Saturday, July 10, 2021

சேலைக்கால், ஓலைக்கால் என்றவர்கள்தான் . . .

 இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள்.




அடிமைத்தளையை அறுத்தெரிய
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
மத அடையாளம் மறந்து
செங்குருதி சிந்தி 
இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
வீர வணக்கம் செலுத்திய  நாள்
இன்று.

இந்த நாளில் ஆம் 

ஜூலை மாதம் பத்தாம் தேதி,

இருநூற்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆம் 1806 ம் வருடம்,

நடந்த சம்பவம் அது. இந்தியராய்ப் பிறந்தவர், தமிழராய் வாழ்பவர் கண்டிப்பாய் அறிந்து கொள்ள வேண்டிய உணர்வூட்டும் நிகழ்வு அது.

வாருங்கள், கொஞ்சம் வேலூர் கோட்டை வரை சென்று வரலாம்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் நான்கு படைப் பிரிவுகள் வேலூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய வீரர்களும் பிரிட்டிஷ் வீரர்களும் இணைந்த படை அது. 

அணிவகுப்பின் போது இந்திய வீரர்களுக்கு "லெப்ட். ரைட்" என்று சொல்ல வராது என்ற நினைப்பில் ஒரு காலில் சேலையின் சின்ன துணியையும் இன்னொரு காலில் தென்னை ஓலையின் சிறு துண்டையையும் கட்டி "சேலைக்கால், ஓலைக்கால்" என்று அணி வகுப்பார்கள்.  அவர்கள் மனதில் எத்தனையோ குமுறல்கள் ஒளிந்திருந்தன. 

சம வேலைக்கு சம ஊதியம் என்பது இப்போதே இல்லாத போது அந்தக் காலத்தில் எப்படி இருக்கும்! பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஊதியத்தில், சலுகைகளில், உரிமைகளில் என எல்லாவற்றிலும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. இழிவாக நடத்தப்பட்டார்கள். காரணங்கள் தேடித் தேடி தண்டனை கொடுக்கப்பட்டார்கள்.

எத்தனை நாட்கள் குமுறல்கள் மனதிற்குள்ளேயே அடங்கிக் கிடக்கும்? உணர்வுள்ள வீரர்கள் அடிமைத்தளையை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் இந்து முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டார்கள். நம்மை அடக்கியாளும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். வேலூர் கோட்டையில் ராணுவமும் இருந்தது. ஒரு மாளிகையும் சிறையாக மாற்றப்பட்டு அங்கேதான் பிரிட்டிஷாரை அச்சுறுத்திய மாவீரன்  திப்பு சுல்தானின் வாரிசுகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

சிறைக்குள்ளேயே திப்பு சுல்தானின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். நாள் குறிக்கப்பட்டது. தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள். ஒற்றனோ இல்லை உள்ளேயே இருந்து காட்டிக் கொடுத்த துரோகியோ, யார் மூலமாகவோ செய்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சென்று விட்டது.

அதனால் திட்டமிட்ட நாளுக்கு முதல் நாளே இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் வீரர்களையும் தாக்கத் தொடங்கினர். யாருக்கு இத்தனை நாள் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்களோ, யாருடைய உத்தரவுக்கு அடிபணிந்து அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களை அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை தாக்கினார்கள். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்று சொன்னார் மாமேதை காரல் மார்க்ஸ். பிரிட்டிஷ் படையின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களையே குறி பார்த்து சுட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் இறந்து போயினர். வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கைகளுக்கு, கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடி வேலூர் கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. இந்திய சிப்பாய்கள் அடைந்த வெற்றியின் அடையாளமாக திப்பு சுல்தானின் புலிக் கொடி அங்கே ஏற்றப் பட்டது. நினைவில் கொள்ளுங்கள். சூரிய அஸ்தமனமே கண்டிராத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கொடி முதலில் கீழிறக்கப்பட்டது வேலூரில்தான். காலனியாதிக்கத்தின் அஸ்தமனத்திற்கு தொடக்கவுரை எழுதப்பட்டது வேலூர் கோட்டையில்தான்.

துரதிர்ஷடவசமாக இந்த வெற்றியும் மகிழ்ச்சியும் நீடித்தது ஒன்பது மணி நேரம்தான். அருகிலிருந்த ஆற்காட்டிலே குவிக்கப்பட்டிருந்த பெரும்படை வேலூர் நோக்கி விரைந்தது. கர்னல் கில்லஸ்பி என்ற தளபதியின் தலைமையில் வந்த படையின் முன்னே இந்திய சிப்பாய்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நானூறுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பீரங்கிகளின் வாயில் கட்டி வெடிக்கச் செய்து சிதறடித்துக் கொன்றான் கில்லஸ்பி. வேலூர் கோட்டையைச் சுற்றி ஓடும் அகழி முழுதும் இந்திய வீரர்களின் குருதியால் சிவப்பானது. ரத்த ஆறுதான் ஓடியது.

இந்திய வீரர்களின் முயற்சி தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் பின்னாளில் உருவான எழுச்சிக்கு இவர்கள்தான் உரமாய் இருந்தார்கள். எவராலும் தோற்கடிக்க முடியாதவர்கள் என்று கருதப்பட்ட இங்கிலாந்து ராணுவத்தையும் வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் வேலூர் சிப்பாய்கள். இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் ஒற்றுமையாய் போராடி மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் படைத்தார்கள்.






இன்று  "வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுச் சின்னத்தில்" உயிர் நீத்த வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில்  வீர வணக்கம் செலுத்தி " மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம்"  காப்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டோம். கொரோனா காலம் என்பதால் பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்றோம். 


No comments:

Post a Comment