Saturday, July 31, 2021

வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா


குமரி மாவட்ட மூத்த தோழர் ஹாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பதிவு மூலம் வரலாறு படைத்த ஒரு பெண்மணியை அறிந்து கொண்டேன்.

அவருக்கு என் வீர வணக்கம்.



மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி......
103வயது,வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா....
இனி... நினைவில் மட்டும்....
மன்னர் ஆட்சி காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும் போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும் போதும், வரவேற்பு
கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் என்று ஆண்டைகள் கருதும் பிரிவை சேர்ந்த இளம் பெண்கள், இரண்டு பக்கங்களிலும் நிற்க வேண்டும்... இந்த பெண்களின் கைகளில், மலர் இதழ்கள் கொண்ட, தட்டுகள் இருக்கும்... ஆண்டைகளும், கோவில் மூர்த்திகளும் ஊர்வலமாக வரும் போது, இந்த
இளம்பெண்கள், தங்களது கைகளில் இருக்கும் தட்டுகளிலிருந்து, மலர் இதழ்களை, அவர்கள் காலடிகளில் தூவ வேண்டும் என்பது சட்டம்..
இதை மலையாளத்தில் தாலப்பொலி என்று கூறுவார்கள்..

இதை படிக்கும் போது, சாதாரணமாக உங்களுக்கு தெரிந்தாலும், இங்கே மிகவும் முக்கியமான செய்தி என்னவென்றால், பெண்கள் அனைவரும், தங்களது மார்புகளை மறைக்காமல், திறந்து மார்போடு தான்,
ஆண்டைகளுக்கு பூக்கள் தூவி வரவேற்க வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது..

இது தான் அப்போதைய ஆச்சாரம்... மரபு.. வழக்கம்,சட்டம் எல்லாம்...

இப்போது கூட, நமது ஊர்களில், அமைச்சர் பெருமக்களோ, தலைவர்களோ வரும் போது, பள்ளி/கல்லூரி மாணவிகளை வெயிலிலும்,
மழையிலும் கால் கடுக்க நிற்க வைக்கும் அவலத்தை காண முடியும்...
ஆனால், இது போன்ற நிலப்பிரபுத்துவ கூறுகளின் எச்சங்களை நாம் கூட அனுமதித்து வருகிறோம் என்பது தான் விசித்திரம்..

இப்படித்தான்....

1952ம் ஆண்டு, இன்றைய கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டம், வேலூர் என்று கிராமத்தில், மணிமலர் காவு என்ற கோவிலில், கும்ப பரணி
திருவிழா, கோலாகலமாக நடந்தது...

அப்போதைய கொச்சி சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது; திருச்சூர் மாவட்டம் சேங்ஙழிநாடு என்ற சிறு பகுதி ஆண்டையின்
ஆட்சியின் கீழ் இருந்த, மேலே குறிப்பிட்ட கோவில் திருவிழாவில், இளம் பெண்கள், தாலப்பொலி எடுத்து மலர் தூவி அனைவரையும் வரவேற்க வேண்டும் என்பது ஆண்டையின் உத்தரவு...

ஆண்டைகளின் உத்தரவுகள் மீறப்பட்டால்,
அங்கேயே, அதே இடத்தில் மரணம் நிச்சயம் என்பது தான் ராஜ நீதி.... இதை எவரும் கேள்வி கேட்க முடியாது...
ஆனால், தாலப்பொலி ஏந்த வேண்டிய இளம் பெண்கள் தாலப்பொலிக்கு வர வேண்டிய நேரம் வரை வரவில்லை... மார்பு மறைக்காமல் வரும் நூற்றுக்கணக்கான பெண்களை கண்டு ரசிக்க கூட்டம் கூட்டமாக
வந்து நின்ற, மேல் சாதி கயவன்கள் தங்களது இச்சை நிறைவேறாத கோபத்தில் துள்ளிக் குதித்து கொந்தளித்தனர்...
ஆண்டை, கோபத்தில் தனது பெரிய மீசையை முறுக்கிக்கொண்டே தவிப்போடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்... ஆண்டாண்டு காலமாக, நடந்து வரும், ஆச்சாரம், தாமதமாகும் ஏமாற்றம் அவருக்கு..

இறுதியாக....
எதிர் பார்த்த, நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், சேலை கட்டி,நீண்ட முந்தானையோடு, தங்களது மார்பை மறைக்கும் ரவிக்கை அணிந்து, கம்பீரமாக வந்து வரிசையில் நின்றனர்.. இந்த பெண்களின் வரிசையில் முதல் பெண்ணாக, வேலத்து லட்சுமி குட்டி என்ற சிங்கக் குட்டி......
சகாவ், வேலத்து லட்சுமிக்குட்டி....

ஆமாம்..
ஆண்டைகள் தேர்வு செய்த பெண்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு தைரியமூட்டி, ரவுக்கை அணிந்து, சேலை கட்டச்
சொல்லி, தானும், ரவுக்கையும், சேலையும் அணிந்துகொண்டார், லட்சுமிக்குட்டி அம்மா!

பிறகென்ன...
மணிமலர் காவு கோவில் வளாகத்தில்...
அந்த சிங்கக் குட்டிகளின், ஆவேசத்தை, லட்சுமிக்குட்டி அம்மாவின் தலைமையில், தீப்பந்தம் போன்று கனன்று கொண்டிருந்த
அந்த இளம் கதிர்களின் வெப்பத்தை, ஆண்டைகள் புரிந்து கொண்டார்கள்...
அங்கே குழுமியிருந்த மேல்சாதி கயவன்கள், மறைக்காத மார்புகளை காண வந்து, எதுவும் நடக்காமல், பின்னங்கால் பிடரியில் பட தப்பித்து ஓடியதை, மணிமலர் காவு பகவதி அம்மன், கண்கள் குளிர கண்டு களித்தார்.....

நூற்றாண்டுகளாக, அங்கே நிலவி வந்த, கொடிய சட்டத்தை தனது கால்களின் போட்டு மிதித்து, பெண்களின்,சுயமரியாதையை,
மீட்டெடுத்த,சகாவ் வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா,
தனது 103வது வயதில்,நேற்று காலமானார்....

ஒரு நூற்றாண்டு பெருவாழ்வு, நேற்று முடிவுக்கு வந்தது...

பெண்கள் இல்லாமல்,வரலாறும் இல்லை; சமூக மாற்றமும் இல்லை; ஜனநாயகமும் இல்லை;சமத்துவமும் இல்லை...#ShahulHameed

 



3 comments:

  1. தங்கள் பதிவின் மூலம் நானும் அந்தப்போராளியை அறிந்து கொண்டேன்.மறைந்த போராளிக்கு எனது செவ்வணக்கங்கள்.வரலாறு பதிவு செய்யாத போராளிகள் இன்னும் எத்தனையோ? நன்றி.

    ReplyDelete
  2. தங்கள் பதிவின் மூலம் நானும் அந்தப்போராளியை அறிந்து கொண்டேன்.மறைந்த போராளிக்கு எனது செவ்வணக்கங்கள்.வரலாறு பதிவு செய்யாத போராளிகள் இன்னும் எத்தனையோ? நன்றி.

    ReplyDelete
  3. ஆம்!. பெண்களே நமது கண்கள். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete