Wednesday, February 3, 2021

திருப்பதி லட்டு - ஜாங்கிரி-நிர்மலா அம்மையார்

 *நாளொரு கேள்வி: 01.02.2021*


இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க. சுவாமிநாதன்*
####################

*திருப்பதி லட்டு - ஜாங்கிரி- ஆத்ம நிர்பர்*

கேள்வி: பட்ஜெட் 2021 பொதுத் துறை பங்கு விற்பனையில் பெரும் முனைப்பை காட்டியுள்ளதே?

*க. சுவாமிநாதன்*

பாரதி சாடிய *நடிப்பு சுதேசிகள்* இவர்கள் என இன்றைய ஆட்சியாளர்கள் என்பதை இந்த பட்ஜெட் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 

*எல்.ஐ.சி பங்கு விற்பனையை* 2021- 22 ல் நடத்தி விடுவோம் என அறிவித்துள்ளார்கள். *இன்னும் இரண்டு அரசு வங்கிகள், ஒரு அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனம்* என கார்ப்பரேட்டுகளின் இலையில் வகை வகையாய் பரிமாறப்பட்டுள்ளது. 1, 75, 000 கோடிக்கு பட்ஜெட் போட்டுள்ளார்கள். *பி.பி.சி.எல், (BPCL) கண்டைனர் கார்ப்பரேசன் இந்தியா (Concor), ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (SCI), நீலாச்சல் இஸ்பட் நிகாம் லிமிட்டெட், பவான் ஹான்ஸ், ஏர் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி* ஆகிய நிறுவனங்களின் கேந்திர பங்கு விற்பனைகளும் (Strategic Sale) வரும் நிதியாண்டில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
கேந்திர பங்கு விற்பனை என்றால் அப்படியே நிர்வாகம் தனியார் கைகளுக்கு சென்று விடும் என்று அர்த்தம். அடுத்த லிஸ்டை தயார் செய்ய நிதி அயோக் இடம் சொல்லி இருப்பதாக நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறியிருக்கிறார். 

கோவிட் பெருந்தொற்றால் தவிக்கிற சாதாரண மனிதர்களின் பசியைப் பற்றிக் கவலைப்படாத பட்ஜெட் நடப்பாண்டில் பங்கு விற்பனை நினைத்த வேகத்தில் நடந்தேறாததால் அகோரப் பசியோடு இருக்கும் பெரும் தொழிலதிபர்கள் மீது பரிவு காண்பித்திருக்கிறது. *கடந்த ஆண்டு 2,10,000 கோடி இலக்கு நிர்ணயித்து விட்டு கோவிட் பரவலால்  17364 கோடிகள் மட்டுமே இதுவரை விற்க முடிந்திருக்கிறது என்றால் காத்திருந்த கார்ப்பரேட்டுகள் எவ்வளவு ஏமாந்து போயிருப்பார்கள்!* ஆகவேதான் பெரிய ஓட்டல்களில் டைம் போட்டு அயிட்டங்கள் கிடைக்கும் என்று போர்டு வைப்பது போல பட்ஜெட்டில் காலக் கெடுகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர். 

ஒரு படத்தில் விவேக்கை ஏமாற்றிய மயில்சாமியிடம் *"டேய் நீ என்ன சொன்னாலும் பரவால்லடா, ஆனா சந்திரபாபு நாயுடு  திருப்பதில லட்டுக்கு பதிலா ஜாங்கிரி மாத்திட்டாருன்னு சொன்ன பாரு"* என்று பாய்வார். அது போலதான் இந்திய மக்களின் நிலைமை. இந்திய நாட்டின் சுயசார்பிற்கு வழி வகுத்த பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கு "ஆத்ம நிர்பர்" (சுயசார்பு பாரதம்) என்றே பெயர் வைத்திருப்பதை என்ன சொல்வது. 

எல்.ஐ.சி பங்கு விற்பனையோடு பட்ஜெட் நிற்கவில்லை. *இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74% ஆக உயர்த்தப் போவதாகவும்* அறிவித்துள்ளது. *"ஆத்ம நிர்பர் - 2"* என்ற அடுத்த படம் இது. சுதேசி பேசுபவர்களின் வேடம் எப்படிக் கலைகிறது பாருங்கள்! அதற்கான மசோதா இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வரப் போகிறதாம். *"பொருளாதார ஃபாஸ்ட் புட்"* இதுதான் போலிருக்கிறது. 

ஆகவே இந்த பட்ஜெட், பொதுத் துறைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. வருமானத் திரட்டலில் கார்ப்பரேட் வரிகள், சொத்துரிமை வரி, சூப்பர் ரிச் வரிகள்... இப்படி எதையுமே சிந்திக்க மனதில்லாத அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ள குத்து விளக்கை விற்றுச் சமாளிக்கப் பார்க்கிறது. 

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment