சார்பட்டா பரம்பரை படத்தை சனிக்கிழமையன்று பார்த்தோம். இரவு
உணவுக்காக எடுத்துக் கொண்ட இடைவேளை
மட்டும்தான். இதற்கு முன்பு ஓ.டி.டி யில் பார்த்த திரைப்படங்கள் த்ரிஷ்யம் 2
மற்றும் மூக்குத்தி அம்மன். த்ரிஷ்யம் 2 நாள் முழுதும் பார்த்தால் மூக்குத்தி
அம்மனை நாலு நாள் பார்த்தேன். படம்
சுவாரஸ்யமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது.
சார்ப்பட்டா படம் தொடர்பான சர்ச்சைகள் என்ன?
கீழ்க்கண்டவற்றை நான் படித்தேன்,
சார்ப்பட்டா பரம்பரையில் முக்கியமானவர்களான மீனவர்களின்
பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டு
விட்டது.
திமுகவை விதந்தோதுவதாகவும் அதிமுகவை மட்டம் தட்டுவதாகவும்
அமைந்துள்ளது.
வட சென்னை தொழிலாளர்களோடு ஐக்கியமான செங்கொடி இயக்கம்
பற்றியும் எதுவும் இல்லை.
தேர்தல் முடிவுகள் தெரிந்ததும் ஆளுங்கட்சிக்கு வால் பிடிப்பது
போல காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
இதில் முதல் இரண்டு விஷயங்கள்தான் பரபரப்பான சர்ச்சையாக
விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு பகுதிக்கு ஒளி வட்டம் தர இன்னொரு
பகுதியை இருட்டடிப்பு செய்வது சரியல்ல. கற்பனைக்கதைதானே என்று இதனை ஒதுக்கி விட
முடியாது. கதாநாயகனின் ஆசான் மறுக்கையில் இறுதியில் அவனுக்கு பயிற்சி கொடுத்து
தயார் செய்பவரை மீனவராக காண்பித்தது தவறுக்கான சிறு பிராயச்சித்தம் என்று
சொல்லலாம்.
அவசர நிலைக்கு எதிராகத்தான் திமுக இருந்தது என்பதும் அன்றைய
சர்வாதிகார ஒன்றிய அரசுக்கு எதிரானவர்களுக்கான சரணாலயமாக தமிழ்நாடு இருந்தது
என்பதும் மறுக்க முடியாத உண்மை. திமுக அரசு கலைக்கப்பட்ட பின்பு கைது படலங்கள்
நிகழ்ந்தது என்பதும் அவற்றை பதிவு செய்ததும் சரிதான். இவற்றை எல்லாம் சரியாக சொன்ன போது அவசர
நிலைக்காலத்தில் தாக்குதலுக்குள்ளான இன்னொரு பகுதியான செங்கொடி இயக்கம் பற்றி
கண்டு கொள்ளாமல் இருந்ததால் உருவான ஆதங்கம் நியாயமே.
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் அனைவருமே அதிமுகவினரா என்று
தெரியாது. ஆனால் இந்நாளைய பல கல்வி வள்ளல்களின் ரிஷிமூலம், நதி மூலம்
தேடிப்பார்த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.ஜி.ஆர் காலத்து சாராய உற்பத்தியாளர்கள்
மற்றும் வினியோகஸ்தர்கள் என்பதும் ஒரு யதார்த்தம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக சார்பு படமாக
எடுக்கப்பட்டது என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவ்வளவுதான். இரண்டரை
மாதங்களுக்குள் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா?
சரி,
இப்போது திரைப்படத்திற்கு வருவோம்.
குத்துச்சண்டையை நுணுக்கமாக சொல்லியுள்ள படம் இது. படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே
உள்ளார்கள். வாத்தியாருக்கான மிடுக்கோடு பசுபதி மிரட்டுகிறார். யார் கோதாவில்
இறங்க வேண்டும் என்ற முடிவை அறிவிக்கிற, மகனின் பலவீனத்தை சொல்கிற, சீடன்
பயிற்சிக்கு வராத போது ஆத்திரப்படுகிற காட்சிகளில் எல்லாம் மிளிர்கிறார்.
ஜெயம் ரவிக்கு பேராண்மை எப்படி ஒரு புதிய பரிமாணம் கொடுத்து
தூக்கி விட்டதோ அது போல ஆர்யாவுக்கு இந்த படம். கடுமையாக உழைத்துள்ளார். ஆர்யாவின்
அம்மா, மனைவி வேடங்களில் நடித்தவர்களும் அருமையாக
நடித்துள்ளனர். வி.ஐ.பி தனுஷிற்குப் பிறகு அம்மாவின் கையால் துடைப்ப அடி வாங்கிய
கதாநாயகன் கபிலன் ஆர்யாதான்.
கபிலனை மனைவி வாடா, போடா என்று கூப்பிடுவதும் முதலிரவில்
போடுகிற குத்து டான்ஸும் தமிழ்த் திரைப்படத்திற்கு மிகவும் புதியது. நன்றாகவும்
இருந்தது. ஆமாம், கலையரசன் நல்லவரா? கெட்டவரா? குழப்பமான பாத்திரப்படைப்பு.
ஆனால் அனைவரையும் விட இத்திரைப்படத்தில் கலக்கியவர்கள்
இருவர்கள்தான்.
டேன்ஸிங் ரோஸாக நடித்தவர் குத்துச்சண்டை மேடையிலும் மற்ற
தருணங்களிலும் தன் நடன அசைவுகளாலும் நெற்றியின் மீது வந்து விழும் கர்லிங் முடி ஸ்டைலாலும்
கவனத்தை ஈர்க்கிறார். எதிர்காலம் இவருக்கு
நன்றாக இருக்கும்.
எம்.ஆ.ர்.ராதா தோற்றத்தில், வசன உச்சரிப்போடு டேடியாக படம்
முழுதும் ஜான் விஜய் கலக்குகிறார். எரிச்சலூட்டும் போலீஸ்காரராக வந்து
கொண்டிருந்தவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்பு முனை.
செட் என்பதே தெரியாவண்ணம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வட
சென்னையை உருவாக்கிய கலை இயக்குனருக்கும் படத்தின் இயல்பை குலைக்காத
இசையமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.
விளையாட்டு தொடர்பான எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும்
கதாநாயகனோ/நாயகியோ அல்லது அவர்கள் அணியோ இறுதியில் வெற்றிதான் பெறுவார்கள் என்பது
எழுதப்படாத ஆனால் மிக அழுத்தமாக பின்பற்றப்படும் ஒரு விஷயம். சார்பட்டா
பரம்பரையும் இந்த எழுதப் படாத விதிக்கு விலக்கல்ல. ஆனால் நடுவில் சில நிமிடங்கள்
தவிர பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தை நிலைக்க வைத்திருந்ததுதான். அதற்காக இயக்குனர்
பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சில பலவீனங்களும் குறைகளும் விமர்சனங்களும் இருந்த போதிலும் சார்பட்டா போன்ற விளிம்பு நிலை மக்களைக்
குறித்த திரைப்படத்தை உழைக்கும் மக்கள்
ஆதரிக்க வேண்டும்.
நாம் அதை செய்யத் தவறினால் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள்,
ஆதிக்க சக்திகள் ஒரேயடியாக அடித்து துவைத்து இது போன்ற படங்களை எதிர்காலத்தில்
யாரும் எடுக்க துணியாத அளவு செய்து விடுவார்கள், மத்யமர் சங்கிகளின் கருத்துக்களை மாதிரிக்குப்
பாருங்கள்.
அப்படியே வந்தாலும் கூட, இது போன்ற எதிர்மறை கருத்துக்களை
இவர்களே திட்டமிட்டு உருவாக்கி அந்த படைப்பை முடக்கி விடும் ஆபத்து உள்ளது.
அதற்காகவேதான் திரைப்பட தணிக்கைச் சட்டங்களில் மாற்றங்களை
உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.
அவை பற்றிய ஒரு விரிவான பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்..
No comments:
Post a Comment