Sunday, February 14, 2021

சதியில்லை எனும் பெரிய சதி

 


மத்யமர் எனும் மோடி மோகிக்கள் குழுவில் பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கொச்சைப்படுத்தி ஒரு முதலாளித்துவ வணிக எழுத்தாளர் எழுதியிருந்ததையும் அதற்கு கூடாக ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன் என்றும் எழுதியிருந்தேன்.

அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டையும் அதற்கு கூடாக அளித்த பின்னூட்டத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



பொதுக் கருத்து என்று காண்பிக்க இப்படி சில பேருக்கு ஆட்சியாளர்கள் பணம் கொடுத்து எழுத வைக்கப் போகிறார்கள் போல. எழுத்தை விற்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்

அங்கே நான் அளித்த பின்னூட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல விதங்களில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது மத்தியரசு. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தர வேண்டிய தொகைகளை அளிக்காமல் ஏமாற்றினால் அதை கண்டு கொள்ளாமல் விடுவது. தேவைப்படும் உபகரணங்களை கொள்முதல் செய்ய விடாமல் தடுப்பது (அதே உபகரணங்களை ஜியோ வாங்கி பயன்படுத்தினால் அப்போது தேசத்தின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் வந்து விடாது) வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி மறுப்பது, முக்கியமாக 4 ஜி சேவையை அனுமதிக்காதது ஆகியவை அந்நிறுவனத்தை அழிக்கும் சதி இல்லாமல் வேறென்ன?

 ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை அளிக்காமல் தாமதித்து அச்ச உணர்வை உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களை விருப்ப ஓய்வில் செல்ல உளவியல் நெருக்கடி கொடுத்தது  ஜியோ விளம்பரத்தில் புன்னகைத்த முகத்தோடு காட்சியளிக்கும் பிரதமர் தலைமையிலான மத்தியரசு.

 எங்கோ ஒரு மூளையில் நடக்கும் சம்பவத்தை பொதுமைப்படுத்தி ஊழியர்களை காரணமாக்குவது பி.எஸ்.என்.எல். ஐ சீரழிக்கும் மத்தியரசின்  சதியை விட மிகப் பெரிய சதி.

 பொதுத்துறை நிறுவன, அரசு ஊழியர்கள் மீது அள்ளி வீசப்படும் அபத்தமான குற்றச்சாட்டுக்களை வைப்பவர்கள், அங்கே வேலை கிடைக்காத பொறாமையை, திராட்சை கிட்டாத நரிகளாக வெளிப்படுத்துகிறார்களோ என்று கூட சந்தேகம் வருகிறது.

 வணிகம் செய்வது அரசின் வேலை (IT IS NOT THE BUSINESS OF THE GOVERNMENT TO BE IN THE BUSINESS)  என்று உபதேசம் செய்கிற ஒருவர் கூட பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் திவாலின் விளிம்புக்குப் போன போது அந்த நாடுகளின் அரசுகள் மீட்பு நிதி (BAIL OUT) என்ற பெயரில் பெரும் நிதியை செலவழித்த போது அரசு ஏன் வணிகத்தில் தலையிடுகிறது என்று கேட்டதில்லை. எல்லாம் போலித்தனம்.  இன்று மோடி அரசும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

 தேசியமயம் செய்யப்பட்டதால் தனியார்மயம் செய்கிறார்கள் என்று ஒரு வினோத விளக்கம் தரப்படுகிறது.  தேசிய மயமாக்கப்பட்டதன் காரணம் என்பதை மட்டும் இவர்கள் மறைத்து விடுவார்கள். அரசு நினைத்தால் தேசியமயமாக்கவும் பின்பு தனியார்மயமாக்கவும்  பொதுத்துறை நிறுவனங்கள் என்ன இவர்கள் பரம்பரை சொத்தா? பொதுத்துறைக்கு என்று ஒரு சமூக நோக்கம் உண்டு.  இன்று கட்டமைப்பு வசதிகள் ஓரளவு இருக்கிறது என்றால் அதற்கு பொதுத்துறையின் பங்களிப்புதான் காரணமே தவிர, லாபம் வர நீண்ட நாளாகும் என்று ஒதுங்கி இருந்த தனியார்துறையால் அல்ல.

 தனியார் கையில் பணம் இல்லாத போது அரசு செய்ய வேண்டும். இவர்கள் கொழுத்த பின்பு கேட்டால் அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தேவர் மகன் படத்து பஞ்சாயத்தில் நாசர் சிவாஜியைப் பார்த்து சூடாக ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்வியைத்தான் பொதுத்துறை எதிர்ப்பாளர்களிடம் கேட்க வேண்டும்.

 

No comments:

Post a Comment