சீமானுக்கு கடும் போட்டி கொடுப்பவராக கமலஹாசன் மாறி வருகிறார். காமராசர் மாதிரியும் கலாம் மாதிரியும் ஆக வேண்டும் என்று தான் வளர்க்கப்பட்டதாக ஒரு உருட்டு.
அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் என்று இன்னொரு உருட்டு.
மேலே உள்ள படங்களை மட்டும் போட்டு விட்டு கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
கமலிசம்
1. காமராஜர், அப்துல் கலாம் போல் வர வேண்டுமென்று வளர்க்கப் பட்டேன்...
காமராஜர் சரி. கலாம் என்ற பெயர் முதலில் பேசப்பட்டது 1980இல். எஸ் எல் வி ரோஹிணி எனப்படும் ராக்கெட் தயாரிப்பில் அவருடைய பங்குதான் காரணம். பிறகு 1990களில் மிகவும் பிரபலமடைந்து, பிஜேபியினால் குடியரசுத் தலைவராக்கப் பட்டு, பாரத ரத்னா விருது பெற்று இளைஞர்களின் ரோல் மாடலாக முன்னிறுத்தப் பட்டார். அவர் என்ன பேசினாலும் வாழ்க்கைத் தத்துவம் என்கிற அளவுக்கு புகழப் பட்டது (அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிஜேபியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் எழுதிய கட்டுரைதான் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட முதல் பிரசுரம் என்று நினைவு)
ஆனால் இப்போது கலாம் பிரச்சினையல்ல. கலாம் பிரபலமான காலத்தில் கமலுக்கு வயது 25 அல்லது 26. ஏற்கெனவெ புகழின் உச்சத்திற்குச் சென்ற இரண்டு முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ஆகி விட்டார். அந்த வயதில் கலாம் போல் நீ வர வேண்டுமென்று யார் ஆளவந்தானை ‘வளர்த்திருப்பார்கள்’ என்று புரியவில்லை. அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்று கதை சொல்லியிருப்பார்களோ?
2. அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி நஷ்டம்...
சுதந்திரப் போராட்டம் உக்கிரமடைந்த காலத்தில் பலர் நல்ல வருமானம் வரக் கூடிய தொழில்களைத் தியாகம் செய்து விட்டு களத்திற்கு வந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்து பிரபல வக்கீலாக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் எம் ஆர் வெங்கட்ராமன் அரசியலுக்கு வந்தது இப்படித்தான்.
தான் பிறந்த நம்பூதிரி சமூகத்துக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி, சமூக சீர்திருத்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, பின்னர் தேசிய இயக்கத்தில் இணைந்து அதற்குப் பின் கம்யூனிஸ்டான ஈ எம் எஸ், கட்சிப் பத்திரிக்கை ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்றவர். 1957இல் கேரள முதல்வரான பின் சைக்கிளில்தான் அலுவலகம் செல்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
பிற அரசியல் இயக்கங்களிலும் இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு பெரியார்.
இவர்கள் யாரும் அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட ‘நஷ்டக் கணக்கைப்’ பேசியதில்லை.
நிழல் நிழலாகவே இருக்கிறது.
தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன்,
ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
100 ஆண்டுகளுக்கு முன்பே பல லட்சம் வணிகம் கொண்ட தன்னுடைய எல்லா தொழில்களையும் விட்டுவிட்டு, தான் வகித்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட 48க்கும் மேற்பட்ட அத்தனை பதவிகளையும் துறந்துவிட்டு அரசியல் பணிக்கு வந்ததோடு, அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தில் எந்த அரசுப்பதவியும் வகிக்காமல் தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும் மட்டுமே சந்தித்த தந்தை #பெரியார் ஒரு நாளும் சொன்னதில்லை தனக்கு அரசியலால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டதென்று.
நீங்கள் யார் கமல். உங்களை யார் இந்த தள்ளாத வயதில் அரசியல் பணியாற்ற வெத்தலை பாக்கு வைத்து அழைத்தது. இப்போது ஏன் இவ்வளவு சலிப்பு. அப்படி என்ன தியாகம் நீங்கள் செய்துவிட்டீர்கள்?
உங்கள் மீது இருந்த அத்தனை மரியாதையையும் நீங்களே உங்கள் அன்றாட தேர்தல் பிரச்சாரதில் உதிர்க்கும் அரசியலற்ற கருத்துக்களின் மூலம் உதிர்த்துக் கொண்டிருகிறீர்கள் கமல்.
நீங்கள் ஆகச் சிறந்த கலைஞன் தான். ஆனால் மிக மோசமான அரசியல்வாதியாக உருமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையேனும் உணருங்கள்.
தோழர் களப்பிரன்.
துணைப் பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
No comments:
Post a Comment