Tuesday, February 16, 2021

நிர்மலா அம்மையாரின் திண்டாட்டம் ஏன்?



*நாளொரு கேள்வி: 14/02/2021*

தொடர் எண்: *259*

இன்று நம்மோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *ஸ்ரீகாந்த் மிஸ்ரா* (தஞ்சை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வைரவிழாவில் இன்று -14.02.2021- உரையிலிருந்து தொகுப்பு: க. சுவாமிநாதன்)
#####################

*அரசு திண்டாடுவது நிதிப் பற்றாக்குறையால் அல்ல... நம்பகப் பற்றாக்குறையால்...*

கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான சட்ட திருத்தம் தனியாகக் கொண்டு வரப்படாமல் நிதி சட்ட வரைவின் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதே, ஏன்?

*ஸ்ரீகாந்த் மிஸ்ரா*

நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit), வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) ஆகியவற்றால் தேசம் திண்டாடுகிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் மத்திய அரசுதான் *நம்பகப் பற்றாக்குறையால்* (Trust Deficit) திண்டாடுகிறது அல்லது திண்டாட வைக்கிறது. 

நம்பகப் பற்றாக்குறைக்கான காரணங்கள் என்னென்ன? 

ஒன்று, 1956 எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டால்தான் எல்.ஐ.சி பங்கு விற்பனையை நடத்த இயலும். இதற்கு சட்டத் திருத்தங்கள் தனி மசோதாவாக வந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? அத் திருத்தங்களைப் பட்ஜெட்டோடு  இணைந்த *நிதி சட்ட வரைவிலேயே* (Finance Bill) இடம் பெறச் செய்துள்ளது. 
இதன் நோக்கம் என்ன? பண மசோதாக்கள் மாநிலங்களவையின் (Rajya Sabha) ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை. *ராஜ்யசபையில் அரசுக்கு தேவையான எம்.பிக்களின் எண்ணிக்கை இல்லை.* எல்.ஐ.சி பங்கு விற்பனை பற்றிய கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது அரசுக்கு எளிதாக இருக்காது. *எல்.ஐ.சியின் உள்ளார்ந்த வலிமை, எல்.ஐ.சிக்குள்ள நற்பெயர், எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் கருத்து* ஆகியன அரசுக்கு சாதகமாக இல்லை. இவையெல்லாம்தான் அரசாங்கம் பங்கு விற்பனைக்கு தேவைப்படும் சட்டத் திருத்தங்களை பண மசோதாவாக உள்ள நிதி மசோதாவுக்குள் சொருகி இருப்பதற்கு காரணம். மக்களவையில் (Lok Sabha) உள்ள பெரும்பான்மையை வைத்து இதை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதுதான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை குறுகிய நோக்கங்களுக்காக வளைக்கிற அரசுக்கு எப்படி நம்பகத்தன்மை கிடைக்கும்?

*இரண்டாவது,* பங்கு விற்பனை பற்றிய அறிவிப்பில் உள்ள சூட்சுமம். ஐந்தாண்டுகளுக்கு எல்.ஐ.சி யில் அரசு பங்குகள் 75 சதவீதமாக இருக்கும் என்பதுதான். என்ன அர்த்தம் அடுத்தடுத்த பட்ஜெட்டுகளிலும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க *கறவைப் பசுவாக எல்.ஐ.சி* இருக்கும் என்பதே. இதிலும் ஒரு முரண் உள்ளது. *"செபி"*(SEBI) விதிகளின்படி, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 25 சதவீதத்தை விற்க வேண்டும். ஆகவே அரசு சொல்கிற *ஐந்தாண்டுகள் என்ற வரையறையை நம்ப முடியுமா?* 

*மூன்றாவது,* வங்கி நெறியாளுகை திருத்தச் சட்டம், பொது இன்சூரன்ஸ் தேசிய மயச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட போது என்ன உறுதி மொழிகள் தரப்பட்டுள்ளன. அதாவது அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்கு கீழே போகாது என்பது. இப்போதோ ஒரு அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனம், இரண்டு அரசு வங்கிகள் தனியார் மயமாகும். அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்கும் கீழே போகும் என்பதுதான். எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பதும் தனியார் மயத்தின் முதற்படி என்பதுதானே உண்மை. இவர்களின் வார்த்தைகள் எவ்வளவு காலம்தான் காற்றில் நிற்குமென்ற சந்தேகம் எழாதா? 

*நான்காவது,* அன்னிய முதலீடு குறித்த அறிவிப்பு. அன்னிய முதலீடு 26 சதவீதமாகக் கொண்டு வரப்பட்ட போதே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சொன்னது. அது *"சாலையின் இறுதி எல்லை அல்ல"* (Not end of the road) என்று. அது நிரூபணம் ஆகியிருக்கிறது. 26 சதவீதம் 49 ஆக உயர்ந்தது. இன்று 74 சதவீதம் ஆக முன் மொழியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல *"இந்தியர் கட்டுப்பாடு"* (Indian Control) என்று இவர்களே 2015 ல் சட்டத்தில் இணைத்ததை இன்று மாற்றுகிறார்கள். *"நிபந்தனைகளோடு அன்னியர் உடமை"* (Foreign ownership with safeguards) என்று இப்போது சொல்கிறார்கள். என்ன நிபந்தனைகள்! எப்படி இதை நம்புவது?

ஆகவேதான் அரசு சொல்கிற நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை என்பதெல்லாம் விட அரசிடம் மக்களுக்குள்ள *நம்பகப் பற்றாக்குறையே* (Trust Deficit) மிக முக்கியமான பிரச்சினை. 

மக்கள் கருத்தை திரட்டி நம்பகப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம்! அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம். 

******************

*செவ்வானம்* 

No comments:

Post a Comment