கணிணிக்கு
ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான் என்று மத்யமர் குழுவில் கூறப்பட்ட ஒரு பதிவு எப்படி பொருத்தமற்றது என்று திருமதி லட்சுமி பாலகிருஷ்ணன்
என்ற கணிணித்துறையில் பணியாற்றிய பெண்மணி அதே குழுவில் இன்னொரு பதிவின் மூலமாக எதிர்வினை
ஆற்றியிருந்தார்.
அந்த
பதிவையும் அதற்கு மத்யமர்கள் போட்டுள்ள பின்னூட்டங்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் இங்கே
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நான் இளநிலை அறிவியலில் கணிணியையும், முதுநிலையில் கணிணி பயன்பாட்டியியலையும் எடுத்துப் படித்தவள். ஆங், முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே, முதுநிலை பயின்றது தஞ்சை சாஸ்திரா கல்லூரியிலாக்கும், அப்ப அது ஷண்முகா பொறியியல் கல்லூரி.
வளாகத் தேர்விலேயே வேலை கிடைத்து, சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கே இங்கே என்று குப்பை கொட்டியதில் கடைசியாக இன்ஃபோசிஸ்ஸில் பத்தாண்டு பணி. அத்துடன் மென்பொருள் துறையிலிருந்து விருப்ப ஓய்வு.
இப்ப எதுக்கு இந்த சொந்தக் கதையெல்லாம்னு கேக்கறீங்களா? 6 வருட கல்லூரிக் காலத்திலும் சரி, 13 வருட மென்பொருள் பணி அனுபவத்திலும் சரி தினமும் கணிணியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த போதும் எனக்கு தெரிந்ததெல்லாம் பேசிக், ஃபோர்ட்ரான், கோபால்(சரோஜாதேவி கூப்பிடற கோபால் இல்லங்க, இது COBOL),பாஸ்கல், சி, சி++, ஜாவா, சி# இப்படி பல்வேறு கணிணி மொழிகளில் அறிமுகமும், சிலவற்றில் பாண்டித்யமும் உண்டு.
ஆனா ரொம்ப நாளாவே சமஸ்கிருதம்தான் கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழின்னு ஒரு புருடா ஓடிகிட்டிருக்கு. ஆரம்பத்துல அங்கங்க இதைக் கேள்விப் படும்போதெல்லாம் திக்குனு இருக்கும். என்னடா இது.. சமஸ்கிருதத்துல ப்ரொகிராமிங்க் பண்ணச் சொல்லிட்டா நாம என்ன பண்ணுறது? நமக்குத் தெரிஞ்சதெல்லாம் சமயக்கட்டு, புகை, வரதுக்குட்டின்னு மை.ம.கா.ராவில் காமேஸ்வரன் சொல்வது போல கொஞ்சமா ஆங்கிலமும், ஓரளவு தமிழும் மட்டும்தானேன்னு கெதக்குனு இருக்கும்.
அப்புறம் போகப் போகத்தான் இது வழக்கமான செயற்கைக் கோளெல்லாம் திருநள்ளாறுகிட்ட வரப்ப திகைச்சுருது வகை பீலான்னு புரிஞ்சுது. ஆனாலும் இது போன்ற புரளிகளைக் கிளப்ப ஆரம்பப் புள்ளின்னு ஒரு விஷயம் இருந்திருக்கணுமில்ல? அது என்னன்னு தேடினப்ப 1980களில் செயற்கை நுண்ணறிவு பற்றின மிக மிக ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்தப்ப ரிக் ப்ரிக்ஸ் என்பவர் Knowledge
Representation in Sanskrit and Artificial Intelligence என்கிற ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிடுகிறார். அதில் ப்ரொகிராமிங்க்கிற்கு உரிய மொழிகளின் மூலம் கட்டளைகளை அடுக்கி, நிரல் அமைத்து, அதை கம்பைலர் கொண்டு திரும்ப பைனரி கட்டளைகளாக்கி கணிணியைச் செய்ய வைக்கும் முறைகளுக்கு பதில் நேரடியாக மனிதர் பேசும் மொழியிலேயே கட்டளைகளை உள்ளீடு செய்வது என்று வந்தால், அதற்கு சமஸ்கிருதம் பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது இது ஒரு hypothesis. இப்படி ஒரு கருதுகோள் முன்வைக்கப்பட்டது. அதுவும் கூட ஏன் தெரியுமா? சம்ஸ்கிருதம் மற்ற மொழிகளைப் போல மக்களின் பேச்சுவழக்கிலிருந்து தானாக திரண்டு, பிற்பாடு இலக்கணங்களை வகுத்துக் கொண்ட மொழியல்ல. திட்டவட்டமான இலக்கண விதிகளைக் கொண்ட செம்மையான, செயற்கையான மொழி. மற்ற மொழிகளின் இலக்கண விதிகளுக்கு நிறைய விதிவிலக்குகள் இருக்கும். நெகிழ்வுத் தன்மை இருக்கும். வட்டார வழக்குகள் உருவாகி வரும். மெல்ல மெல்ல வட்டார வழக்குச் சொற்களும் இலக்கியமாகும். தமிழில் கிரா தொடங்கி நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் என்று நீளும் வட்டார வழக்கின் உச்சங்களைத் தொட்ட இலக்கியவாதிகள் போன்ற வரிசைகள் எல்லா பேசு மொழிகளுக்கும் இருக்கும். அதாவது செயற்கையாக இழுத்துப்பிடித்து வெண்டிலேட்டரில் வைத்துக் காப்பாற்றாமல், இயல்பாகவே சில நூறு மக்களேனும் அன்றாடப் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொழிகளில் வளர்ச்சியும், மாற்றமும் தவிர்க்க இயலாத ஒன்று.
அதே நேரம் சம்ஸ்கிருதம் போன்ற செயற்கையாக செம்மைப்படுத்தப்பட்ட மொழிகளில் வட்டார வழக்குகளோ, தேய்வழக்குகளோ ஏற்படாது. பேசறவங்களே கிடையாதே, அப்புறம் எப்படி மாற்றம் இருக்கும்? இதனால் கணிணியின் கறாரான செயல்பாடுகளுக்கு சமஸ்கிருதம் பொருத்தமாக இருக்கக் கூடும் என்ற கருது கோள் 80களில் இருந்தது உண்மையே.
ஆனால் மெல்ல மெல்ல யாகூ, கூகிள் போன்று விதவிதமான தேடுபொறிகளும், குறிச்சொல் மூலம் தேடும் வசதிகளும் வந்தபிறகு உலகின் எந்த மூலையிலிருக்கும் மொழியிலும் கணிணிக்கு கட்டளையிட முடியும் என்ற நிலை வந்தாகிவிட்டது. 80களில் சொல்லப்பட்ட அந்தச் சிறு ஊகம், இன்று எந்தவிதத்திலும் அர்த்தமற்ற செல்லாக்காசு.
இந்த விஷயத்தை மிகவும் மேலோட்டமாக சொல்லியிருந்த ஒரு கட்டுரையை பிபிசி தனது Myth Buster தொடரில் வெளியிட்டிருந்தது. அதன் சுட்டியை இங்கே தர முயன்றபோதுதான் மத்யமர் குழுவில் சுத்த சுயம்பிரகாச எழுத்தாளர்களின் சொந்த எழுத்துக்கள் மட்டுமே வெளியாகும் என்ற விதியை உணர்ந்து கொண்டேன். தரவுகளுக்காகக் கூட வெளி லிங்குகளைக் கண் கொண்டும் பாராத, மறந்தும் புறந்தொழா வீரர்களால் ஆனது இக்குழுமம் என்பதால் இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் சொந்தமாக நானே தட்டச்சியதே தவிர மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுத்து நான் வாங்கி வரவில்லை என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யவும் தயார். இந்தப் பதிவாவது வெளியாகிறதா பார்ப்போம்.
இப்போது பின்னூட்டங்களை படியுங்கள்.
பட்ஜெட் சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், நிர்மலா அம்மையாரின் ஒரு கருத்துக்கு
“முட்டாளுக்கு மூளையே சுமை” என்று சூடாக ஒரு பதில் அளித்திருந்தார்.
இந்த சங்கி மத்யமர்களின் பின்னூட்டங்களை படிக்கையில்
இவர்களுக்கெல்லாம் மூளை என்ற வஸ்து இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது.
சங்கிகள் தங்களை அடிக்கடி அம்பலப் படுத்திக் கொள்வதும்
நல்லதுதான்.
No comments:
Post a Comment