Thursday, February 18, 2021

மறக்க இயலா மகத்தான தலைவர்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களின் நான்காவது நினைவு நாள் இன்று.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினராக, மத்திய கண்ட்ரோல் கமிஷன் உறுப்பினராக செயல்பட்ட அருமையான தோழர்.

"அன்பு கெழுமிய தோழர்களே" என்று கம்பீரக் குரலில் அவர் உரையாற்ற தொடங்கும் போதே அவை அவரது கட்டுக்குள் வந்து விடும்.

இனிய தமிழிலும் அருமையான ஆங்கிலத்திலும் ஊழியர் பிரச்சினைகளையும் நாட்டின் நிலைமைகளையும் உலக சூழல்களையும் பொருத்தமான கவிதை வரிகளோடு எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

மார்க்சிய தத்துவங்களை எளிமையாக கற்றுக் கொடுக்கும் ஆசான் அவர். அப்பணியை தன் இறுதி மூச்சு வரை செய்து வந்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகு சென்னையில் நடந்த விழாவில் கொல்கத்தாவில் உள்ள தலைவர்கள் சூரியன்கள், அவர்களிடமிருந்து ஒளியை பெறும் சில அகல் விளக்குகள் நாங்கள் என்று தாகூரின் கவிதை வரிகளை அவர் சொல்ல, அந்த தாகூரின் கவிதை வரிகளை முழுமையாகச் சொல்லி, நீங்கள் அகல் விளக்குகள் அல்ல, இளைய சூரியர்கள் என்று தோழர் சரோஜ் சவுத்ரி சொன்னதும் முப்பது வருடங்களுக்குப் பிறகும் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.



எங்கள் வேலூர் கோட்டத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போது அழைத்தாலும் தட்டாமல் வருபவர். ஒரு மகளிர் மாநாட்டில் பங்கேற்பு மிகவும் குறைவாகி சோர்வுற்றிருந்த போது "உங்கள் கோட்டத்தின் புவியியல் தன்மையை புரிந்து கொள்ளுங்கள், மகளிர் மாநாட்டை இரண்டு பிரிவாக நடத்துங்கள்" என்ற அவரது ஆலோசனை இன்றளவும் நாங்கள் வெற்றிகரமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாகையில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்ற போது நான்கு நாட்கள் விடுதியில் அவரோடு ஒரே அறையில் தங்கியது அற்புதமான அனுபவம். எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொள்ளும் வகுப்பாக அது அமைந்தது.

ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரது நினைவில் நெஞ்சில் எந்நாளும் வீற்றிருக்கும்.

செவ்வணக்கம் தோழர் ஆர்.ஜி


No comments:

Post a Comment