்கான ஆயுதங்கள் என்று அவர் கருதினார். பரவலாக்கலே அவரது பொருளாதாரம், ஆன்மீகத்தின் அடிப்படையிலானது. பொருள் முதல் கண்ணோட்டமுடையது அல்ல.  நவீன தொழில்நுட்பத்தினை சந்தேகத்தோடு பார்ப்பவர் அவர். வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கிற அவர் தர்மகத்தா முறையை முன்னிறுத்தினார். அவரது பொருளாதரம் குறித்த புரிதலில் ஏராளமான குறைபாடுகள் உண்டு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு அங்கம் சுரண்டல் என்பதால் வர்க்கப் போராட்டத்தை தவிர்க்க இயலாது. முதலாளித்துவத்தின் மையம் லாபமே தவிர மக்களின் நலன் அல்ல. எனவே அங்கே தர்மகத்தா முறை என்பது சாத்தியமற்றது.

உலகிலேயே இரண்டாவது சமத்துவமற்ற சமூகமாக இந்தியா திகழ்வதிலேயே இது தெளிவாகிறது. முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் சிலர் கையில் மட்டுமே செல்வம்  குவிகிற நிலை ஏற்பட்டுள்ளது. அதிவேக நகரமயமாக்கலாலும் அதன் விளைவால் ஏற்படும் பிரச்சினைகள், கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு இயற்கை வளங்களை சூறையாடுவதும்  இயற்கைச் சூழலுக்கும்  வறுமை ஒழிப்புக்கும் மறு வினியோகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் பின்னணியில் பார்க்கையில்  கிராமப்புற தன்னிறைவு குறித்த காந்தியின் கருத்துக்களை நம்மால் நிராகரித்து விட முடியாது.

உயிர் வாழும் காலத்தில் காந்தியை உதாசீனப்படுத்திய, அவரது மரணத்தை கொண்டாடிய வடதுசாரி சக்திகள் இப்போது அவரை உயர்த்திப் பிடிக்க முயல்கிறார்கள்.  இது ஒரு நாணயமற்ற செயல். அவர்கள் கட்டமைக்கும் அரசியல் சதி முறியடிக்கப்பட வேண்டும்.  சுரண்டப்படும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கக்கிற உழைக்கும் வர்க்கத்தால் இந்த பிரிவினை சதிகளை எதிர்கொள்ள முடியும்.  அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையிலும் பொருளாதார சம நீதியின் அடிப்படையிலும் ஒரு புதிய அரசியல் சமூக முறையை உழைக்கும் வர்க்கம் உருவாக்க வேண்டும்.

காந்திஜி மிகவும் சிக்கலான ஒரு ஆளுமை. உழைக்கும் வர்க்கத்தின் சில அமைப்புக்கள் போல அவரை பூர்ஷ்வாக்களின் தரகர் என்று அவ்வளவு எளிதாக நிராகரிக்க முடியாது. மாறாக இந்த நவீன தாராளமயமாக்கல் சூழலில் இந்தியாவின் தலைசிறந்த புதல்வரின் 150 வது பிறந்த நாளில்  அவரது “சத்திய சோதனை” யை மறு மதிப்பீடு செய்து அதிலிருந்து கற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இன்சூரன்ஸ் வொர்க்கர் அக்டோபர் 2018 இதழ் கட்டுரையின்
தமிழாக்கமும் வெளியீடும்



                           காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
                                       வேலூர் கோட்டம்

3 comments:

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog
    that automatically tweet my newest twitter updates. I've been looking for a plug-in like this for quite
    some time and was hoping maybe you would have some experience with
    something like this. Please let me know if you run into anything.
    I truly enjoy reading your blog and I look forward to your new
    updates.

    ReplyDelete
  2. Hi there, the whole thing is going perfectly here and ofcourse every one is sharing
    data, that's in fact excellent, keep up writing.

    ReplyDelete
  3. Hi there! This post couldn't be written any better! Reading through this post reminds
    me of my previous room mate! He always kept chatting about this.
    I will forward this write-up to him. Pretty sure he will have a good read.
    Many thanks for sharing!

    ReplyDelete