Monday, March 29, 2021

இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு கிடைப்பதில்லை?

 இந்த வெறுப்புணர்வுதான் பாஜக சாதனை


நேற்று முகநூலில் பார்த்த இரண்டு பதிவுகள் மனதிற்கு மிகவும்  வேதனை அளித்தது. இப்படிப்பட்ட வெறுப்புணர்வை உருவாக்கியதுதான் பாஜகவின் மிகப் பெரும் சாதனை.

இந்த அனுபவங்களே அவர்களையும் அவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ள அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.


இயக்குனர் தாமிரா அவர்களின் முக நூல் பதிவு

சமூகம் என்னும் மலைப்பாம்பு
...............................................................................
சென்னையில் இன்னமும் வாடகைக் குடியிருப்புதான். என்றபோதும் நான் வாடகைவீடு தேடி அதிகம் அலைந்ததில்லை…காரணம் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடியிருந்துவிட்டோம்.சில வசதிக்குறைவுகள் இருந்த போதும் வீட்டின் உரிமையாளர் மற்றும் சுற்றத்து மனிதர்களின் அன்பு எங்களை இடம் பெயர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் இட நெருக்கடிக்காக, இன்னும் சற்று பெரிய வீடாக பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் கடந்த ஒரு மாதகாலமாக வாடகை வீடு தேடி அலைகிறோம்.

இன்று எம் எம்டிஏ காலனியில் ஒரு வீட்டிற்குப் போயிருந்தோம். வாசலில் டூ லெட் போர்ட் மாட்டப்பட்டிருந்தது. நல்ல மரங்கள் அடர்ந்த இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. வெளித்தோற்றமே நன்றாக இருந்ததால்,.. மனைவியை இறங்கி விசாரிக்கச் சொன்னேன்..

மாடி பால்கனியில் வீட்டின் உரிமையாளப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். என் மனைவி ”வீடு வாடகைக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டதும்.. சிரித்தபடியே ”முஸ்லீம்ஸுக்கெல்லாம் வாடகைக்கு விடறதில்லைங்க” என்றார்.. என் மனைவி பதிலுக்கு ”தேங்க்ஸ்” என்றபடி வந்துவிட, அந்தப் பெண்மணி போனில் யாரிடமோ சிரித்துப் பேசியபடி தன்னியல்பில் பால்கனியில் நடந்து கொண்டிருந்தார்..

அவரது முகத்தில், ஒரு பர்தா அணிந்து வந்த பெண்ணுக்கு….,தான் இதைவிட நல்ல பதிலை சொல்லிவிட முடியாது என்பது போல, ஒரு பாவனை இருந்தது.நெடுங்காலமாக.. இப்படி ஒரு பதிலை தொடர்ச்சியாக சொல்லி வந்தவர் போல மிக நிதானமாகவும், கண்ணியமாகவும்,, புன்னகையுடனும் அந்த சொல்லை உதிர்த்திருந்தார்..

தூரத்து மரத்தடியில் நின்றபடி அந்த அம்மாவையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. நான் கோபித்துக் கொண்டு சண்டைக்குப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என் மனைவியிடமிருந்தது. ’வாங்க மச்சான் போகலாம்’ என்றாள்.நான் மிகக்கனிவான பார்வையோடு, அந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். .அந்த அம்மா நிச்சயமாக அசைவ உணவாளிக்கு வீடில்லை என்று சொல்பவர் இல்லையெனத் தோன்றியது..

நடுவகிடெடுத்து உச்சியில் குங்குமம் வைத்திருந்த விதத்தில்… அவர் என்னுள்ளிருந்த எத்தனையோ அம்மாக்களின் சாயல்களைக் கொண்டிருந்தார்.. எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் எப்படி இந்த அம்மாவைத் தொலைத்தேன் என்பதுதான்...

கோவில் கொடை வீதிகளில் ’என்ன மருமவனே நல்லா இருக்கியளா? மயினிய கேட்டதாச் சொல்லுங்க’.. என விசாரிச்ச ஏதோ ஒரு மாமியின் சாயல், ’என்ன சின்னய்யா ஒரு வாய் காஃப்பித்தண்ணி குடிச்சிட்டுப் போ’ எனக் சொன்ன ஏதோ ஒரு சித்தியின் சாயல்.. ’என்ன கொளுந்தப்புள்ள வந்தியளா’ எனக் கேட்கும் ஏதோ ஒரு மதினியின் சாயல்.. ’தம்பி மாமன் தெனம் குடிச்சிட்டு வாராவள என்னன்னு கேக்கப்படாதா?’ எனக் கேட்கும் ஏதோ ஒரு அக்காவின் சாயல்,’யோவ் தாத்தா என்ன அமட்டிக்கிட்டு நிக்கீரு’ என மிரட்டிய.., ஏதோ ஒரு பேத்தியின் சாயலைக் கொண்டவளாக இருந்தார்.அந்த அம்மா… இவர்கள் எல்லோரது கைகளையும் என்உள்ளங்கைக்குள் வைத்துத்தான் உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்..எப்போது பிடி நழுவியது…யார் விலக்கி விட்டார்…

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது நான் நண்பன் வி.கே சுந்தர் வீட்டில் தங்கி இருந்தேன்..ஓராண்டுகாலமாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பும் உறவும் இருந்தது.. சுந்தரும்,சந்திராவும்..என்மேல் அத்தனை அன்பாக இருந்தார்கள்..

நாங்கள் ஒரு குடும்பமாக இருந்து கொண்டிருந்த போது.. ஒரு பத்து நாள் பயணமாக என் மனைவி பஷிரியா வந்தாள்.. அப்போது அவள் புர்கா அணிபவளாகக் கூட இல்லை.. தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டி இருந்தாள்..அவளது இஸ்லாமியத் தோற்றத்தைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்டையிட்டு.. ஒன்று அவர்களை வெளியேற்றுங்கள்.. அல்லது வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொன்னார்.. சுந்தர்…..,. உங்களுக்காக நண்பனை விட்டுக் கொடுக்க முடியாது என வீட்டை ஒரு நாளில் மாற்றினான்..

ஓராண்டு நட்பை ஒரு நாளில் முறிக்கும் அளவிற்கு அந்த வீட்டின் உரிமையாளர் மூளைக்குள் ஏதோ திணிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அன்று ஊடகத்தில் பணி செய்து கொண்டிருந்தோம் நாங்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே போல ஒரு சம்பவம்..
இந்த சமூகமெனும் மலைப்பாம்பு இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பெனும் இரையைத் தின்றுவிட்டு.. அசைய இயலாமல் படுத்துக் கிடக்கிறது.

அச்சுறுத்தலோ, அறிவின்மையோ நாம் பிணைத்திருந்த கைகளை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு வருகிறோம்.மீண்டும் மீண்டும் நம்மில் யாரோ அதற்கு இரை போட்டபடியே இருக்கிறோம்…

ஏதோ ஒரு வீடு கிடைத்துவிடும்.. எப்படியோ வாழ்க்கை நகர்ந்துவிடும்… ஆயினும் நம்மிடையே நெளிந்து கொண்டிருக்கும் அந்த மலைப்பாம்பின் மீதான அச்சம்.. இருவருக்கும் தீரப் போவதில்லை..!
நிற்க..

வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி.. நாம் அந்த மலைப்பாம்பைத் தாண்டித்தான் நமது வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது…

என் கேள்வி எளிமையானது.. எல்லோருக்குமானது.. உங்கள் வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது..

அந்த மலைப்பாம்பிற்கு வலது புறத்திலா? இடதுபுறத்திலா ?

தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பதிவு

இயக்குநர் தாமிராவின் (
Thamira Kathar Mohideen
) அனுபவத்தைப் படித்ததும் எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடிபோன செய்தி கேட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன்.

“வீடு என்ன விலைடா?” என்று கேட்டேன்.
“அறுபது இலட்சம் மச்சி” என்றான்.
“காசு குடுத்து வாங்கினியா?” எனக் கேட்டேன்.
“அவ்ளோ காசு என்கிட்ட ஏதுடா. எல்லாம் லோன் தான்” என்றான்.
சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டைச் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். சுவரெல்லாம் வெடிப்பு விழுந்ததைக் காண முடிந்தது.

“சுத்திக் காட்டமாட்டியா?” என்று கேட்டேன்.

தயங்கித் தயங்கி ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று, வேண்டா வெறுப்பாக சுத்திக் காட்டினான். ஹாலில் இருந்து படுக்கையறைக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய குண்டானை வைத்த்திருந்தார்கள். அதில் பாதியளவிற்கு தண்ணீர் இருந்தது. அப்படியே அந்த குண்டானுக்கு நேராக மேலே பார்த்தால், மேலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த தண்ணீர் தரையில் ஓடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் அந்த குண்டானை அங்கே வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அதுமட்டுமில்லாமல் தரையில் நடக்கையில் அடிக்கடி ஏதோ இடிப்பதைப் போன்று இருந்தது. குனிந்து பார்த்தால், டைல்ஸ் சரியாகப் போடப்படாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் தான் தட்டுப்படுகிறது என்பது புரிந்தது. அப்படியே மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். செல்கிற வழியில் படிகள் கூட சரியாகக் கட்டப்படவில்லை என்பது தெரிந்தது.

இதற்கு மேலும் பொறுக்கமுடியாமல்,
“வீடு எப்ப கட்டுனதுடா?” என்று கேட்டேன்.

“இப்பதாண்டா. புதுவீடு இது. நாங்க தான் மொத ஓனர்” என்றான்.

“அப்படியா. வீட்ல கொஞ்சம் பிரச்சனை இருக்குற மாதிரி இருக்கேடா. சரிபண்ணித் தருவாங்களா?” என்று மென்மையாகக் கேட்டேன்.

“இல்லடா. அவ்ளோதான். வீடு ஃபுல்லா கட்டி முடிச்சிட்டாங்க. இனி நம்ம பொறுப்பு தான்” என்றான்.

“என்னடா சொல்ற? இது அப்பார்ட்மண்ட் வேற. மேல இருந்து தண்ணி ஒழுகிட்டே இருக்கு, தரை சரியில்ல, செவுரு ஃபுல்லா க்ராக் விட்ருக்கு. எப்புட்றா நீயே சரிபண்ண முடியும்? நல்லா ஏமத்திருக்காங்கடா உன்னைய” என்று பொறுமை காக்கமுடியாமல், கொஞ்சம் கோபத்துடனேயே சொன்னேன்.

“இருக்கட்டும்டா. விட்றா. பாத்துக்கலாம். இதுல வாழமுடியாதா என்ன? இதவிட மோசமான வீட்லயே வாடகை குடுத்து இத்தன வருசம் கஷ்டப்பட்டு வாழ்ந்திட்டோம். இது அதவிட ரொம்ப பரவால்லடா” என்றான்

“என்னடா இப்படி சொல்ற. வாடகை வீடு வேற. இது வேற. இத்தனை இலட்சத்தை வாறி இறைச்சிட்டு, ஏண்டா இப்படி ஒரு மோசமான வீட்ல கஷ்டப்பட்டு இருக்குனும். மொதல்ல இந்த வீட்ட வித்த உன்னோட ஓனரைப் பாத்து கறாரா பேசி, குடுத்த காசை திரும்பி வாங்கிரலாம் வா. இத விடக்கூடாது” என்றேன்.

“டேய். கொஞ்சம் சும்மா இருக்கியா நீ. இந்த வீட்டையும் திருப்பிக் குடுத்துட்டு தெருவில் போய் வாழச் சொல்றியா” என்று கோபமாகக் கேட்டான்.

ஒன்றும் புரியாமல், அவன் மேலும் விளக்கிச் சொல்வான் என்று காத்திருந்தேன்.

சில நிமிடங்கள் அமைதியாக என்னைப் பார்க்காமல், தரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனுடைய தோளில் கைவைத்தேன்.

“மச்சி” என்று மெதுவான குரலில் அவனை அழைத்தேன்.

“என்னடா பண்ணச் சொல்ற. இத்தன வருசமா நாங்க வாடகை வீட்லயே இருந்துட்டோம். அந்த வீட்ட நீ பாத்துருக்கல்ல. எவ்வளவு சின்னதா இருக்கும்னு. ஆனா, அதுக்கு மேல வேற வீட்டுக்குப் போறதுக்கு எங்களுக்கு வருமானமோ வசதியோ இல்லன்னு தான் உனக்குத் தெரியுமே. இத்தன வருசமா கஷ்டப்பட்டு படிச்சி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்குப் போய், இப்பதான் கைல கொஞ்சம் காசு வர ஆரம்பிச்சிருக்கு. அதனால வேற பெரிய வீட்டுக்கு வாடகைக்கு போகலாமனு வீடு தேட ஆரம்பிச்சேன்.

ஐடில வேல பாக்குறேங்குறதால ஈசியா வீடுகிடைக்கும்னு நினைச்சேன். ஆனா எங்கயுமே வீடு தரல. போன்ல பேசும்போது நல்லா பேசுவாங்க, ஆனா வீட்டுக்குப் போய் பாக்கும்போது என் பேரைக் கேட்டதுமே, வீடு இல்லைன்னு சொல்லிருவாங்க. சிலபேர் மறைமுகமா இல்லன்னு சொன்னாங்க. பலபேர், முஸ்லிம்களுக்கு வீடுதர்றதில்லைன்னு நேரடியாவே சொன்னாங்க. ஒருசிலபேர் என்ன தெரியுமா சொன்னாங்க. அவங்களுக்கு மதம்லாம் பிரச்சனை இல்லையாம். ஆனா அக்கப்பக்கத்து வீட்டுக்காரங்க ஏதாவது சொல்வாங்களாமாம். அதனால வீடுதரமுடியாதுன்னு சொன்னாங்க.

ஒரு வீடில்ல ரெண்டு வீடில்ல, ஒரு மாசமில்ல ரெண்டு மாசமில்ல. ஒரு வருசமா நூறு வீடுக்கும் மேல பாத்துட்டோம். சொல்லி வச்சா மாதிரி யாருமே எங்களுக்கு வீடு தரல தெரியுமா? ஒரு ப்ரோக்கர் கிட்ட வீடு வேணும்னு கேட்டோம். முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தேடிக் குடுக்குறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்லன்னு சொன்னாரு அந்த ப்ரோக்கர். அதுவும் 2014க்குப் பின்னாடி தான் இது ரொம்ப ரொம்ப கஷ்டமா மாறிடுச்சின்னு சொன்னார். அதுக்கு முன்னாடிலாம், இந்துனா பத்து வீடு தேடினா ஒரு வீடு கிடைக்குமாம். முஸ்லிம்னா ஒரு முப்பது வீடு தேடினாலாவது கிடைக்குமாம். இப்பல்லாம் முஸ்லிம்களுக்கு எவ்வளவு தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குதுன்னு சொன்னாரு. அதனால் சொந்தமா வீடு வாங்கிடுங்கன்னு எங்களுக்கு ஒரு யோசனை சொன்னார்.

வாடகைக்கே வீடு தராதவங்க, சொந்தமா எப்படி வீடு தருவாங்கன்னு கேட்டேன் அந்த ப்ரோக்கர்கிட்ட. அதுக்கும் ஒரு வழி இருக்குன்னு சொன்னார். அதாவது சரியா கட்டாத சில அப்பார்ட்மண்ட்களை வாங்க யாருமே வரமாட்டாங்களாம். அந்த மாதிரி அப்பார்ட்மெண்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க ரெடியா இருப்பாங்களாம். ஆனா அப்பவும் விலையை எல்லாம் குறைக்க மாட்டாங்களாம். ஏன்னா, முஸ்லிம்களுக்கு எப்படியும் வேற எங்க போனாலும் வீடு கிடைக்காதுன்னு அவங்களுக்கு தெரியுமாம். சரி, வீடே இல்லாம இருக்குறதுக்கு பதிலா, இந்த மாதிரி பிரச்சனைகளோட இருக்குற வீடுன்னா எவ்வளவோ பரவாயில்ல தான. அதான், இந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டேன்.

இந்த அப்பார்ட்மெண்டில் மொத்தம் நாலு வீடுகள் இருக்கு. அதுல மூனை முஸ்லிம்கள் வாங்கிருக்காங்க. மீதி இருக்குற ஒன்னை ஒரு இந்து வாங்கிருக்கார். ஆனால் அதையும் ஒரு முஸ்லிமுக்கு தான் வாடகைக்கு விட்ருக்கார். வாடகைக்கு இருக்குற அவரையே வீட்டை வாங்கச் சொல்லி ஓனர் கேட்டுட்டு இருக்கார். இப்ப சொல்லு, தண்ணி ஒழுகிச்சின்னா குண்டா வச்சிக்கலாம், தரை உடைஞ்சிருந்தா கொஞ்சம் பாத்து நடந்துக்கலாம். ஆனா வீடே இல்லைன்னா என்னடா பண்றது?” என்று அடக்கிவைத்திருந்த அனைத்தையும் விரக்தியும் சலிப்பும் கோபமும் வெறுப்பும் கலந்த வார்த்தைகளில் கேள்வியாகக் கேட்டுமுடித்தான். அவனுக்கு சொல்வதற்கு என்னிடம் பதில் இல்லை.

என்ன சொல்வதென்றே தெரியாமல் அந்த அப்பார்ட்மண்ட் மொட்டை மாடியில் அவனுக்கு அருகில் அமைதியாக நின்றிருந்தேன். அங்கே நின்றுகொண்டு பார்க்கையில், சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் என் கண்ணில் தென்பட்டன. இத்தனை ஆயிரம் வீடுகளில் வாழும் இத்தனை இலட்சக்கணக்கான மக்களின் மனதில் இப்படியொரு விஷத்தை விதைத்து, மனித சிறைச்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அத்தகைய கொடூர ஆட்சியாளர்கள் இப்போது நம் மண்ணில் காலூன்றி முழுவதுமாக ஆக்கிரமிக்க வழிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் மிச்சமீதி அன்பையும் பறித்துக்கொள்ளும் வெறி அவர்களிடம் இருக்கிறது என்பதை உணர வேண்டிய தருணம் இது. அரசியல் இலாபத்திற்காக மனிதர்களிடையே பிரிவினையை உண்டாக்குபவர்களை அடித்து விரட்டுவது மட்டும் தான் என் நண்பனுக்கும் அவனைப் போன்று சொந்த பூமியிலேயே அகதிகளாகப் பார்க்கப்படும் அனைவரின் கேள்விகளுக்கான விடையாகவும் இருக்கமுடியும். ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தெருவில் அடித்து விரட்டுவது ஒருவழியென்றால், தேர்தல் வாக்குகளால் விரட்டுவதும் இன்னொரு வழிதான் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்தியே ஆகவேண்டும்…

எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஒரு வரியில் பின்னூட்டம் போட்டிருந்தார். அது மிகவும் வலி தருவது.

இந்த சிரமன் கூட வேண்டாமென்றுதான் தடுப்பு முகாம்களைக் கட்டுகிறார்கள்.

நாம் இந்த வேதனைகளை மௌனமாக கடந்து போகப் போகிறோமா? அல்லது சங்கிகளும் அடிமைகளும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புவதற்கு இரையாகப் போகிறோமா?


No comments:

Post a Comment