Thursday, March 11, 2021

நான் அறிந்த வரலாறு உங்களுக்கும்

குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முக நூல் பதிவு மூலம் நான் அறிந்து கொண்ட ஒரு வரலாற்றுத் தகவலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்



 சகுந்தலா தேவி(என்ற)ஏசுவடியாள்.....

மார்பு மறைக்கும் போராட்டம், ஊழியம் என்ற அடிமை வேலை எதிர்ப்பு போராட்டம், ஓலைப் போராட்டம் என்று, திருவிதாங்கூர் சமஸ்தானம் கொந்தளித்துக்கொண்டிருந்த காலம் அது....

மனு தர்மத்தின் பாதுகாவலர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காரணமாக, மன்னர் ஆட்சி, வேறு எந்த வழியும் இல்லாத சூழலில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்கள், ஞாயிற்றுக்கிழமை மட்டும், ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய வேண்டாம் என்று உத்தரவு ஒன்றை வெளியிட்டது..

ஆனாலும் அடங்கவில்லை மனுவின் வாரிசுகள்..
விளைவு. ......
1858-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்21-ம் தேதி... ஞாயிற்றுக்கிழமை....
குமரி மாவட்டம் ஆற்றூரில், ஈஸ்வரபிள்ளைஎன்பவரும், அவரோடு வந்த நாயர்களும், பத்மனாபபுரம் அரண்மனை யானைக்கு ஓலை கொண்டு செல்ல வேண்டும் என்று நாடார் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தலையில் ஒலைச்சுமையை வைத்ததோடு அந்த பகுதி மக்கள் கொந்தளித்து, ஓலைச்சுமையை நாயர் ஒருவரின் தலையில் வைத்து அனுப்பி, எதிர் வினையாற்றினர். ...

கொந்தளித்த உயர் சாதி... நாயர் படையின் துணையோடு நரவேட்டையாடினார்கள்!நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன...

ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட னர்.

தொடர்ந்து23-ம் தேதி, தச்சன் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி மேடை மாளிகையில் நுழைந்தது நாயர் படை. ...

மார்த்தாண்ட வர்மா மன்னரின் வலது கரமாக திகழ்ந்த,1750ஆண்டு, மன்னர் மார்த்தாண்ட வர்மா உயிருடன் இருந்த போதே, அரண்மனை சதியால் படுகொலை செய்யப்பட்ட அனந்தன் நாடாரின் ரத்த சொந்தமான சகுந்தலா தேவியும் குடும்பமும் 64அறைகளைக்கொண்ட பள்ளி மேடை மாளிகையில் தான் வசித்து வந்தனர்..

நாயர் படைகள், தங்கள் வீட்டை நோக்கி வருவதை அறிந்து கொண்ட பள்ளி மேடை மாளிகையின் ஆண்கள் அனைவரும் காடுகளில் தஞ்சம் புகுந்தனர்...

வீட்டுக்குழந்தைகளை ஒரு அறையில் பூட்டிய பின்னர், சகுந்தலா தேவி, சுவரில் பொருத்தப்பட்ட வாளை கைகளில் எடுத்தார்; அதே நேரம், மாளிகையின் கதவுகள் நாயர் படையினரால் உடைக்கப்பட்டு, படை வீட்டில் நுழைந்தது.

சகுந்தலா தேவி, வாளைச் சுழற்றி வேங்கை போல் எதிர்த்து போராடினார்..
நாயர் படையின் வீரர்கள் பலரைச் சாய்த்த பின்னர், சமாளிக்க முடியாமல் துவண்டு விழுந்தார் அந்த வீராங்கனை. ..

நாயர் படை, அவரை, குதிரையின் கால்களில் கட்டி,ஏறத்தாழ4மைல் தூரம் இழுத்துச் சென்றனர்..
இறுதியில் மருதூர் குறிச்சி எனும் ஊரில், குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சகுந்தலா தேவியை, ஒரு பலாமரத்தில் தலைகீழாக தொங்க விட்டு, சித்திரவதை செய்து கொன்றனர் படுபாவிகள்......

எங்கள் மண்ணின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உயிர் தியாகம் செய்தஅனைத்து வீராங்கனைகளையும் நினைவில் கொள்வோம்.....
பெண்களுக்கு நீதி இல்லை எனில்,
சமூக நீதியும் இல்லை.
சமத்துவமும் இல்லை!
தோழிகள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த மகளிர் தின நல்
வாழ்த்துக்கள்
....

No comments:

Post a Comment