Friday, March 26, 2021

நிர்மலா அம்மையார் எப்போதுமே . . . .




 *நாளொரு கேள்வி: 24.03.2021*


இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*
######################

*கேள்வி:*

இன்சூரன்சு சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் எவ்வளவு  உண்மைகள் இருந்தன?

*ஆர். தர்மலிங்கம்*

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவின் விவாதத்தில் கலந்து கொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நான்கு அம்சங்களை 
குறிப்பிட்டு பேசினார்.

*ஒன்று...* அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்பட்டால் இன்சூரன்சு பரவலாக்கம் வேகமாக இருக்கும் என்றார். நிதியமைச்சர்களின் இந்த வாதத்தை காலகாலமாக கேட்டுவருகிறோம். 1999 ல் இன்சூரன்சு துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அந்நிய நேரடி முதலீட்டிற்கு 26 சதம் வரம்பு
நிர்ணயித்த அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவும் இதைத்தான் கூறினார். பின்னர் 2015 ல் 26% லிருநது 49% மாக உயர்த்திய போதும் அன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இதையே 
சொன்னார்.தற்போது 2021ல் நிர்மலா சீதாராமனும் இதையே பேசுகிறார்.

இன்சூரன்சு வணிகத்தின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே இன்சூரன்சு பரவலாக்கமும், வளர்ச்சியும் இருக்கும். *வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி, சேமிக்கும் திறன் மேம்படாமல் பரவலாக்கம் சாத்தியமல்ல.*

இன்று மத்திய அரசின் தவறான தாரளமய கொள்கை காரணமாக வேலைவாய்ப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய தனிநபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.1.35 லட்சம். இதன்படி ஒரு தனிநபரின் மாத வருமானம் ரூ.11000 மட்டுமே.மக்களின் வாங்கும் சக்தியும்,சேமிக்கும் திறனும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 
சூழலில் அந்நிய முதலீட்டை உயர்த்துவதால் மட்டும் இன்சூரன்சு பரவலாக்கம் வேகமாக நடந்து விடாது.

*இரண்டு...* அந்நிய நேரடி முதலீடு குவியும் என்கிறார். நிதியமைச்சரின் எதிர்பார்ப்பாக வேண்டுமானால் இது இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இது நடக்க போவதில்லை. 1999 ல் இன்சூன்சு துறையில் 26% அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தால்   ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் முதல் 1.5  லட்சம் கோடி வரை வரும் என்றார் அப்போதைய துணைப்பிரதமர் *எல்.கே.அத்வானி.* ஆனால் இந்நாள் வரை இன்சூரன்சு துறையில் வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு வெறும் ரூ.26 ஆயிரம் கோடி மட்டுமே.

*மூன்று...* அந்நிய நேரடி முதலீடு 74% மாக உயர்ந்தாலும் உள்நாட்டு சேமிப்பின் மீதான அரசின் கட்டுப்பாடு அப்படியே இருக்கும்;
அந்நிய நேரடி முதலீடு உயர்வு கட்டாயமல்ல, அது அந்தந்த கம்பெனிகளின் விருப்பம்; மேலும்   கம்பெனியின் இயக்குனர் குழுவில் 50 சதமான இயக்குநர்கள் உள்நாட்டில் வசிப்பவர்களாக இருப்பார்கள்;
இந்தியாவில்   திரட்டப்படும் நிதியை இங்கேதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளோம் எனக் கூறுகிறார்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பாஜக அரசின் இலக்கு 100% அந்நிய நேரடி முதலீடு என்பதே.
ஆனால் அதில் அவர்களால் வேகமாக  முன்னேற முடியாததோடு சில கட்டுப்பாடுகளை விதிக்க   வேண்டிய நிலைக்கு  காரணம் நமது போராட்டங்கள்தான். ஆனால் *இந்த கட்டுப்பாடுகள் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதே நமது கேள்வி!*

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கோ அல்லது மக்களுக்கு சேவை செய்வதோ  அந்நிய மூலதனத்தின் நோக்கமாக ஒரு போதும் இருக்க முடியாது. 

நிதி மூலதனத்திற்கு லாபம் எங்கே கிடைக்குமோ அங்கே பறந்து செல்லும். சந்தையில் லாபம் ஈட்டுவதே  பிரதான நோக்கம். இதுதான் நிதி மூலதனத்தின் இயல்பான குணாம்சம். இன்று இன்சூரன்சு துறையில் 74% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்து இந்திய மக்களின் சேமிப்புகளை பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கு மத்திய பாஜக அரசு இரையாக்கியுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தாமல் வங்கிகளை நெருக்கடிக்கு தள்ளிய விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களையே கட்டுப்படுத்த
முடியாத இவர்கள் அந்நிய மூலதனத்தை கட்டுப்படுத்துவோம் 
என்று சொல்வது வேடிக்கைதான்.

*நான்கு...* பொதுத்துறை இன்சூரன்சு நிறுவனங்களின் சந்தை பங்கு வெறும் 38.78% மட்டுமே.
தனியார் கம்பெனிகளின் சந்தை பங்கு 48.03% மாக உள்ளது என கூறி முழுப் பூசணிக்காயை  சோற்றில் மறைத்துள்ளார் நிதியமைச்சர். 

ஆயுள் காப்பீட்டில் 24 தனியார் 
கம்பெனிகள் உள்ளன.இதில் எஸ்.பி.ஐ. லைப், ரிலையன்ஸ் தவிர மற்ற  கம்பெனிகள் அனைத்தும் அந்நிய பகாசுர கம்பெனிகளோடு கூட்டு வைத்துள்ளன.
பொதுக்காப்பீட்டில் 27 தனியார் 
கம்பெனிகள் இருக்கின்றன.
6 பொதுத்துறை பொதுக்காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சந்தை பங்கு என்று சொல்லும் போது ஆயுள் காப்பீட்டையும்,
பொதுக்காப்பீட்டையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். ஏனெனில் ஆயுள் காப்பீடு நீண்ட கால முதலீடாகும்.
பொதுகாப்பீடடு குறுகிய அல்லது குறிப்பிட்ட கால முதலீடாகும்.

பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை பங்கு 38.78% மற்ற தனியார் கம்பெனிகளின் சந்தைப் பங்கு தனித் தனியே 10 % க்கும் குறைவே. பொதுக்காப்பீட்டில்  தனியார் கம்பெனிகளில் முதலிடத்தில் இருக்கும்    *ஐசிஐசிஐ லொம்பார்டின்* சந்தைபங்கு 7.6 % மட்டுமே. மற்ற கம்பெனிகள் இதற்கும் கீழேதான் உள்ளன.உண்மை இவ்வாறிருக்க பொதுத்துறை இன்சூரன்சு நிறுவனங்களின் சந்தை பங்கு தனியாரைவிட குறைவு என சொல்வது விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியாகும்.

ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை எல்.ஐ.சி. தொடர்ந்து சந்தை பங்கில் முதலிடத்தில் இருக்கிறது. 31.3.2020 ஐ.ஆர்.டி.ஏ. அறிக்கையின்படி பாலிசி எண்ணிக்கையில் *எல்.ஐ.சி.யின் சந்தை பங்கு 75.90%.*
முதல் வருட பிரிமிய வருவாயில் 68.74%  ஆகும். கடந்த இருபது வருடங்களாக போட்டியை வெற்றிகரமாக எதிர் கொண்டு ஆயுள் காப்பீட்டு சந்தை பங்கில் முதலிடத்தில் இருக்கும் எல்.ஐ.சி. சந்தை பங்கின் உண்மைகளை சொல்ல நிதியமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

இன்சூரன்சு துறையில் எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பையும்,தனியார் கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில்  விரிவான விவாதத்தை நடத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய    நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர்  அந்நிய மூலதனத்திற்கு ஆதரவாக  நின்று வாதாடியதை  நாடு ஒரு போதும் மறக்காது.

*செவ்வானம்* 

No comments:

Post a Comment