Wednesday, March 10, 2021

வரலாற்றில் புதிய திறப்பு...

 ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை



வரலாற்றில் புதிய திறப்பு...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாய்வு அறிக்கை17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது
மகிழ்ச்சிக்குரியது.

தமிழக தொல்லியல் ஆய்வில் புதிய திறப்புகளை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தும் என்பது உறுதி. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் 1876ஆம் ஆண்டு முதன்முதலில் அகழ்வாய்வு நடைபெற்றது.

டாக்டர் ஜாகோர் என்பவர் தலைமையில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் ஜெர்மன் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதைத் தொடர்ந்து 1902 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் இரியா நடத்திய ஆய்விலும் நூற்றுக்கணக்கான தொல் எச்சங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் சென்னையில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்று தமிழ் ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இந்த நியாயமான கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.

ஒரு வழியாக 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடைபெற்றது. எனினும் இதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அகழ்வாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்என வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த மத்தியபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த பின்னணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தற்போது மத்திய தொல்லியல் துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இணையவழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளது.இதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளது நியாயமான ஒன்றாகும். இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

1920ஆம் ஆண்டு சிந்து சமவெளி நாகரிகத்தை ஆய்வு செய்த வங்கதேச அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்று கூறியிருந்தார். எனினும்மத்திய, மாநில அரசுகள் இந்த அகழ்வாய்வில் கவனம் செலுத்தவில்லை.

தமிழகத்தில் கீழடி உட்பட அகழ்வாய்வு பணிகளை முடக்குவதிலேயே பாஜக கூட்டணி அரசு குறியாக உள்ளது. மாநில தொல்லியல் துறைசார்பில் சில இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ள நிலையில், மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ள இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம். ஒட்டுமொத்த ஆய்வுகள் வெளிவரும் போதுஇந்திய வரலாறு திருத்தி எழுதப்படும் என்பது உறுதி
— தீக்கதிர் தலையங்கம்

No comments:

Post a Comment