இன்றைய முயற்சி - முழுமையாக என் மனைவியின் வழிகாட்டுதலில் செய்தது.
திருமண நிகழ்வுகளால் சேர்ந்த தேங்காய்களை எப்படி செலவழிப்பது என்ற சிந்தனையின் முதல் முயற்சி தேங்காய் பொடி.
மூன்று தேங்காய்களை துறுவி எடுத்துக் கொண்டேன். அதில் பாதி தேங்காய் பொடிக்கு பயன் பட்டது.
மீதி?
அதுக்கும் ஒரு பதிவு தனியாக போடுவோம்ல.
முதலில் தேங்காய் பொடியை பார்ப்போம்.
நல்ல பெரிய கரண்டியில் ஒன்றரை கரண்டி அளவிற்கு முழு உளுந்து, ஒரு கரண்டி அளவிற்கு கடலைப் பருப்பு, பதினைந்து காய்ந்த மிளகாய். இதை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எடுத்து வைத்த பாதித் தேங்காயையும் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
கொஞ்சமாக எண்ணெய் விட்டு கொஞ்சமே கொஞ்சம் கட்டிப் பெருங்காயம் நன்றாக உப்பி வரும் வரை வறுக்க வேண்டும்.
இவை எல்லாம் நன்றாக சூடு ஆறும் வரை வாட்ஸப்போ இல்லை முகநூலோ பார்க்கலாம்.
முதலில் வறுத்த பருப்பு வகைகள், மிளகாய், பெருங்காயம் இவற்றோடு ஒரு பெரிய ஸ்பூன் கல் உப்பி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். அத்துடன் வறுத்த தேங்காயையும் சேர்த்து அரைத்தால் தேங்காய் பொடி தயார்.
பருப்புப் பொடி போல சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் போல "PERFECT" என்ற பாராட்டு வழிகாட்டியின் வாயிலிருந்து கிடைத்தது.
இதை விட வேறென்ன வேண்டும் !😊😊😊😊😊😊😊😊
No comments:
Post a Comment