எங்கள் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி தோழர் இரா.இரமணன் எழுதிய முக்கியமான கட்டுரை. பொருளாதாரக் கட்டுரைகளை புரிந்து கொள்ள இக்கட்டுரை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பொருளாதார ‘V’காரங்கள்
– இரா.இரமணன்
இந்தியப் பொருளாதாரம் ஆங்கில எழுத்தான V வடிவ மீட்சி பெறுகிறது என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. சில பொருளாதார அறிஞர்கள் அது K வடிவில்தான் இருக்கும் என்கின்றனர். ‘வி’, ‘கே’ போன்றவை என்ன என்று பார்ப்பதற்கு முன் பொருளாதார போக்குகள் இந்த வடிவங்களில் மட்டுமல்ல மேலும் பல வடிவங்களில் இருக்கலாம். பொருளாதார குறியீடுகளான வேலை வாய்ப்புகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஆலை உற்பத்தி அளவு ஆகியவற்றை வரைபடங்களில் பொருத்தும்போது கிடைக்கும் வடிவங்களே இவை. எனவே அவை வி,கே,எல்,யு,டபிள்யு,ஜே என எந்த வடிவத்திலும் இருக்கலாம். இப்பொழுது இவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
*வி வடிவ மீட்சி*
இது பொருளாதார பின்னடைவு நிலையில் (recession) கடுமையான வீழ்ச்சியையும் அதிலிருந்து வேகமான மீட்சியையும் குறிப்பது. இத்தகைய மீட்சிகள் பொதுவாக நுகர்வோரின் கிராக்கி மற்றும் தொழில் மூலதன செலவு ஆகியவற்றை விரைவாக மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தூண்டப்படுகின்றன. பொருளாதாரம் குறுகிய காலத்தில் மறு சீரமைப்பு செய்யப்படுவதாலும் பரவலான பொருளாதாரக் குறியீடுகள் விரைவாக மீள்வதாலும் பொருளாதாரப் பின்னடைவு (recession) நிகழ்வுகளில் வி வடிவ மீட்சி சிறந்த நடப்பாக கருத்தப்படலாம்.
*கே வடிவ மீட்சி*
பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், ஒரு சமூகத்தில் வெவ்வேறு பிரிவுகள் பொருளாதார மீட்சி பெறும் வீதம் கடுமையாக வேறுபடும்போது இந்த வடிவம் உண்டாகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீளும்போது கே வடிவம் உண்டாவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஜேபி மோர்கன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதன்மைப் பொருளாதார அறிஞர் சஜ்ஜித் சினாய் கூறுகிறார் (Explained: What is a K-shaped economic recovery, and what are its implications? | Explained News,The Indian Express). எடுத்துக்காட்டாக, கொரோனா தொற்றின் போதும் சமூகக் கட்டமைப்பில் மேல்அடுக்கில் இருப்பவர்களின் வருமானம் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டு அவர்களது சேமிப்பும் அதிகரித்திருக்கும். நிரப்பப்பட்டிருக்கும் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் போல, எதிர்கால நுகர்விற்காக அது காத்திருக்கும். இதன் குறியீடாக அக்டோபர் மாதத்திலிருந்து பதிவாகும் கார்களின் எண்ணிக்கை 4% அதிகரித்துள்ளது. அதே சமயம் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது. 10%ஆக இருக்கும் இந்திய மேல்மட்டக் குடும்பங்கள் 25-30% நுகர்விற்கு காரணமாக இருக்கின்றன. கடந்த இரண்டு காலாண்டில் உயர்மட்ட வருமானம் உள்ள இத்தகைய குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்தது. இப்பொழுது நாம் பார்க்கும் வி வடிவ மீட்சியானது இந்த சேமிப்பின் இனிய பாய்ச்சலே (sugar rush). இது மீண்டும் மீண்டும் வராத, ஒரு தடவை விளைவே(one time effect).
அதே சமயம் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் கீழ்மட்டத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் வருமானத்தை நிரந்தரமாக இழந்துள்ளன. வேலை வாய்ப்பு விரைவாக சகஜ நிலைமைக்கு வராவிட்டால் இந்த இழப்பின் காரணமாக பொருட்களுக்கான கிராக்கி மீண்டும் மீண்டும் கீழ்நோக்கி செல்லும்.
இரண்டாவதாக, கொரோனா தொற்று காரணமாக வருமானம் ஏழைகளிடமிருந்து பணக்காரர்கள் பக்கம் மடை மாற்றப்பட்டுள்ளது. ஏழைகள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை சேமிக்க இயலாமல் நுகர்விற்காக செலவிடும் பழக்கமுடையவர்கள். ஆனால் செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தில் குறைந்த வீதமே நுகர்விற்காக ஒதுக்குவார்கள். இந்த விதத்திலும் கிராக்கி பாதிக்கப்படும். எனவே அரசின் கொள்கை முடிவுகள், அடுத்தடுத்து வரும் காலாண்டுகளில் பொருளாதார நிலைமைகளை எதிர்நோக்க வேண்டும்.
மூன்றாவதாக, கொரோனா தொற்று, போட்டியைக் குறைத்து, வருமானத்திலும் வாய்ப்புகளிலும் நிலவும் அசமுத்துவத்தை அதிகரித்தால், அது வளரும் நாடுகளில் உற்பத்தியை பாதித்து அரசியல் பொருளாதார சிக்கல்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். வளர்ச்சி வீதத்தையும் பாதிக்கும்.
Y வடிவ மீட்சியில் ஒரு பகுதி மெதுவான வளர்ச்சி காணும். விமானப் போக்குவரத்து, ஓட்டல்கள், சுற்றுலா, வாகன உற்பத்தி, சக்தித்துறை போன்றவை ஒரு வருடம் அல்லது இரண்டு வருட காலத்திலேயே மீட்சி பெறும். இன்னொரு பகுதி விரைவாக பழைய நிலைக்கு திரும்பும்.
L வடிவ மீட்சியில் தொடந்த வேலைவாய்ப்பின்மை, பொருளாதார தேக்க நிலைமை ஆகியவற்றின் காரணமாக மெதுவான மீட்சியே காணப்படும். பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி செங்குத்தாக இருக்கும்.ஆனால் மேலே வருவது மேலோட்டமாக இருக்கும். நீண்ட கால தேக்கத்தை இது குறிக்கும்.
U வடிவ மீட்சியில் வீழ்ச்சியும் வளர்ச்சியும் படிப்படியாக இருக்கும்.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 12.01.2021 இதழ் கட்டுரை மற்றும் சில இணைய தள விவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)
No comments:
Post a Comment