*நாளொரு கேள்வி: 06.02.2021*
இன்று நம்மோடு பொருளாதார நிபுணர் *சி.பி.சந்திரசேகர்* (தமிழில் - சிவசங்கர்,(BEFI) திருநெல்வேலி)
#####################
*இதுவரை இல்லாத பட்ஜெட்டா?*
*கேள்வி:*
எப்படி இருக்கிறது 2021-22 ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்? உண்மையிலேயே இது நிதியமைச்சர் சொல்வது போல் முன்னெப்போதும் இல்லாத வகையிலான பட்ஜெட் தானா?
*சி.பி. சந்திரசேகர்:*
அதிகமாக உருவாக்கப்பட்ட போலியான எதிர்பார்ப்புகள் நம்மை திசைதிருப்புவதற்கு முன்னர் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்த்து விடுவோம் வாருங்கள்.
2020-21 ம் நிதி ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டிற்கும் 2021-22 ம் நிதி ஆண்டிற்கான தற்போதைய பட்ஜெட் மதிப்பீட்டிற்கும் செலவினங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் இல்லை. 2020-21 ம் நிதியாண்டில் *கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் பொது சுகாதாரத்திற்கு போர்க்கால அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்ட போது கூட வெறும் 13.4 சதவீதம் அளவிற்கு மட்டுமே நிதி அதிகரிக்கப்பட்டது.* அதற்கு முந்தைய தொற்று எதுவும் இல்லாத 2019 -20 ம் நிதியாண்டில் கூட இந்தத் துறையில் மொத்த செலவினம் 16% அளவிற்கு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பெருந்தொற்று காலத்தில் அரசு பொது சுகாதாரத்திற்கான செலவினங்களை கணிசமான அளவிற்கு அதிகரித்தது என்ற நிதியமைச்சரின் வாதத்தை மறுப்பதாகவே உள்ளது.
பெருந்தொற்றிற்குப் பிறகான காலத்திலும் அரசின் நிதிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் அதே தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடரும் இந்த 2021-22 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும் மொத்த செலவினங்கள் 0.95 சதவீதம் மட்டுமே உயரும் என்று தெரிகிறது.
*அரசு தொடர்ந்து பின்பற்றும் இந்த தாராளமய பொருளாதாரக் கொள்கையே அரசாங்கத்தின் வருவாய் இழப்பிற்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.*
பெருந்தொற்று தீவிரமாக பரவுவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 2020-21 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசு மதிப்பீடு செய்த 20.2 லட்சம் கோடி மொத்த வருவாய் என்பது அதற்கு முந்தைய 2019-20 ல் மதிப்பீடு செய்யப்பட்ட 16.8 லட்சம் கோடி வருவாயை விட 20 சதவீதம் அதிகம். ஆனால் அரசு எதிர்பார்த்த இந்த வருவாயை அடைய முடியாமல் போனதற்கு பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார தேக்கம் மட்டும் காரணமல்ல. மாறாக பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய *செப்டம்பர்- 2019 ல் அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி தள்ளுபடியே* இதற்கு மூல காரணமாகும். இத்தகைய கனிசமான வருமான இழப்பினால் 2020-21 ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்தது.
*இங்கு பிரச்சனை என்பது அரசாங்கம் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது என்பதல்ல. உண்மையான பிரச்சனை என்பது அரசுக்கு வரவேண்டிய வருவாய் கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைகிறது என்பதே*.
இப்போதைய 2021- 22 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 17.9 லட்சம் கோடி ரூபாய் வருவாய் அரசிற்கு வரும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இது கடந்த 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட குறைவே ஆகும்.
*இவ்வாறு இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வருவாயும் குறைந்து நிதிப்பற்றாக்குறையின் அளவையும் 6.8 சதவீதத்திற்குள் குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்படிருப்பது, அத்தியாவசியத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் பெருமளவு நிதி குறைக்கப்படும் என்பதேயே நமக்கு காட்டுகிறது.*
உதாரணத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்திற்கு 2020-21ம் நிதியாண்டில் 1,11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அதற்கு முந்தைய 2019-20 ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 61500 கோடி (பிறகு 71687 கோடியாக உயர்த்தி மறுஒதுக்கீடு செய்யப்பட்டது) ரூபாயைக் காட்டிலும் அதிகம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கடுமையான வேலையிழப்பால், வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கித் திரும்பியதால் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவை கனிசமாக அதிகரித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வரை அவர்களின் வாழ்நிலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாத சூழலில், 2021-22 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை *73000 கோடி ரூபாய் மட்டுமே* என்பது வருத்தத்துடன் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
உணவு மானியத்திற்கான ஒதுக்கீட்டிலும் இதேபோன்ற நிலைதான் உள்ளது. 2020-21ம் நிதியாண்டில் 1,15, 570 கோடியாக அறிவிக்கப்பட்டு பின்னர் பெருந்தொற்று காலத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(National Food Security Act) கீழ் வரும் அனைவருக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கான நிதி ஒதுக்கீடு 4,22,618 கோடி ரூபாயாக உயர்ந்தது. பெருந்தொற்றிற்குப் பிந்தைய இந்த காலகட்டத்தில் இன்னும் இதற்கான தேவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறையாத சூழலில், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை *243000 கோடி ரூபாய் மட்டுமே*.
இதிலும் ஒரு பகுதி பணம் ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பேரழிவிற்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களுக்கு உதவ வேண்டிய அரசு, அதிலிருந்து தன்னை துரிதமாக விடுத்துக் கொள்வதையே தனது முதன்மைக் கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மறைக்கும் வகையிலேயே நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டை *'முன்னெப்போதும் இல்லாத வகையிலான பட்ஜெட்'* என்று கூறி வருகிறார். இவ்வாறு அவர் சொல்வதற்கு கூறும் முக்கியக் காரணம், பொது உடல் நலம் மற்றும் நலவாழ்விற்கு (Health and well-being) அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுவதே ஆகும். இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட 94452 கோடி ரூபாயை விட 137 சதவீதம் அதிகமாகும்.
*ஆஹா அருமையான செயல் என்று அவசரப்பட்டு மகிழ்ந்து விடாமல் தொடர்ந்து படியுங்கள்.*
இந்த நிதி ஒதுக்கீடு உண்மையில் உடல் நலம் மற்றும் நலவாழ்விற்கான முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடாக இல்லாமல் மிகவும் மேலோட்டமான ஒரு பொது விளக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிதி ஒதுக்கீட்டில் மிக முக்கியமானதும் தவிர்க்க இயலாததுமான அம்சம் என்பது கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35000 கோடி ரூபாய் மட்டுமே. இது தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதே உண்மை.
உடல் நலம் மற்றும் நலவாழ்வில் மிக முக்கிய துறையான உடல்நலம் மற்றும் குடும்ப நலன் துறைக்கான( Department of Health and Family Welfare- DOHFW) பங்காக இந்தப் பெரும் ஒதுக்கீட்டுத் தொகையில் வெறும் *71000 கோடி ரூபாய்* மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் DOHFW துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 65000 கோடி ரூபாயோடு ஒப்பிடும் போது வெறும் 9.6 சதவீத உயர்வு மட்டுமே. பெருந்தொற்றிற்குப் பிறகான இந்த மிக முக்கிய காலகட்டத்தில் குடும்ப நலனுக்கு ஒதுக்கப்பட்ட இந்த உயர்வு என்பது மிகச் சொற்பமே. *அதிலும் இந்தத்துறைக்கு 2020-21ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட மறு நிதிஒதுக்கீடான 78,866 கோடி ரூபாயை ஒப்பிடும்போது பெருந்தொற்றிற்குப் பிறகான இப்போதைய அவசியமான சூழலில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை என்பது 9.6 சதவீதம் குறைவு என்பது கசப்பான உண்மையாக உள்ளது.*
மேலும் இந்த நிதிஒதுக்கீடு தேசிய நிதி ஆணையத்தின் (Finance Commission) வழிகாட்டுதலின்படி மாநிலங்களுக்கு கட்டாயமாக வழங்கப்படவேண்டிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைக்கான 49214 கோடி ரூபாயையும், ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பு குழாய்களைப் பதிப்பதற்கு ஆகும் செலவையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. தூய்மையான குடிநீர் வழங்குவது என்பது உடல்நலம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கும் என்பது உண்மையென்றாலும், அந்த திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை நலவாழ்வுத் துறையின் கீழ் கொண்டுவருவது என்பது தவறான ஒன்று.
*ஏனெனில் குடிநீர் இணைப்பு மற்றும் ஜல் ஜீவன் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் அனைத்தும் மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில்(Central Road and Infrastructure Fund) இருந்து பெறப்படுபவையாகும். இந்த நிதி இதற்காக பிரத்யேகமாக வசூல் செய்யப்படும் நெடுஞ்சாலை விரிவாக்க செஸ்ஸில்(CESS) இருந்து பெறப்படுபவையாகும்.*
இவ்வாறு உள்கட்டமைப்புத் துறையின் நிதியை வேறு துறைகளுக்கு மடைமாற்றி விடுவதால் உள்கட்டமைப்புத்துறை வளர்ச்சிக்குத் தேவையான நிதியில் ஒரு பெரும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறையை மூன்று வழிகளில் இந்த அரசு சரி செய்ய முயல்கிறது. அவை *பொதுத்துறை பங்குகளை விற்பது, பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை விற்பது, தனியார் மூலதனத்தை ஈர்ப்பது* ஆகியவையே. அதன்படி இந்த பட்ஜெட்டில் ஒரு சில சிறந்த லாபம் ஈட்டும் *பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் 1,75,000 கோடி ரூபாய்* நிதி திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரி வருவாய் மூலம் திரட்டப்பட வேண்டிய நிதி ஆதாரங்களை பொதுச் சொத்துக்களை விற்பதன் மூலம் திரட்ட முயற்சிக்கிறது இந்த அரசு. ஆனால் 2020-21 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 2,10,000 கோடி ரூபாய் பங்கு விற்பனை என்ற இலக்கை சிறிதுகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்த நிலையை ஒப்பிடும்போது இது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நவீன தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரமான குறைந்த வரி விதிப்பு, குறைந்த கடன் என்பதையே இம்முறையும் கையாண்டு அவற்றால் ஏற்படும் நிதியிழப்பைப் பொதுச் சொத்துக்களை விற்பதன் மூலம் ஈடுகட்ட முயற்சிக்கும் வழக்கமான ஒரு பட்ஜெட்டாகவே இது உள்ளது.
இந்த பட்ஜெட் *முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒன்று* என்று நிதியமைச்சர் தனது உரைக்கு முன்னர் குறிப்பிட்டதை, அதனை முழுவதும் படித்துப் பார்த்த பிறகு நமக்கும் ஒரு வகையில் உண்மை என்றே தோன்றுகிறது. ஆம் இதற்கு முந்தைய பட்ஜெட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இலைமறை காயாக வெளிப்பட்ட தனியார்மயப் போக்கு, இந்த முறை எந்தவொரு கூச்ச நாச்சமும் இன்றி வெளிப்படையாக பட்டியல் போட்டு கொடுக்கப்பட்டிருப்பது முன் எப்போதும் இல்லாத ஒன்று தான்.
*Yes it is never like before*.
*****************
*செவ்வானம்*
No comments:
Post a Comment