Monday, July 26, 2021

சமூகப் பொறுப்பு என்பது . . . .


கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் படி தமிழ்நாட்டிற்குள் செலவு செய்ய வேண்டிய நிதியை கங்கையை சுத்தம் செய்ய தமிழகத்தின் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுப்பி வைத்தது பற்றி இரண்டு நாட்கள் முன்பாக எழுதியிருந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள கார்ப்பரேட்  நிறுவனங்கள் இன்றைய சூழலில் தாங்கள் செலவழிக்கும் அந்த சொற்பத் தொகைக்குக் கூட எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே,கனகராஜ் அவர்கள் எழுதியிருந்த சிறப்பான பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 *நாளொரு கேள்வி : 23. 07. 2021*


வரிசை எண் : *418*

இன்று நம்மோடு சி. பி. எம் மாநில செயற்குழு உறுப்பினர் *கே. கனகராஜ்*
##########################

*கை கால் கட்டி கடலில் வீசுவோம்... கரையேறி வா* 

//கேள்வி//

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (CSR) உண்மையான சமூக பொறுப்புணர்வுடன் பயன்படுத்த உடனடியாய் தேவைப்படும் நடவடிக்கைகள் என்ன? 

*கனகராஜ்*

கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வை சட்டப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் மற்றும் *முந்தைய மூன்று ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பெருநிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் 2 சதவிகிதத்தை சமூக நல நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும்* என்று சட்டம் இயற்றப்பட்டது.

பல நிறுவனங்கள் அதை செலவு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு. சேவைகளுக்கு செலவு செய்வதை விட அதை விளம்பரப்படுத்துவதற்கு கூடுதலாக செலவு செய்கிறார்கள் என்கிற விமர்சனமும் உண்டு. 
இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கு செலவழிக்கிற நிறுவனங்கள், இதுவரையிலும் செலவிடாத நிறுவனங்கள், சட்டப்பட்டி செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் தாமாக முன்வந்து செலவழிக்கும் நிறுவனங்கள் என *இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.*

குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையிலிருந்து *ஒரு குறிப்பிட்ட துறை மீண்டுவர உதவினால்* சமூக பொறுப்புணர்வோடு இது செலவழிக்கப்பட்டதாக இருக்கும். அந்த துறை மருத்துவத் துறை. தொலைநோக்கில் தமிழகத்திற்கு ஒரு மிகச் சிறந்த  கட்டமைப்பைக் கொடுத்ததாகவும் இருக்கும்.

தமிழகத்தில் *துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனைகள், சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் என ஒழுங்கமைக்கப்பட்ட, கீழிருந்து மேல் வரிசைப்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.*

நவீன தாராளமயக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு *இந்தக் கட்டமைப்புகள் போதுமான கவனிப்பின்றியும், சீர்குலைக்கப்படும் வகையிலும் நிதி ஆதாரங்கள் வெட்டப்பட்டன.* இது தமிழகத்துக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. ஆயினும், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டியமைக்கப்பட்ட இந்த மருத்துவக் கட்டமைப்பு தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறது. ஆயினும், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது இதிலுள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன. இத்தனைக்கும் மத்தியில் தமிழகத்தில் செலவழிக்க வாய்ப்பற்ற மக்களையும் கீழ் நடுத்தர, நடுத்தர பிரிவினர்களில் பலர் என *லட்சக் கணக்கான மக்களை உயிர் பிழைத்திருக்க வைத்தது இந்தக் கட்டமைப்புதான்.*

அநேகமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் (எங்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன் இருக்கிறதோ அங்கெல்லாம்) *எம்ஆர்ஐ ஸ்கேன் எந்திரம் தனியார் கையில்தான் உள்ளது.* அதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.
பல மருத்துவமனைகளில் கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதி, நோயாளிகளின் உதவியாளர்கள் உணவு அருந்துவதற்கான ஏற்பாடு, நோயாளிகளுடன் தங்க வாய்ப்பில்லாதவர்கள் இரவு நேரங்களில் உறங்குவதற்கும், பகல் நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும், குளிப்பது உள்ளிட்ட கடன்களை செய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் இல்லை.

இதேபோன்று *ஆக்சிஜன் சேமித்து வைப்பதற்கும் வசதி இல்லாத* மருத்துவமனைகளும் இருக்கின்றன. படுக்கை பற்றாக்குறை, விரிப்புகள் பற்றாக்குறை என பற்றாக்குறைகள் நீள்கிறது. ஆனால், இவை எல்லாம் கடந்து இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அரசு மருத்துவ சேவைகள் சிறப்பாகவே இருக்கின்றன என்று சொல்ல முடியும்.

பல நாடுகளில் மருத்துவத்திற்கு *ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம்* வரை ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் அளவிற்கே இருக்கிறது.  இந்நிலையில் மாநில அரசு தனக்குள்ள நிதியாதாரத்தைக் கொண்டு மிகப் பெரிய மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது. *தன்னளவில் வரி விதிப்பதற்கான அதிகாரம் எதுவும் மாநில அரசின் கையில் இல்லை.* கடன் வாங்குவதிலும் கூட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தனியார்மயமாக்கல், கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளும் ஒன்றிய அரசால் விதிக்கப்படுகின்றன. எனவே, *கையையும் காலையும் கம்பி கொண்டு கட்டி கடலில் தூக்கி எறிந்துவிட்டு கரையேறி வா* என்று மாநிலங்களுக்கு சவால் விடும் நிலையில்தான் ஒன்றிய அரசின் நிதிக் கொள்கையும் இதர கொள்கை முடிவுகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழக அரசு  கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதியை ஒதுக்கும் நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றோடும் தமிழகத்தில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளோடும் *ஒரு உரையாடலை துவக்குவது நல்லது.*

அடுத்த 5 ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி முழுவதையும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டுமென்று நிறுவனங்களைக் கோரலாம். இதைப் பயன்படுத்திக் கொள்வது தவிர சில நிறுவனங்கள் கட்டிடங்களோ, எந்திரங்களோ கொடுத்து உதவ முன்வருவார்களே என்றால் உரிய முறையில் அவர்களை கவுரவிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு முன்வைக்கலாம். இதை செய்யும்போதே தமிழகத்தின் வசதியுள்ள பிரிவினர் இந்த உன்னதமான நோக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு முன்வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

//இது நிரந்தர தீர்வு இல்லை. உடனடி நிவாரணம் ஆக அமையும். அவசர காலங்களில் சிறு சிறு உதவிகள் கூட 'ஞாலத்தின் மாணப் பெரிது. (செ.வா)//

*******************
*செவ்வானம்*

பிகு : எங்கள் வேலூர் கோட்டச் சங்கம், சுமார் 450 உறுப்பினர்கள் கொண்ட  ஒரு சின்ன தொழிற்சங்கம், கார்ப்பரேட் நிறுவனம் கிடையாது. லாபமோ, உபரியோ கிடையாது. உறுப்பினர்கள் அளிக்கும் சந்தாவும் முக்கியத் தருணங்களில் அவர்கள் அளிக்கும் நன்கொடையும்தான் எங்களின் ஆதாரம்.

கொரோனா முதல் அலையின் போது முத்லமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு அறைகூவல் விடுத்தோம். தமிழகத்தில் ரூபார் 5,75,000 மும் புதுச்சேரியில் ரூபாய் 83,500 ம் திரட்டித்தந்தோம்.

கொரோனா நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருஹ்துவ உபகரணங்கள் வாங்கி அளிப்பதென்று  முடிவு செய்து ரூபாய் 1,05,000 அளவில் வழங்கி உள்ளோம். இன்னும் இப்பணி முடியவில்லை. கடலூர். கள்ளக்குறிச்சி, புதுவை, வேலூர் ஆகிய மையங்களில் பொருட்களை அளிக்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே மேலே உள்ளது.

No comments:

Post a Comment