Tuesday, October 23, 2018

சித்ரா பாடலும் தமிழ் அர்த்தமும்.






என்று நேற்று முன் தினம் ஒரு பதிவெழுதி ஒரு காணொளியையும் பகிர்ந்து கொண்டேன்.

“மாத்ருதேவோபவ” என்ற தெலுங்குப்படப் பாடல் அது. பாலச்சந்தரின் “கையளவு மனசு” தொடர் போன்ற (கணவனை இழந்த பெண்ணிற்கு கொடிய நோய் வந்து தன் மரணத்திற்கு முன்பு குழந்தைகளை தத்து கொடுக்கிற)  கதை என்று ஒரு தோழர் தகவல் சொன்னார்.

பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி (மரகதமணி) இசையில் வந்த பாடல் என்று இன்னொரு தோழர் கூடுதல் தகவல் சொன்னார்.

சங்கர்பாபு என்ற தோழர் இந்த விபரங்கள் மட்டுமல்லாமல் பாடலின் தெலுங்கு வரிகளையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்தே பின்னூட்டமிட்டிருந்தார்.

அனைவருக்கும் நன்றி சொல்வதோடு இந்த பதிவை அப்படியே முடித்துக் கொள்ள முடியுமா என்ன!

மாதவி, நாசர் ஆகியோர் நடித்தது அப்படம்.

அந்த பாடல் காட்சியை இந்த இணைப்பில் சென்று   பாருங்கள்.

ஆங்கிலத்தில் சொல்லப்பட்டத்தை என்னால் முயன்றவரை தமிழில்  மொழிபெயர்த்துள்ளேன்.  மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு பெண்ணின் வலி என்பதை மட்டும் உங்களால் உணர முடியும் . . .

இந்த பூமிக்கு ஒரு புல்லாங்குழலாய்,
இனிய பாடலாய் பிறந்து வந்தேன்.
சொர்க்கத்திற்கோ வெறும்
காற்றாய் திரும்பிச் செல்வேன்.

நான் நேசித்தது எல்லாம்
மௌன கீதங்களாகி விட்டது.
என் விருப்பங்கள் எல்லாம்
காற்றோடு போய் விட்டது.

ஏழுமலைகளில் இருக்கிற
எல்லா பாறைகளிலும்
வெங்கடேஸ்வரனே
நீ மட்டுமே
விலை மதிப்பற்ற பாறை.
எங்கள் ஏழு பிறவிகளில்
இத்திருமணமே இனிமையாய் இருந்தது.

இறைவனே!
உள்ளிருக்கும் ஓளி நீதானே!
கண்ணில் மிதக்கும்
கருவிழி போலே!

இன்று எனக்கு இதயத்தில்
இருளைத்தவிர வேறெதும் இல்லையே!

இன்றும் கூட நான் பாறையாகக் கிடக்கிறேன்,
என் இறைவன் என்னிடம் இன்னும் வரவில்லையே

என் உடலின் நீரெல்லாம் கண்ணீராக வழிகிறதே!
என் உடலின் வெப்பம், இதயத்தில் தீயாய் சுடுகிறதே!
என் ஒவ்வொரு மூச்சும் சுமையாய் கனக்கிறதே!

இறப்பின் மூலம்  என் உறவுகள் எல்லாம்
வானில் கலந்து எல்லாமே  அர்த்தமற்றதாகி விட்டதே!
என் உடலும் தொடங்கிய இடத்திற்கே,
பூமிக்கே செல்ல தயராகி விட்டதே!

கண் இமை போல
என் குழுந்தைகளைக் காத்து நின்றேன்.
உன் குழந்தையாய் நானும் மீண்டும் வருவேன்.


No comments:

Post a Comment