Saturday, February 6, 2021

நிர்மலா அம்மையார் ராஜ்ஜியத்தில் . . .


 *நாளொரு கேள்வி: 03.02.2021*


இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
#####################

*பங்கு விற்பனை இலக்கு குறைந்திருப்பதேன்?*

கேள்வி: 2020- 21 பட்ஜெட்டில் ரூ 2,10,000 கோடிகள் பங்கு விற்பனை இலக்காக போடப்பட்டிருந்தது. 2021- 22 ல் பங்கு விற்பனை இலக்கு ரூ 1,75,000 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் பங்கு விற்பனை இலக்கு குறைவாக உள்ளது?

*க.சுவாமிநாதன்*

ரூ 1,75,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல. இவர்களே போன ஆண்டு அறிவித்த 2,10,000 கோடியை விடக் குறைவு என்பதால் அது குறைவான தொகை ஆகி விடுமா? 

பா.ஜ.க 2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்த பொதுத் துறை பங்கு விற்பனை 1994 - 2014 வரை விற்கப்பட்ட தொகையை விட அதிகமானது ஆகும். 

நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா காலங்களை விட, மன்மோகன்சிங்கின் முதல் ஆட்சிக் காலத்தை விட இடையில் வந்த வாஜ்பாய் காலத்து பங்கு விற்பனை மிக மிக அதிகம். எப்படி பா.ஜ.க ஆட்சி வரும் போதெல்லாம் அது *பொதுத் துறைக்கு போதாத காலமாக* அமைகிறது என்பதே முக்கியமான கேள்வி. காரணம், சித்தாந்த ரீதியாகவே பொதுத் துறைக்கு எதிரானவர்கள். 1956 ல் எல்.ஐ.சி தேசிய மய மசோதா வந்த போதும், 1969 ல் வங்கி தேசிய மயம் வந்த போதும் எதிர்க் கட்சி வரிசையில் *பா.ஜ.க வின் முந்தைய அவதாரமான ஜனசங்கம்* அமர்ந்திருந்தது. தேசிய மய முடிவுகளை கடுமையாக எதிர்த்தார்கள். பொதுத் துறையை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தவர்கள் அது முடியாமல் போனதால் அது வேர் விட்டு வளர்ந்து விழுது பரப்பி இன்று நிற்கும் போது கோடாரியால் வெட்டி வீழ்த்த முனைகிறார்கள். 

வங்கி பங்கு விற்பனை காங்கிரஸ் காலத்திலும் நடந்திருக்கிறது. ஆனால் வாஜ்பேய் காலத்தில் *பங்கு விற்பனையை தனியார் மயக் கட்டத்திற்கு நகர்த்த மசோதா* கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. 51% பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் அரசின் வசம் இருக்க வேண்டுமென்ற சட்டத்தை திருத்த முனைந்தது. ஆனால் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் முடியவில்லை. ஆனால் இந்த பட்ஜெட்டில் அந்த ஈடேறாத கனவை நனவாக்க முயற்சித்துள்ளார்கள். இரண்டு அரசு வங்கிகள் தனியார் மயமாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வங்கிகள் என்று கூட சொல்கிற வெளிப்படைத் தன்மை அரசிடம் இல்லை. வாஜ்பேய் காலத்தில் கைவிடப்பட்ட மசோதா தூசி தட்டி எடுக்கப்படும். ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமும் தனியார் மயமாகும் என்று பட்ஜெட் கூறியுள்ளது. எந்த அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் என்றும் அறிவிக்கப்படவில்லை.

இது தவிர *"கேந்திர விற்பனை"* என ஒரே அடியில் அரசு நிறுவனத்தை வீழ்த்தி தனியார் நிறுவனமாக மாற்றுகிற பட்டியலும் உள்ளது. 26% ஐ விற்று நிர்வாகக் கட்டுப்பாட்டை தனியாருக்கு கொடுக்கிற இந்த கேந்திர விற்பனை வகையும் வாஜ்பாய் காலத்தில் கொண்டு வரப்பட்டதே. இப்போது மீண்டும் வருகிறது. 

*சில வகைப் பாம்புகளின் விஷம் கூடுதலாக இருக்கும்.* ஒரே தீண்டலில் உயிரைப் பறித்து விடும். அது போன்றதுதான் கேந்திர விற்பனையும்... வி.எஸ்.என்.எல், மாடர்ன் புட்ஸ், சென்டார் ஓட்டல் ஆகியன வாஜ்பாய் காலத்தில் இவ் விஷப் பாம்பிற்கு பலியானவை. இப் பட்ஜெட்டும் கேந்திர விற்பனை மூலம் நிறைய நிறுவனங்களைப் பலி கேட்கிறது. 

ஆகவே இந்த பட்ஜெட், பொதுத் துறை மீதான தாக்குதலை சற்று குறைத்திருக்கிறது என்று வெறும் தொகைகளை வைத்து முடிவுக்கு வர முடியாது.

*1,75,000 கோடி என அறிவிக்கப்பட்ட இலக்கிற்குள் எல்.ஐ.சி பங்கு விற்பனைத் தொகை இடம் பெறவில்லை* என இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் ஆசிரியர் ஆர். சுகுமார் & தூர்தர்சன் அஜய் மிஸ்ராவுக்கு பட்ஜெட்டிற்குப் பிறகு அளித்த நேர்காணலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் தந்துள்ளார். எல்.ஐ.சி பங்குகளில் எவ்வளவு சதவீதம் விற்பது என்று முடிவு ஆகாததால் இலக்கில் அது சேர்க்கப்படவில்லையாம். (Mint - 02.02.2021- page 5) கடந்த பட்ஜெட்டின் போது எல்.ஐ.சி பங்கு விற்பனை அறிவிக்கப்பட்டாலும் ரூ 2,10,000 கோடி இலக்கிற்குள் அது வரவில்லை என்று அரசு சொல்லவில்லை. 1 லட்சம் கோடியாவது எல்.ஐ.சி பங்கு விற்பனையில் அரசு திரட்டுவதற்கு முயற்சிக்குமென்பது பரவலான செய்தி. அப்படியென்றால் 1,75,000 கோடி+ 1,00,000 கோடி என்று வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆகவே எண்ணிலும், அரசின் எண்ணத்திலும் தனியார்மய முனைப்பு சற்றும் தணியவில்லை. *மேலும் அது கொளுந்து விட்டு எரிகிறது* என்பதே உண்மை. 

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment