23.05.2021 - கொரோனா தனிமைப்படுத்தல் முடிந்த நாள். புத்தக அலமாரியும் கம்ப்யூட்டரும் இருந்த அறையில்தான் நான் இருந்தேன். அந்த அறையை முழுமையாக சுத்தம் செய்திருந்ததால் உள்ளே செல்லவில்லை. மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் மே மாத ஊதியம் இறுதிப்படுத்தும் பணிக்காக மனைவியும் அலுவலகம் சென்று விட்டார். எத்தனை நேரம் தொலைபேசியையும் தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சலிப்பு வந்த நேரத்தில் முந்தைய பயணத்தில் படிப்பதற்காக எடுத்து வைத்து படிக்காமல் போன நூல் பயணப்பையில் இருந்தது நினைவுக்கு வந்தது. அதை தேடி எடுத்தேன். 138 பக்கங்கள் கொண்ட தன் வரலாறு நூல்தான். ஆனால் ஏதோ மர்ம நாவல் போல முழு மூச்சாக படித்து முடித்தேன். அன்றிருந்த சூழலில் உடலுக்கும் மனதுக்கும் பேட்டரி சார்ஜ் செய்தது போல இருந்த நூல் அது.
நூல் : மோகனா - ஒரு இரும்புப் பெண்மணியின்
கதை
ஆசிரியர் : பேரா.சோ.மோகனா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சென்னை 18
விலை : ரூபாய் 120.00
பழனி
கலைக்கல்லூரியில் பேராசியராக பணியாற்றியவர், ஆசிரியர் அமைப்பில் செயல்பட்டு, அறிவொளி
இயக்கத்தில் பணியாற்றியவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவராக செயல்பட்டவர்,
தாய்ச்சி எனும் தற்காப்புக்கலை நிபுணர், துப்புறவு பணியாளர்களுக்கான போராட்டத்தில்
முன் நிற்பவர், தொழிற்சங்கப் பொறுப்பாளர் எனும்
பல பரிமாணங்களை கொண்ட பேராசிரியர் சோ.மோகனா
அவர்கள் தன் வரலாற்றை எழுதியுள்ள நூல் இது.
மூத்த
தலைவர் தோழர் எஸ்.,ஏ.பெருமாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
முனைவர் வசந்தி தேவி, முன்னாள் சட்டப்பேரவை
உறுப்பினர் தோழர் பால பாரதி, தமுஎகச அமைப்பின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்,
ஆகியோரின் அணிந்துரையே நூலின் சாராம்சத்தை சொல்லி விடுகிறது.
தோழர்
மோகனா மயிலாடுதுறை பக்கத்தில் உள்ள சோழம்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம்
வகுப்பு படிக்கும் வரை படிப்போடு வயல் வேலை, கால்நடை பராமரிப்பு ஆகியவற்றோடு அப்பாவின்
சைக்கிள் கடை வேலைகளோடு உழைப்பாளியாக வளர்கிற தோழர் மோகனா பெரும் போராட்டத்திற்குப்
பின்பே “கல்விக்காக காவிரியை கடந்த முதல் பெண்ணாக” ஆறாவது செல்கிறார். கல்லூரி கல்விக்கு
அனுப்ப விருப்பம் இல்லாததால் பதினோறாவது தேர்ச்சி பெற்றதற்கு குடும்பமே துக்கம் கொண்டாடினார்கள்
என்று எழுதுகிறார் தோழர் மோகனா. ஆண் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்ததற்காக
அது என்னவென்றே தெரியாமல் அல்வாவில் விஷம் வைத்து கொல்ல முயன்றார்கள் என்பதை விவரிக்கையில்
சமூகம் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட
சூழலில் வந்த தோழர் பழனியில் கல்லூரி ஆசிரியரான பின்பு கல்லூரி ஆசிரியர்களுக்கான அமைப்பான
மூட்டாவில் இணைந்து கொள்கிறார். போராட்டங்களில் பங்கேற்கிறார். அறிவொளி இயக்கம், அறிவியம்
இயக்கம் ஆகியவற்றிலும் இணைந்து செயல்படுகிறார்.
அவரது
திருமண வாழ்க்கையில் அனுபவித்த சிரமங்களையும் அந்த வாழ்விலிருந்து விவாகரத்து மூலம்
வெளியேறியதை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். சித்திரவதை செய்த கணவர், யாருமின்றி
எங்கோ இறந்த தகவல் கிடைத்ததும் அவருக்கான இறுதிச் சடங்குகள் செய்ய இவர்தான் ஏற்பாடு
செய்துள்ளார்.
ஆனால்
இத்தோடு இவர் துயரம் முடிந்து போகவில்லை. அழையா விருந்தாளியாக புற்று நோய் எட்டிப்பார்க்கிறது.
அறுவை சிகிச்சையும் தொடர்ந்த கீமோதெரபி சிகிச்சையும் அவரது உடல் நிலையில், உருவத்தில்
பழக்கத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் அதனை மீறி தொடர் சிகிச்சை மற்றும் பயிற்சிகள்
மூலம் இயல்பு நிலைக்கு திரும்புகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை
அளிப்பவராக அவரது நடவடிக்கைகள் தொடர்கிறது.
தொழிற்சங்கப்
பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். உடல் நிலையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க
கற்றுக் கொண்ட “தாய்ச்சி’ எனும் சீன தற்காப்புக் கலையில் ஒரு விற்பன்னராகவே உருவெடுக்கிறார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் மோகனா அந்த
காலகட்டத்தில் ஒரு மாதத்திற்கு 10,000 முதல் 14,000 கிலோ மீட்டர் வரை, அதிலும் பெரும்பாலும்
பேருந்தில்தான் பயணித்ததாக எழதியதை படிக்கிற போது பிரமிப்பாக உள்ளது.
இந்த
நூலில் அவரது குடும்பம், நண்பர்கள், தோழர்கள், பயணங்கள் ஆகியவற்றைப் பற்றிய அத்தியாயங்களும்
உண்டு.
“பெண்களும்
இயக்கமும்” என்ற அத்தியாயத்தை கவனம் எடுத்து படிப்பது மிகவும் அவசியம். “25 ஆண்டுகளுக்கு
முன்பே துணைத் தலைவரான தான் தலைவராவதற்கு கால் நூற்றாண்டு காலம் ஆகியுள்ளது. பெண்களின்
முன்னேற்றத்தை கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கங்களிலும் இதற்காக போராட வேண்டுமா?” என்று
ஆதங்கத்துடன் அவர் எழுப்பியுள்ள கேள்வியை அனைத்து இயக்கங்களும் பரிசீலிக்க வேண்டும்.
எத்தனை
சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறிக் கொண்டே இருக்க முடியும் என்ற நம்பிக்கையை
விதைக்கிற நூல் இது. மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நூல்.
வணக்கம் நண்பரே.. மிக்க நன்றி. உங்களை எனக்குத் தெரியாது. எப்படி புத்தகம் பெற்றீர்கள் என்பதும் தெரியாது. அதன் உள்ளடக்கத்தை அற்புதமாக பதிவிட்டுள்ளீர்கள். இது வருங்கால பெண்கள் ஒருவராவது தன்வாழ்க்கையில் சோர்வுறாமல் துணிந்து செயல்பட இந்த புத்தகம் உதவினால் இதுவே இதன் வெற்றி என நம்புகிறேன். நன்றிங்க. அன்புடன் மோகனா
ReplyDeleteவணக்கம் நண்பரே. முடிந்தால் உங்கள் கருத்தை பாரதி புத்தகாலயம் வைத்திருக்கும் Book dayவிள் எழுதுங்கள். நன்றி மீண்டும். அன்புடன்,மோகனா
ReplyDelete