Sunday, March 7, 2021

பீட்சாவைப் போன்று இந்தியர்கள்

நேற்று இந்த நூல் அறிமுகம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த நூலையும் தேடி வாங்கியிருக்கலாமே என்று ஏங்க வைத்த நூல் அறிமுகம். வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்




 *வாரம் ஒரு நூல்*


7.3.2021.

*ஆதி இந்தியர்கள்*

*டோனி ஜோசஃப்* (தமிழில் : PSV குமாரசாமி)

*நூல் அறிமுகம்*

*களப்பிரன்*
*தஞ்சை*

இந்திய அறிவியல் மாநாட்டில் நாட்டின் பிரதமரே அறிவியலுக்கு விரோதமான பல்வேறு புராணக்கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார். 12ஆயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைக்கப்போகிறோம் என்று மத்திய அரசு சொல்கிறது. அந்தக்குழுவின் நோக்கம் *”ஆரியப்பண்பாடே இந்தியப்பண்பாடு”* என்று நிறுவுவதுதான் என்று அந்தக்குழுவில் இருந்த ஒருவர் ஆய்வு தொடங்கும் முன்பே அறிவிக்கிறார். நித்தம் ஒரு அமைச்சரோ, ஆளும் கட்சியின் பிரமுகரோ தங்கள் அறிவு சார் வாந்தியை மக்களின் மத்தியில் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்களும் அதையே ஊதிப்பெருசாக்கிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு புதிய கல்விக்கொள்கையும் எதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கூட கொள்கையாக வகுத்துக்கொண்டு தயார் நிலையில் இருக்கிறது. இந்தச்சூழலில் நாமெல்லாம் நம்மை அனுதினமும் தாக்கவரும் பயங்கரமான அந்தக் கொடிய சிந்தனை கிருமிகளிடமிருந்து நம் பிள்ளைகளை பாதுகாத்தாக வேண்டும். அதற்கான மிகச்சிறந்த தடுப்பு மருந்துகளில் ஒன்றாக *டோனி ஜோசப்* எழுதிய *ஆதி இந்தியர்கள்* நூலை சொல்லலாம்.
அப்படி என்ன இதுவரைக்கும் சொல்லாததை டோனி ஜோசப் சொல்லிவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். பல சிந்தனையாளர்கள் சொன்னதை தொகுத்துத்தான் இவர் இந்த நூலில் சொல்லியிருக்கிறார் என்றாலும், அவை அனைத்தும் ஒரு சேரக்கிடைப்பதும், அதுவும் நிகழ்கால கண்டுபிடிப்புகளோடு இணைந்து கிடைப்பதும் அரிதினும் அரிது. *இந்தியா குறித்து அண்ணல் அம்பேத்கர் தொடங்கி டி.டி.கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்தியா என்று  இன்றைய ரொமிலா தாப்பர் இர்பான் ஹபீப்* வரை நீண்டு கொண்டே செல்லும் ஆய்வாளர்கள் எல்லோருமே தங்கள் காலத்தின் பங்களிப்புகளை நம் கைகளில் நிறைவாகவே  வழங்கியுள்ளார்கள். இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் காலத்தில் கிடைக்காத மரபு வழி சோதனை உள்ளிட்ட பல புதிய அறிவியல் வாய்ப்புகள் கிடைக்கின்ற காலமாக இது இருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்தி இந்த நூலை நமக்குத் தந்திருக்கிறார் டோனி ஜோசப். இன்னும் சொல்லப்போனால் தகப்பனின் தோள் மீது அமர்ந்துகொண்டு உயரத்தை பார்க்கும் மகனுக்கு ஒப்பானது டோனி ஜோசப்பின் இந்த நூல்.

*ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு,* என்று ஒற்றைக்கலாச்சாரத்தை முன்வைத்துக்கொண்டு ஒரு தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தம் கோலோச்சும் இன்றைய சூழலில், அதற்கு நேர் எதிராக இந்தியாவை இந்தியர்களை *கலப்பினங்களின் கூட்டுக்கலவை* என்று அறிவியல் பூர்வமாக நிறுவுகிறது இந்நூல். 12ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கத் துடிக்கும் மத்திய அரசிற்கு சொல்லப்படும் பதிலைப்போல, இந்நூல் இந்திய வரலாற்றை 65ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. இன்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நவீன மனிதன், ஆப்ரிக்காவிலிருந்து தனது பயணத்தை தொடங்கி இந்தியத் துணை கண்டத்திற்கு வந்து சேர்ந்ததையும், அந்த இனம் உலகம் முழுவதும் எந்தெந்த காலத்தில், எங்கெங்கு குடியேறியது என்று சொல்லும் வழித்தடமும் இந்த நூலில் காட்சிப்படுத்துகையில் இதுவரை நாம் நம்பிக்கொண்டிருந்த பல்வேறு  நம்பிக்கைகளில் புதிய வெளிச்சத்தை காட்டுகின்றன. 

இந்த நூலை வாசிக்கும் போது, உங்கள் அருகில் ஒரு உலக வரைபடத்தை வைத்துக்கொள்வது நிலவியலாக நீங்கள் உள்வாங்குவதற்கு வசதியாக இருக்கும். புதிய கண்டம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியாவிற்கு 63000 ஆண்டுகளுக்கு முன்பே சென்ற நவீன மனிதன், ஐரோப்பாவிற்கு 45000 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்றான் என்ற நகை முரண் உள்ளிட்ட பல இந்நூலின் முதல்பகுதியில் உள்ளது. 

அதே போல முதல் உழவுத்தொழில் எந்தப்பகுதியில் தோன்றியது என்றும், அந்தக்குழு எப்படி இந்தியத் துணை கண்டத்தில் வந்து ஏற்கனவே இங்கு குடியமர்ந்திருந்த மூதாதையர்களோடு தங்களையும் கலந்து பரவியது என்பதும் இரண்டாவது பகுதியாக சொல்லப்பட்டிருக்கும். மூன்றாவது பகுதி மிக விரிவாக ஹரப்பா நகரவாசிகள் குறித்து பேசியிருக்கும். அவர்கள் தான் முதல் நகரவாசிகள் என்றும், ஹரப்பா நகரம் அழிந்த பிறகு அந்த நகர நாகரிகம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இந்தியாவிற்குள் கலப்பினமாக கலந்து, இன்றைய தென்னிந்திய பண்பாட்டில் இருக்கிறது என்பதையும் சொல்லுகிறது. சிந்துவெளிப்பண்ட்டை *திராவிடப்பண்பாடு என்று சொல்லும் ஐராவதம் தொடங்கி, இன்றைய பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்* வரை முன்வைக்கும் கருத்துக்களுக்கு இவை வலு சேர்க்கிறது. 

நான்காகவது பகுதி தான் மிகவும் முக்கியமான ஆரியர்களின் குடியேற்றம் குறித்து பேசுகிறது. அவர்களை இறுதிக்குடியேறிகள் என்றே அவர் சொல்கிறார். இந்தப்பகுதி மிகவும் எச்சரிக்கையோடு கையாண்ட பகுதியாக வாசிக்கையில் உணரமுடிந்தது. ஸ்டெப்பி புல்வெளிப்பகுதிகளான இன்றைய கருங்கடலுக்கு மேலான மத்திய ஆசியாவிலிருந்து தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தோ ஐரோப்பிய இனக்குழுக்கள் கஜகஸ்தானுக்கு வடக்காக நகர்ந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் இந்துகுஸ் மலைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த காலத்தை மிகத்துள்ளியமாக கிமு 2000க்கு நெருக்கமாக அறிவியல் துணை கொண்டு நிறுவுகிறார். ஆரியர்களும் எவ்வாறு ஏற்கனவே கலப்பினமாக இருந்த இந்தியர்களோடு இரண்டாயிரம் ஆண்டுகள் தங்களை கலப்பினமாக தொடர்ந்தார்ந்தார்கள் என்றும், அதற்குப்பின் சாதி அமைப்பு முறை எப்போது தோன்றியது என்றும் துள்ளியமாக சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் இந்திய வரலாற்றை ஓரளவுக்கேனும் துள்ளியமாக தெரிந்துகொள்ள விரும்புவோர் இந்நூலை அவசியம் வாசிக்கவும். 

இன்றைய இந்தியர்கள் யார் என்று டோனி ஜோசப் மொழியில் சொல்வதானால் *”இந்தியர்கள் ஒரு பீட்சாவை* போன்று இருக்கிறார்கள். 65000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவிலிருந்து வந்த நவீன மனிதர்கள் பீட்சாவின் அடித்தட்டாக இருக்கிறார்கள். கி.மு.7000 ஆண்டுகளில் ஜாக்ரோஸ் மேய்ப்பர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டபோது, அடி ரொட்டியின் மீது சாஸ் பரப்பப்பட்டது. அந்த சாஸ் ஹரப்பா வீழ்ச்சிக்குப்பிறகு இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் வழிந்தோடியது. கி.மு.2000க்குப் பிறகு வந்த ஆரியர்கள் அதன் மீது தூவப்பட்ட சீஸை போல் இருந்தார்கள். தென்னிந்திய தட்டில் குறைவாகவும், வட இந்தியத்தட்டில் கூடுதலாகவும் அந்த சீஸ் தூவப்பட்டது என்று இந்திய அதிகார அடுக்குகளை பீட்சாவோடு எளிமையாக காட்சிப்படுத்தியிருப்பார். அடுக்காக இருக்கும் இந்தியா தனது தேக்க நிலையை உடைக்க வேண்டுமென்றால் அவைகள் மீண்டும் கலக்கும் பணியை தொடங்கவேண்டும் என்றும் சொல்லி முடித்திருப்பார். *”இந்த மண்ணின் வந்தேரிகள் யார்?* *இந்த மண்ணின் பூர்வகுடிகள் யார்?”* என்கிற இரத்தப்பரிசோதனை நடந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் ஒருவர் ”நாம் அனைவருமே இந்த மண்ணில் வந்தேறிகள் தான். என்ன கொஞ்ச முன்னபின்ன வந்தோம்” என்றும், ”நாம் எல்லோருமே கலப்பினத்தால் பிறந்தவர்கள் தான், ஆகவே *கலப்படமில்லாத சுத்தமான சாதியில் பிறந்தவர்கள் யாருமே கிடையாது”* என்றும் டி.என்.ஏ. ஆய்வு முடிவுகளோடு நூலை விட்டு வெளியேறுவார்கள். 

இந்த நூலுக்காக உலகின் தலைசிறந்த தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், மரபியல் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த தலை சிறந்த ஆய்வாளர்களையும், அவர்களது ஆய்வுகளையும் தேடித்தேடி வாசித்தும், தொகுத்தும் கொடுத்திருக்கிறார் டோனி ஜோசப். நம்மால் அத்தனை ஆய்வு நூல்களையும் தேடி வாசிக்க இயலாது. ஆகவே இந்த நூலையேனும் நாம் வாசித்துவிட வேண்டும். இந்த நூலின் ஆசிரியர் டோனி ஜோசஃப் “பிசினஸ் வேல்ட்” இதழின் முன்னாள் ஆசிரியர். இந்த நூல் 2018ஆம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளிவந்தது. அப்போதே பேசுபொருளாக இருந்த இந்த நூல், தற்போது *தமிழில் PSV குமாரசாமி* மொழிபெயர்ப்பில் சிறப்பாக வந்துள்ளது. கடினமான பதங்களை கூட படிப்பதற்கு எளிதாக மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறார் குமாரசாமி. 

*மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்* வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை ரூ.350/- மட்டுமே. இணையத்திலும் கிடைக்கிறது. 10வயதை தாண்டிய எந்தத்துறை சார்ந்த ஆர்வமான பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்கள் இந்த நூலை தமிழிலோ, ஆங்கிலத்திலோ வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டின் ஆகச்சிறந்த பரிசாக இந்த நூல் அவர்களுக்கு இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதைப்போல இந்த நூலோடு ஒரு உலக வரைபடத்தையும், இந்திய வரைபடத்தையும் இணைத்து வாங்கிக்கொடுத்தால் கூடுதல் சிறப்பு. இந்த நூலை முழுமையாக உள்வாங்கி வாசித்து முடிக்கும் ஒருவரால் வேற்றுமை பாராட்டவே முடியாது. ஒற்றுமையாக மக்கள் வாழத்தானே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

*செவ்வானம்*

No comments:

Post a Comment