Saturday, October 6, 2018

வஞ்சகன் மோடியடா !!!




இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான முக்கியமான அறிக்கை. தமுஎகச வெளியிட்டுள்ள அறிக்கை. “வஞ்சகத்தின் பிடியில் கீழடி” என்ற தலைப்பை படிக்கையிலேயே “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” பாடலும் “வஞ்சகன் கண்ணனடா” என்ற வரியும் நினைவுக்கு வந்தது. இந்த இடத்தில் “வஞ்சகன் மோடியடா” என்பது பொருத்தமானதுதானே!



இனி அறிக்கையை படியுங்கள்.

வஞ்சகத்தின் பிடியில் கீழடி

கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களுக்கு ஆபத்து-ஆய்வறிக்கையை எழுதக்கூடாது என அமர்நாத்துக்கு மோடி அரசு உத்தரவு


 சென்னை, அக். 5-

கீழடி ஆய்வறிக்கையை சீர்குலைக்க முயலும் மத்திய தொல்லியல்துறைக்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மத்திய தொல்லியல்துறையின் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இந்த அகழாய்வில் சுமார் 7000 க்கும் அதிகமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகரமொன்று கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் எல்லாம் மிக விரிவான அளவில் கண்டறியப்பட்டன. இக்கண்டு பிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் செழிப்புற்ற நகர நாகரிகம் இருந்ததை மெய்ப்பிப்பதாக அமைந்தது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் நிரூபண மானது.

இந்துத்துவா கும்பல் எரிச்சல்

ஆனால் வேத நாகரிகமே இந்தியாவின் பூர்வ நாகரிகம் என்று நிறுவ முயலும் இந்துத்துவாவாதிகளுக்கு கீழடி ஆய்வும் அதன் கண்டுபிடிப்புகளும் ஏற்புடையதாக இல்லை. எனவே இவ்வாய்வை முன்னெடுத்த அதிகாரி அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு மாற்றி னர். தங்களுக்கு ஏற்ற ஓர் அதிகாரியை நியமித்து ஆய்வினை தொடராமல் முடக்கி னர். கீழடி போலவே 2014 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட்நகர், அரியானா மாநிலம் பிஞ்சூர், பீகார் மாநிலம் உரைன் ஆகிய இடங்களில் இப்பொழுதும் அகழாய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றில் மிக அதிக பொருட்கள் கண்டறி யப்பட்ட கீழடி அகழாய்வு மட்டுமே தொட ராமல் நிறுத்தப்பட்டது.

அராஜக உத்தரவு

இந்தப் பின்னணியில் இப்பொழுது மத்திய தொல்லியல் துறை புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. அவ்வுத்தர வின் படி கீழடியில் 2014-16 ஆம் ஆண்டு வரையிலான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான அறிக்கையை அமர்நாத் இராம கிருஷ்ணன் தயாரிக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக, தற்போது பெங்களூரு அகழாய்வுப்பிரிவின் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்கிறது அவ்வுத்தரவு. அதேபோல அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு கண்டறிந்துள்ள தொல்பொருட்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் மூடி முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக உள்ளன.அதனை பெங்களூரு அதிகாரி கதவை உடைத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது. எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். இதுதான் தற்போது வரை உள்ள நடைமுறை. ஆனால் இந்திய தொல்லியல் துறை வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத வகையில் கண்டறிந்தவர் ஆய்வறிக்கையை எழுத வேண்டியதில்லை என்றும் இவ்வாய்வில் எந்த வகையிலும் தொடர்பே இல்லாத நபர் ஆய்வறிக்கையை எழுதவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வுத்தரவு.

முடக்குவதற்கு தொடர் முயற்சிகள்

கீழடியின் ஆய்வினை சீர்குலைக்க முதலாமாண்டோடு ஆய்வினை முடக்க முயன்றனர். பொதுவெளியில் வந்த அழுத்தத்தின் காரணமாக இரண்டாமாண்டுக்கு அனுமதி வழங்கினர். ஆனால் நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தனர். பின்னர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பின் நிதிஒதுக்கினர். தொடர்ந்து மூன்றாமாண்டு அனுமதியை வழங்க மறுத்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என்று எல்லா இடங்களிலும் கீழடி பேசுபொருளான பின், மூன்றாமாண்டு பெயரளவுக்கு ஆய்வு நடத்தி வெறும் பத்து குழிகள் மட்டுமே தோண்டி கண்துடைப்பாக ஆய்வினை நடத்தி நிரந்தரமாக மூடிவிட்டனர். இந்தப் பின்னணியில் முதல் இரண்டு ஆண்டு நடந்த ஆய்வும், அதன் கண்டுபிடிப்பும் எல்லா வகையிலும் முக்கியமானவையாகின்றன. எனவே அந்த ஆய்வறிக்கையை சீர்குலைக்கும் முயற்சியில் இப்பொழுது இறங்கியிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

ஆய்வு நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களே ஆய்வறிக்கை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது. தமிழரின் தொல் நாகரிகத்தை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு சார்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


சிபிஎம் கண்டனம்


சென்னை, அக். 5-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பன்முகப்பண்பாட்டை மறுத்து, இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை திணிக்க அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியநிலப்பரப்பு வரலாறு அவர்களுக்கு எதிராக உள்ளது. எனவே வரலாற்றை தங்கள் வசதிக்கேற்ப வளைத்து எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறையின் சார்பில் நடைபெற்ற அகழ் வாய்வை முடக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடனும், அர்ப் பணிப்புடனும் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டு, தமிழரின் தொன்மை மிகுந்த நாகரிகத்தை நிரூபிக்க முயன்ற அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன், அசாம்மாநிலத்திற்கு எவ்வித காரணமுமின்றி இடமாறுதல் செய்யப்பட்டார். அதன்பின் பெயரளவுக்கு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. 

அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கண்டறிந்த தொல் பொருள்கள் குறித்த அறிக்கையை அவர் எழுதக் கூடாது என்றும், இந்த ஆய்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு தலைவர்தான் எழுத வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள உத்தரவு முற்றிலும் நயவஞ்சக எண்ணம் கொண்டது ஆகும். அகழ்வாய்வை மேற்கொண்ட அதிகாரியே அறிக்கையை எழுத வேண்டும் என்ற தொல்லியல்துறையின் நடைமுறை முதல்முறையாக மாற்றப்படுவதன் நோக்கம் என்ன? 

கீழடியில் கிடைத்த பொருள்களின் தொன்மையை மறுதலிக்கும் சதியோ என சந்தேகம் வருகிறது.எனவே, மத்திய தொல்லியல்துறை தன்னுடைய உத்தரவை திரும்பப் பெற்று, அகழ்வாய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருஷ்ணன், அது தொடர்பான அறிக்கையை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.



No comments:

Post a Comment