Monday, March 22, 2021

காடும் காடு சார்ந்தவர்களும்

 உலக காடுகள் தினமான நேற்று பதிவு செய்ய நினைத்தது.  

நூல் அறிமுகம்
நூல்                                                 காடர்

ஆசிரியர்                                     பிரசாந்த். வே                                  

வெளியீடு                                    எதிர் வெளியீடு,

                                                      பொள்ளாச்சி

விலை                                             ரூபாய் 130.00

 முற்றிலும் ஒரு வித்தியாசமான பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல்.

 நூலின் பெயரே கதைகள் காடும் காடு சார்ந்தது என்பதை உணர்த்தும். இவற்றை கதை என்று சொல்வது கூட தவறு. காட்டுக்குச் உண்மையான சொந்தக்காரர்களான காட்டுவாசிகளும் காட்டு விலங்குகளும் நாகரீக மக்கள் என்று நம்பப்படுபவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும் சிக்கித் தவிப்பதைத்தான் கதைகள் வடிவில் ஆசிரியர் அளித்துள்ளார்.

 “காட்டிலே யானைகள் இருந்தன” கதை காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சட்டங்களை மீறிய செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பதும் அப்படி வரும் யானைகளை கொல்லக் கூட தயங்க மாட்டார்கள் என்பதை சொல்கிறது. காட்டு யானை கும்கி யானையால் கட்டுப்படுத்தப்படுவது மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது இக்கதையில். காட்டின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்ரமங்களுக்கு நிம்மதியைத் தேடி வரும் நகர மக்களால் காட்டின் பூர்வகுடிகளின் நிம்மதி தொலைகிறது என்று சரியாகவே சொல்கிறார் ஆசிரியர்.

 “காடர்குடி” வன உரிமைச்சட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கொஞ்சமும் மதிக்காமல் வனவாசிகளை காட்டிலிருந்து வெளியேற்ற காண்பிக்கும் தீவிரத்தை சொல்லும் கதை. புலிகள் காப்பகம் அமைப்பதால் மனிதர்கள் இருக்கக் கூடாது என்று எங்களை வெளியே போகச் சொல்லும் அதிகாரிகள், ரிசார்டுகள் அமைத்து டூரிஸ்டுகளை மட்டும் அனுமதிக்கலாமா என்ற கேள்வி இன்னும் மனதில் ஒலிக்கிறது.

 “தொடர்பு எல்லைக்கு அப்பால்” மலை கிராமத்திலிருந்து முதன் முதலில் பனிரெண்டாவது தேறி பழங்குடி மக்களுக்கான முதல் வரிசையை படித்த மாதன் வொகேஷனல் பிரிவு மாணவன் என்பதால் கால்நடை மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்டு மாடு மேய்க்கும் குலத் தொழிலுக்கே சென்ற துயரத்தை சொல்லும் கதை.

 “வலசை தொலைத்த யானை” முகாமிலிருந்து தப்பிக்கிற கும்கி யானை தான் வலசை போன பாதை எல்லாம் கட்டிடங்களாக, கரும்புத் தோட்டங்களாக மாறியுள்ளதால் குழம்பிப் போய் அலைவதும் அதனை மக்கள் துரத்துவதும் உணவு கிடைக்காமல் திண்டாடி அடிமையாய் முகாமுக்கே வந்தால் உணவாவது நிச்சயம் என்று திரும்பும் யானையின் கதை.

 “காட்டு மாதாவுக்கு ஜே” நாட்டு நடப்புக்களை கானகத்தில் விலங்குகள் மத்தியில் நிகழ்வதாய் பகடி செய்து எழுதப்பட்ட சுவாரஸ்யமான கதை.

 “காட்டுப்பள்ளி” வனவாசிகளை நேசிக்கிற, அங்கே உள்ள சிறுவர்களை கல்வி கொடுத்து உயர்த்திட முயலும் ஈர நெஞ்சங்களும் உள்ளனர் என்பதை ஜெயராஜ் என்ற ஆசிரியர் வடிவில் அடையாளம் காண்பித்துள்ளார்.

 காட்டுக்குள் சென்று வந்ததைப் போன்ற உணர்வை மேலே உள்ள கதைகள் மட்டும் தரவில்லை. நான் நீங்கள் படிக்க வேண்டும் என்று பகிராமல் விட்ட கதைகளும் தருகிறது.  காடுகள் பழங்குடி மக்களுக்கே சொந்தம், காட்டை உருவாக்கியவர்களும் அவர்களே. அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி விட்டு உங்களால் காட்டையோ காட்டு விலங்குகளையோ காப்பாற்ற முடியாது என்ற உண்மையை “காடர்” மூலம் அழுத்தமாக சொல்லும் தோழர் பிரசாந்த்.வே அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 

No comments:

Post a Comment