Friday, July 16, 2021

மதி (அற்ற) மாறன் கவனத்திற்கு

 


 

தியாகத்தின் அடையாளமாக திகழும் அருமைத்தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு விழா உற்சாக மனநிலையை குலைக்கும் அல்பத்தனத்துடன் யூட்யூப் உரைகள் மூலம் சில்லறை தேற்றும் மதியற்ற மாறன் தொடர்ச்சியாக பதிவுகள் போட்டு நேற்று நிறைய பேரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

 

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, காரல் மார்க்ஸ் உட்பட எனும் போது தோழர் என்.எஸ் மீது விமர்சனம் வைப்பதோ, அதனை அவரது நூறாவது பிறந்த நாளன்று வைப்பதோ கூட தவறில்லை. ஜனநாயக உரிமையும் கூட.

 

ஆனால் மதிகெட்டமாறன் செய்தது அவதூறு. அந்த ஆள் வார்த்தைகளில் வன்மம் தவிர வேறெதுமில்லை. மகிழ்ச்சியாக சிலர் இருக்கிறார்களா, அவர்களை எரிச்சலூட்டுவோம் என்ற சேடிஸ மனப்பான்மை மட்டுமே அடங்கி இருந்தது.

 

யூட்யூப் வருமானத்திற்காகவே இந்த கீழ்த்தரமான செயல் என்பது அவரது ஒரு யூட்யுப் உரையின் இணைப்பை அந்த பதிவில் சம்பந்தமே இல்லாமல் இணைத்ததன் மூலம் அம்பலமாகி விட்டது.

 

குதர்க்கம் பேசும் மதியற்ற மாறனின் கவனத்திற்காக இரண்டு நாட்கள் முந்தைய தீக்கதிர் இதழின் சில பகுதிகளை அளித்துள்ளேன் (இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள உள்ளேன்)

 

போராட்டத்தையே தன் வாழ்வின் நடைமுறையாகக் கொண்டுள்ள தோழர் சங்கரய்யா அவர்களை இழிவு படுத்த முயலும் மதிகெட்ட மாறன், தான் பேசும் விஷயங்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தி ஏதேனும் சின்னஞ்சிறு தியாகம் செய்துள்ளாரா என்பதை அறிவிக்கட்டும். யூட்யூப் மூலம் வாயை விற்பது எல்லாம் தியாகம் கிடையாது என்பதையும் முன் கூட்டியே சொல்லி விடுகிறேன்.

 

வழக்கறிர் தோழர் பிரதாபன் ஜெயராமன் பதிவு ஒன்று உள்ளது. அது நாளை.

 

*அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஆங்கிலேய அரசாங்கத்தால் ஏவி விடப்பட்டது. இதனை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா உடன் மாணவர் தலைவர் சங்கரய்யாவும் உரை நிகழ்த்தினர். “மண்டைகள் உடைகின்றன எலும்புகள் நொறுங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறதுஎன ஆங்கிலத்தில் சங்கரய்யா எழுதிய துண்டுப் பிரசுரம் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டு எழுச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கரய்யாவை கைது செய்யப்படும் நிலைமை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது. இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சிறையில் ,பி பிரிவு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர். பத்து நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்த சூழலில்தாய்நாவலை படித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சிறைச்சாலை .ஜி. லெப்டினன்ட் கர்னல் காண்ட்ராக்டர்பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பின்பும் எப்படி படிக்க முடிகிறதுஎன்று கேட்டார்.*

##########################

 

*சாதி கலவரங்களின் வேர் எது?*

 

சிபிஐ (எம்) தனித்தன்மை - முழக்கம், சங்கரய்யா பங்களிப்பு 

 

*சிபிஐ (எம்) மட்டுமல்ல பல்வேறு அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களும் சாதிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர பல் வேறு ஆலோசனைகளை வெளியிட்டன. “சாதிய மோதல்களை தவிர்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம்என்பது பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளின் முழக்கமாக இருந்தது. ஆனால் இம்மோதல்களை கவனமாக ஆய்வு செய்த சிபிஐ (எம்) மோதல்க ளுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. எனவே மக்கள் ஒற்றுமைக்காக சிபிஐ (எம்)மின் முழக்கம் இதர முதலாளித்துவக் கட்சியின் முழக்கங்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தது. அதாவது, “தீண்டாமை கொடுமைகளை ஒழிப்போம், சாதிய மோதல்களை தவிர்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம்என்ற முழக்கமே அது.*

##########################

 

*பாரதிராஜா*

 

என். எஸ் - அப்பழுக்கற்ற பொது வாழ்வு

 

*கலைத்துறைக்கு நான் வரவில்லை என்றால் இன்றளவும் பொதுவுடமைக் கட்சியின் தொண்டனாக இருந்திருப்பேன். மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள மண்டையன் ஆசாரி சந்தில்தான் அப்போது பொதுவுடமைக் கட்சியின் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தை இன்றளவும் என்னால் மறக்க இயலாது. அங்கே தான் முதன்முதலில் தோழர் சங்கரய்யாவை சந்தித்தேன். அப்போது அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு மிகக் குறைந்த அளவே கிட்டியது. நான் கலைத் துறைக்கு வந்தபிறகு என் நண்பன் கதாசிரியர் ஆர்.செல்வராஜின் சித்தப்பா அவர் என்று தெரிந்து கொண்டேன். திரைப்படத்துறை தொழிலாளர்கள் பிரச்சனை எற்பட்ட போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவர் மிக அற்புதமான மனிதர். ஆடம்பரமும், பதவி ஆசையும், லஞ்சமும், ஊழலும் பரவிக்கிடக்கும் இன்றைய முதலாளித்துவ அரசியல் சூழலில், அப்பழுக்கற்ற பொது வாழ்வும், மக்கள் சேவை யும். மகத்தான தியாகமும் கொண்ட கம்யூனிஸ்ட் தலை வர் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.*

##########################

 

*அருவி போல உரை*

 

தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி. பரமேஸ்வரன் 

 

*பொது மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் சங்கரய்யா உரை அருவி போலக் கொட்டும். ஒவ்வொரு சொல்லும் தகவல் களஞ்சியமாக மிளிரும். கேட்போருக்கு எந்த சலிப்பும் தட்டாது. கடலூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தெலுங்கானா போராட்ட வீரருமான எம்.பசவபுன்னையா பங்கேற்றார். கட்சியின் கோட்பாடுகள், தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அவரது நீண்ட ஆங்கில உரையை தோழர் சங்கரய்யா, குறிப்பு ஏதும் எடுக்காமல் அற்புதமான நினைவாற்றல் மூலம் அழகு தமிழில் கடகடவென மொழியாக்கம் செய்தார்.*

##########################

 

*சங்கரய்யா போட்ட 'கவர்னர் உரையின் கடைசி ஒட்டு'*

 

நியாய விலை கடை பிறந்த கதை. பெ. சண்முகம் கட்டுரை 

 

*இன்று கிராமங்கள் தோறும் நியாயவிலைக் கடைகள் செயல்படுகிறது என்றால் அதற்கு வித்திட்டவர் தோழர்.சங்கரய்யா அவர்கள். இது குறித்துசெங்கொடியின் பாதையில் நீண்ட  பயணம்என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தோழர்.ஜி.வீரய்யன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது: “1977 ஆம் ஆண்டில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்றது. இக்கூட்டமானது கிராமப்புற மக்கள் அனைத்து பொருட்களையும் வாங்க நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமமான நிலையைச் சுட்டிக் காட்டியது. இதைப் போக்கும் விதத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசாங்கம் நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும்மென்று கோருவதென்றும் முடிவு செய்யப்படுகிறது. அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக் குழுவின் தலைவரான தோழர். சங்கரய்யா தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இத் தீர்மானத்தை விளக்கிக் கூறி நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டும் என இந்த கூட்டம் தீர்மானித்தது. அதன்படி தோழர்.சங்கரய்யா முதல்வர் எம்.ஜி.ஆரையும் வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரனையும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். அப்போது நாஞ்சில் மனோகரன் ஆளுநரின் உரை ஏற்கனவே அச்சிடப்பட்டுவிட்டதால் இக்கோரிக்கையை சேர்க்க இயலாது என்றார். அதற்குப் பதிலளித்த சங்கரய்யா இந்த விஷயத்தை தட்டச்சு செய்து ஆளுநரின் அறிக்கையின் கீழே ஒட்டிவிடலாம் என்று சொன்னார். அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதன்படி செய்ய ஏற்பாடு செய்தார்.*

 

*சாலமன் பாப்பையா*

 

பொழுது போக்கே பொதுவுடைமை இயக்க பொதுக் கூட்டம் கேட்பதுதான் 

 

*எனது பெரியப்பா மகன் என்னை பொதுவுடைமை இயக்கக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். கூட்டங்கள் பரமேஸ்வரி தியேட்டர், வைகையாற்றின் மையமண்டபம், திலகர் திடல் ஆகிய இடங்களில் நடைபெறும். அங்கு சங்கரய்யாவின் உணர்ச்சி மிகு பேச்சைக்கேட்டிருக்கிறேன். 1946-48-ஆம் ஆண்டுகளில் அவருக்கு 26 வயது இருக்கும். எனக்கு வயது பதினெட்டுக்கும் கீழ் தான்அப்போது தொலைக்காட்சி பெட்டியோ, ரேடியோவோ கிடையாது. எங்காவது கிராம போன் இருக்கும். திரைப்படங்களுக்கு செல்வதற்கு கையில் காசிருக்காது. பொதுவுடைமை இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வது தான் எனக்கு பொழுதுபோக்கு.*

###########################

 

*கோவை கலவரமும் நல்லிணக்க பேரணியும்*

 

ஜவாஹிருல்லா 

 

*இவர் வாழும் சமகாலத் தில் நாமும் வாழ்ந்து கொண் டிருக்கிறோம் என்பது நமக் கான பெருமை. அவருடன் பல தளங்களில் ஒன்றாக பயணித்து இருப்பது எனக்கு கிடைத்த நற்பேறு. தமது அர சியல் வாழ்க்கையில் தன் பிள்ளை, பேரப்பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கான வர்களுக்கு சீர்திருத்த சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த சிந்தனையாளர். ஜனசக்தி தத்துவ மாத இதழின் பொறுப்பாசிரியராக வும், தீக்கதிர் இதழின் ஆசிரியராகவும் செவ்வனே இதழியல் பணி செய்தவர். 1998-இல் கோவையில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக நல்லிணக்க பேரணியை முன் நின்று நடத்திய உன்னத மனிதர். பாசிசச் சிந்தனை வாதிகளுக்கு தமது களப் பணிகளால் பதிலடி கொடுத்த செம்படைத் தளபதி.*

##########################

 

*ஊட்டுப் பிறை அவர் இல்லம்*

 

என் சித்தப்பா கதை இது.... திரைக் கதாசிரியர் செல்வராஜ் 

 

*தமிழக-கேரள எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் காணப்படும் அன்னசத்திரத்திற்கு  ஊட்டுப்பிறை  என்று பெயர். இரவு- பகலாக ஆதரவற்று வரும் மக்களுக்கு நீரும், நெருப்பும், சமயத்தில் அரிசியும் வழங்கப்படும். நீண்டகாலமாக விளம்பரம் இல்லாமல் நடக்கும் அற்புதச் செயல் இது. சுமை தாங்கிக் கல்லில் தலைச்சுமை யோடும், முதுகுச் சுமையோடும் வருபவர்கள் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறுவது போல மனிதர்களின் பசிச்சுமையை இறக்கி வைக்கும் இடம்தான் ஊட்டுப்பிறை. அது போன்ற, ஒரு ஊட்டுப்பிறை சென்னை, குரோம்பேட்டை நியூ காலனியில் இயங்கி வரு கிறது. அதுதான் அன்புத் தோழர் சங்கரய்யா-வின் இல்லம். உடன் பிறந்தோர், உறவுமுறை, நட்பு  சூழ்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான தோழர்க ளும் வந்து ஆறுதல் பெற்று நம்பிக்கை பெற்று செல்லும் இடம் இது. தோழர் சங்கரய்யா பற்றி குறிப்பிடும்போது அவரது துணைவியார் நவமணி அம்மாள் குறித்தும் குறிப்பிட வேண்டும். “வீட்டை அன்பு மயமான சூழலாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. எளிமையான வாழ்க்கை. கைத்தறி உடைகள் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை. கணவரிடம் புதுப்புடவை வேண்டும். நகைகள் வேண்டும் என்று கேட்காத மனைவி அவர்.*

##########################

 

*பெருநிலத்தினை இணைக்கும் பேராற்றல்*

 

பால பிரஜாபதி அடிகளார் 

 

*இடதுசாரிச் சிந்தனைகளே இந்தியப் பெருநிலத்தினை இணைக்கும் பேராற்றல் கொண்ட சக்தியாகும். சாதி, மதம், மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த சமத்துவ வாழ்வை எளிமைவாய்மை, தூய்மை, விடாமுயற்சி, போராட்டம், கடின உழைப்பு என வாழ்ந்து காட்டி வாழும் வரலாறு பெரியவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள். அவர் வாழ்வின் இலக்கணம். இலக்கணமாய் வாழ்ந்து வரும் அவரிடம் இலக்கணம் கற்று  இணக்கமாய்த் தோழராய் வாழ்வோம். நாட்டு நலனை வாழ்விப்போம். வாழ்க தோழர் என்றும் நலமாய்.*

##########################

 

*"நீங்களும் நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டோம்"*

 

லாசர் பகிர்வு. இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வருவது பற்றி... 

 

*எந்தவொரு போராட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை, உழைப்பாளிகளை திரட்ட வேண்டும் என்பதில் சங்கரய்யா கவனமாக இருப்பார். அவருடைய சுதந்திரப் போராட்ட கால அனுபவத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்குமுறை காலகட்டம் உட்பட எப்படி விவசாயிகளை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் என்று அனுபவப்பூர்வமாக சொல்லிக் கொடுப்பார். அந்த காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட, ஒடுக்குமுறைகளை சந்தித்த அத்தனை தோழர்களையும் நினைவில் வைத்து கடந்த கால வரலாற்றை தோழர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் தோழர் என்.எஸ். போல் யாரும் இருக்க முடியாது. இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பதில்எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இளைஞர்களுக்கு போதிய அனுபவம் இல்லையே என்று மற்றவர்கள் பொறுப்புகளை தர யோசித்தால் தோழர் என்.எஸ்.அவர்கள் பளிச்சென்று சொல்வார்.எல்லோரும் கற்றுக்கொள்ள முடியும். நீங்களும் நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டோம் என்றுசொல்வார்.*

 

No comments:

Post a Comment