Wednesday, March 17, 2021

ஸ்லீப்பர் செல்கள் சூழ் பாஜக

தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மிக முக்கியமான கட்டுரை. 

மய்யத்திற்கோ, தினகரனுக்கோ, சீமானுக்கோ அல்லது சகாயத்திற்கோ நீங்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு.

எதையும் ப்ளான் செஞ்சு செய்யனும் என்று அலையும் அமித் ஷாவின் தலையிலும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வடிவேலுவின் கதியை அளியுங்கள்.



 தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்கும் விதவிதமான வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். ஒரேமாதிரியான திட்டத்தோடோ, ஒரேமாதிரியான வியூகத்துடனோ பாஜக தேர்தலை எதிர்கொள்வதே இல்லை. ஒரே நாடு, ஒரே ரோடு என்றெல்லாம் தேசம் முழுவதும் பேசுவது போன்று தெரிந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலமும் தனி நாடும் கேட்கிற கட்சிகளோடு கைகோர்த்துக்கொண்டு ஒரே நாடு கோரிக்கையை பேசாமல் இருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்தே கொல்லும் உத்தரப்பிரதேசத்தில் அப்படியாக கொலை செய்பவர்களின் கருத்தியலை ஆதரிக்கும் அதே பாஜக, கேரளாவுக்கு வந்தால் மாட்டுக்கறி குறித்து வாயே திறக்காது.

சரி, அப்படியென்றால் தமிழகத்தைப் பொறுத்துவரையில் பாஜகவின் திட்டம் எதுவாக இருக்கிறது என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும் தானே. இன்றைய தேதிக்கு என்னுடைய கணிப்பின்படி, ஆளுங்கட்சிக்கான வாக்குகளை அதிகரிப்பதற்கு பதிலாக, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுக கூட்டணிக்கு விழாமல் பல திசைகளில் அப்படியே சிதறடித்துவிடுவது தான் பாஜகவின் மிகமிக முக்கியமான திட்டமாக எனக்குப் படுகிறது.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதி, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அதிமுகவினர், மறந்தும்கூட திமுகவிற்கு ஓட்டுப்போட்டுவிடக்கூடாது என்பதற்காக #அமமுக.

"இங்க எவனுமே சரியில்லை. அரசியல் ஒரு சாக்கடை. ஆனா என்ன பண்றது, இந்த அதிமுகவை தோற்கடிக்கனும்னா, வேற வழியே இல்ல திமுகவுக்கு தான் ஓட்டுப் போடனும்" என்று நினைக்கிற வாக்காளர்களுக்காக #மக்கள்நீதிமையம்.

தென்தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்காகவே திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக தெரிந்தோ தெரியாமலோ தனித்துப் போட்டியிடுவதற்கு விடப்பட்ட #கிருஷ்ணசாமி.

“ஊழலை ஒழித்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று ஊழலின் ஊற்றுக்கண்ணையே அடையாளம் காணமுடியாமல் அப்பாவிகளாகக் குரலெழுப்பும் சிலருடைய வாக்குகளை இந்த ஆட்சிக்கு எதிராக நிற்கும் திமுக கூட்டணிக்கு விழாமல் பார்த்துக்கொள்வதற்காக #சகாயம்.

இது போதாதென்று மேலும் சிலப்பல கட்சிகளும் அவரவருக்கான களத்தில் இந்த அரசுக்கு எதிரான வாக்குகளை தெரிந்தோ தெரியாமலோ சிதறடிக்க உதவும் கட்சிகளாகவும் கூட்டணிகளாகவும் சில உண்டு.

“இரண்டில் ஒரு கூட்டணிக்குத் தான் கட்டாயமாக வாக்களித்தாக வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? இது ஜனநாயக நாடு. பலரும் போட்டியிட்டால் தான் சரியான கட்சியைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க முடியும். கடந்த தேர்தலில் கூடத்தான் மக்கள் நலக்கூட்டணி என ஒன்று உருவானது. இதையெல்லாம் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்” என்று இதனைப் படிக்கிறவர்களுக்கு எழுகிற கேள்வியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அக்கேள்வியில் இருக்கும் நியாயம் சரி தான். ஆனால், இதெல்லாம் நியாயமான ஜனநாயகத் தேர்தலாகவும் ஜனநாயகப்பூர்வமான சட்டமன்றமாகவும் ஜனநாயகப்பூர்வமான பாராளுமன்றமாகவும் இருந்தால் சரியான வாதம். ஆனால், கடந்த ஏழாண்டுகளாக, இந்தியா முழுக்க ஜனநாயகத்தையே இந்த பாஜக கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

புதுச்சேரியில் ஒரே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காத பாஜகவிற்கு, பின்வாசல் வழியாக கிரண்பேடி மூன்று நியமன எம்எல்ஏக்களை பெர்றுக்கொடுத்தார். பின்னர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள பலரும் ஒருவர்பின் ஒருவராக விலைக்கு வாங்கப்பட்டனர். பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, சிறுபான்மையாக மாற்றப்பட்டு கவிழ்க்கப்பட்டதை நாம் அனைவரும் அறிந்திருப்போம் தானே.

மத்தியப்பிரதேசத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். ஆட்சியும் கவிழ்ந்தது. பெரும்பான்மை இல்லாமலேயே இன்று ஆட்சியிலும் வந்து உட்கார்ந்திருக்கிறது பாஜக.

காங்கிரசுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற நித்திஷ்குமாரை இழுத்து பாஜகவின் கூட்டணி ஆட்சியாக மாற்றிவிட்டது பாஜக. ஒருவேளை, நித்திஷ்குமார் அதற்கு ஒப்புக்கொளாமல் போயிருந்தால், புதுவை மற்றும் மகாராஷ்டிராவின் நிலை தான் பீகாருக்கு ஏற்பட்டிருக்கும்.

இத்துடன் இது முடிந்துவிடவில்லை. நாடு முழுவதிலுமுள்ள பல மாநிலங்களில் இது நிகழ்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது. கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல் பிரதேசம் என இப்பட்டியல் மிக நீண்ட பட்டியலாக இருக்கிறது. இன்னும் கொஞ்சகாலத்தில் இந்தியா முழுக்கவும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களை விடவும் விலைக்குவாங்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலத்தெரிகிறது.

இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து, தமிழக சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அதிமுகவின் மீது மக்களுக்கு மிகப்பெரிய கோபம் இருப்பதால், அதற்கு எதிராகத்தான் பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை பாஜக நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை பாஜகவினால் நிச்சயமாகத் தடுக்கவே முடியாது. அதனால், அந்த எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஒன்றாக ஒரே இடத்திற்குப் போய்ச்சேருவதைத் தடுத்து, பல கட்சிகளுக்கும் பல கூட்டணிகளுக்கும் சிதறடித்துவிட்டாலே அதிமுக கூட்டணியை வெல்ல வைத்துவிடலாம் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கமுடியும். இதனால் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெல்லவில்லை என்றாலும் கூட, திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்துவிட்டாலே பாஜகவிற்கு போதுமானதாக இருக்கும். தொங்கு சட்டசபை அமைந்தாலே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப்படுவார்கள். ஆட்சி யார் கையில் போகும் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

அதனால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவை வீழ்த்தவேண்டுமென்றால், திமுக கூட்டணியில் இருந்து மிக அதிகமான எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்று ஆட்சியைப் பிடிப்பது தான் ஒரே வழி… அதனால் பாஜகவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பாஜகவின் பி அணிக்கும் வாக்களித்து, உத்தரப்பிரதேசத்தைப் போன்றதொரு மாநிலமாக தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடாமல் காப்பதே இன்றைய மிகமிக முக்கியமான கடமையாகும்.

No comments:

Post a Comment