இன்று சர்வதேச மகளிர் தினம். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கான தினமல்ல என்றும் போராட்டத்தின் பின்னணியில் உதித்ததுதான் மகளிர் தினம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நினைவு படுத்த வேண்டிய அளவிற்கு வணிக நிறுவனங்களும் ஊடகங்களும் உருவாக்கி விட்டன.
இப்போது என்ன முக்கியம்?
பெண்களுக்கான பாதுகாப்பு.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான "தேசிய குற்ற ஆவண மையம்' ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட குற்றங்களைப் பற்றிய புள்ளி விபரங்களை வெளியிடும். கடைசியாக 2019 ம் ஆண்டுக்கான அறிக்கைதான் காலதாமதமாக வந்தது. சமீப வருடங்களில் இந்த தாமதம் வாடிக்கையாகி விட்டது. SNAP SHOTS மட்டும் முன்பு எடுத்து வைத்திருந்தேன். முழுமையான விபரங்கள் பார்க்கலாம் என்று நேற்று முதல் முயற்சிக்கிறேன். அந்த இணைய தளமே முடங்கி இருக்கிறது.
இருக்கும் தகவலை மட்டும் பகிர்கிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018 ல் 3,78,236 என்று இருந்தது 2019 ல் 7.3% உயர்ந்து 4,05,861 ஆக மாறியுள்ளது. பாலியல் வன் கொடுமைகள் 7.9 % உயர்ந்துள்ளது.
இந்த தகவல் காவல் நிலையத்தால் முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டவை மட்டுமே. குடும்ப பஞ்சாயத்து, ஊர்ப் பஞ்சாயத்து, போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து போன்றவற்றால் சட்டத்தின் கணக்கிற்குள் வராதவை இவை போல பல மடங்கு இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.
பாலியல் கொடுமைக்கு உள்ளாகி முதுகெலும்பு நொறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்துக்கே தெரியாமல் எரிப்பதும், பிரச்சினை பெரிதாகிப் போகும் போது அன்னிய சதி என்று திசை திருப்புவதுமே ஆட்சியாளர்களின் பாணியாக இருக்கிறது.
உனாவ், ஹாத்ராஸ் என்ற ஊர்களில் சம்பவங்கள் நிகழ்ந்தது என்ற செய்திகளை படிக்கையில் பழைய செய்தி என்று கடந்து போவோம். ஆனால அவை புதிய கொடூரங்களாக இருக்கும்.
ஐ.பி.எஸ் அதிகாரிக்குக் கூட பாதுகாப்பில்லை என்பது தமிழகத்தின் சமீபத்திய உதாரணம். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஆட்சியாளர்கள், டி.ஜி.பி யை மட்டும் விட்டுக் கொடுத்து விடுவார்களா?
பெண்கள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்த நீதியரசர் வர்மா ஏராளமான பரிந்துரைகளை அளித்தார். குற்றங்களை அதிகப்படுத்த வழி வகை செய்கிறார் இன்றைய தலைமை நீதிபதி.
இன்று மகளிர் தினம் அனுசரிக்கையில் நாம் உரக்க குரல் கொடுக்க வேண்டிய முழக்கம் என்பது
மத்திய மாநில அரசுகளே,
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்,
குற்றங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு.
குற்றவாளிகள் யாராக இருப்பினும் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்து.
இது எப்போது சாத்தியமாகும் எனில்
நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் போதுதான்.
அதனால் இன்னும் அழுத்தமாகச் சொல்வோம்.
மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதாவை மக்களவையிலும் நிறைவேற்றி உடனே அமலாக்கு.
மீண்டும் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment