Friday, July 23, 2021

தமிழ்நாட்டு நதிகள் பாவம் தீர்க்காதா?

 



கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டம் (CORPORATE SOCIAL RESPONSIBILITY) என்றொரு திட்டம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை தங்கள் நிறுவனம் செயல்படும் பகுதியின் தேவைக்காக, மேம்பாட்டுக்காக செலவழிக்க வேண்டும் என்பதே அது. அத்தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 பி.எம் கேர்ஸ் என்றொரு ரகசிய, மர்ம நிதியை மோடி திரட்டினார் அல்லவா, அதற்கு கப்பம் கட்டி விட்டால் அதுவே CSR ஆக கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவித்தது ஒன்றிய அரசு. மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்தப்படும் தொகைக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பொருந்தாது என்று கறாராக சொல்லி விட்டார் மோடி என்பது வேறு விஷயம்.

 நான் சொல்லப் போவது வேறு செய்தி.

 கேட்கப் போவது வேறு கேள்வி

 தமிழகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த இரண்டாண்டுகளில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் என்ன செலவு செய்துள்ளனர் என்று திமுக எம்.பி திரு வில்ஸன் ஒன்றிய கம்பெனிகள் துறை அமைச்சகத்தை கேட்க அவர்களும் ஒரு பட்டியலை அனுப்பியுள்ளனர்.

 அந்த பட்டியலில்   உள்ள ஒரு செலவினம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 கங்கை நதியை சுத்தம் செய்வதற்கென்று இங்கே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே பணம் அனுப்பியுள்ளது.

 தமிழ் நாட்டிற்குள் செலவழிக்க வேண்டிய தொகை அல்லவா இது! அப்படி என்றால் “கங்கை” தமிழ் நாட்டிற்குள்ளா ஓடுகிறது என்று அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார் எம்.பி.

 இந்த சந்தேகம் எனக்கும் வந்தது. யோசித்ததில் தெளிவும் வந்தது.

 தமிழ்நாட்டு நிறுவனங்கள் பல விதமான மோசடிகள் செய்கிறார்கள். தொழிலாளர்களை வஞ்சிக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.  இதனால் ஏற்படும் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்து தங்களை சுத்தம் செய்து கொள்ள கங்கை நதிக்கு பணம் அனுப்புகிறார்கள்.

 என்ன லாஜிக் சரிதானே?

 இது சரியென்றால் எழுகிற கேள்வி ஒன்று உண்டு.

 கங்கையில் பணத்தைக் கொட்டினால்தான் பாவம் நீங்குமென்றால் தமிழக நதிகள் காவிரி, வைகை, தாமிர பரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு  பாவத்தை போக்கும் சக்தி கிடையாதா?

 அப்படி தமிழக நதிகளிடம் இல்லாத எது கங்கையிடம் மட்டும் உள்ளது?

 பிகு: கொஞ்சம் சீரியஸாக பார்ப்போம். இந்த கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு உடனடியாக என்ன தேவை?

 ஒரு அற்புதமான பதிவை மாலை பகிர்ந்து கொள்கிறேன்.

1 comment:

  1. Running sewer gangai'la ponathai podaalam. Thamribarani'la ponathai poda mudiyumaa?

    ReplyDelete