Monday, February 8, 2021

எங்களுக்கானது. எங்களுக்கானது மட்டுமல்ல .......

 எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம், மத்திய பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் துறையில் கொண்டு வர விழைந்துள்ள மாற்றங்கள் குறித்து விவாதித்தது. அந்த சுற்றறிக்கையை எங்கள் தோழர்களுக்காக தமிழாக்கம் செய்து அச்சிட்டு அளித்தோம்.  அந்த விபரங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


 

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்

வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி

சிறப்புச் சுற்றறிக்கை                                                                                                                                                                                                                      04.02.2021

அனைத்து உறுப்பினர்களுக்கும்

அன்பார்ந்த தோழரே,

 

அகில இந்திய செயலகக் கூட்ட முடிவுகளை அமலாக்குவோம்

 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம் 02.02.2021 அன்று இணைய வழியில் நடைபெற்றது. அம்முடிவுகள் குறித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளோம். அகில இந்திய செயலக அறைகூவல்களை முழுமையாக அமலாக்குவோம். எல்.ஐ.சி பங்கு விற்பனையை தடுத்திடுவோம்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள

ஒப்பம் எஸ்.குணாளன்

பொதுச்செயலாளர்

 

-------------------------------------------------------------------------------------------------------

02.02.2021 அன்று நடைபெற்ற அகில இந்திய செயலகக் கூட்டம்

 

எல்.ஐ.சி பங்குகளை விற்கும் நடவடிக்கைகளை.

ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முடிவை,

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய   நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து

74 % ஆக உயர்த்தும் முன்மொழிவை

கண்டிக்கிறது.

 

போராட்டத்திற்கு தயாராகுமாறு ஊழியர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம் 02.02.2021 அன்று இணைய வழியில் நடைபெற்றது. 01.02.2021 அன்று சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டினால் நம் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து விவாதிக்கவும் எதிர்கால இயக்கங்கள் குறித்து முடிவெடுக்கவும் இந்த இணையவழி கூட்டம் அழைக்கப்பட்டது.

 

மத்திய பட்ஜெட் மக்களை பெரிய அளவில் ஏமாற்றி விட்டது என்றே அகில இந்திய செயலகம் கருதியது. உருப்படியான உள்ளடக்கம் ஏதுமில்லாத வெற்று வாய் ஜாலம் மட்டுமே. கடுமையான தேக்கம் மற்றும் பெருந்தொற்று என்ற இரண்டு பெரும் தாக்குதல்களால் இந்தியப் பொருளாதாரம் நிலை குலைந்து போயுள்ளது. மக்களின் சிரமங்களையும் துயரங்களையும் நீக்கி சரி செய்வதற்கான எந்த ஒரு  மீட்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலையிழப்பு, வேலையின்மை, அதிகரிக்கும் அசமத்துவம் ஆகியவற்றால் இன்னலுற்ற மக்களுக்கு சின்ன நிவாரணம் அளிக்க நேர்மையான ஒரு சிறிய நடவடிக்கை எடுக்கக்கூட இந்த அரசு தயாராக இல்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ மிகப் பெரும் பரிசுக் குவியலையே அள்ளிக் கொடுத்துள்ளது.

 

சுருங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க வருவாயை திரட்ட தீவிரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை செயலகம் விமர்சித்தது. பொது செலவினத்தை பெருக்குவதற்கு வரி விதிப்பு மூலமாக நிதியாதாரத்தை திரட்ட அரசு செயலற்றதாகவும் உள்ளது, விருப்பமில்லாமலும் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் பித்து பிடித்தது போல காண்பிக்கும் வேகம் அதனை நிரூபிக்கிறது. பங்கு விற்பனையும் தனியார்மயமுமே இந்த பட்ஜெட்டின் அடி நாதமாக அமைந்துள்ளதென்று செயலகம் விமர்சித்தது.

 

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த இன்சூரன்ஸ் சட்டம் 1938 ஐ திருத்துவது, இரண்டு பொதுத்துறை வங்கிகளோடு ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது, எல்.ஐ.சி பங்குகளை 2021-2022 நிதியாண்டிலேயே விற்பதென்ற முடிவு ஆகியவற்றை செயலகம் கண்டித்தது. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவதில் எந்த நியாயமும் இல்லை என்பதை செயலகம் மீண்டும் வலியுறுத்தியது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடுகளில் இப்போதுள்ள அன்னிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு  தற்போதுள்ள வரம்பான 49 % ஐ விட மிகவும் குறைவாகவேத்தான் உள்ளது. எனவே அன்னிய முதலீட்டின் போதாமை என்பது இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சிக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை. அன்னிய முதலீட்டு வரம்பு உயர்வு என்பது நம் நாட்டின் அரிய உள்நாட்டு சேமிப்பின் மீது அன்னிய மூலதனத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல நம் நாட்டின் நலன்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என்று செயலகம் சுட்டிக் காட்டியது.

 

எந்த ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவது என்பது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்ற தீர்மானகரமான கருத்து செயலகத்திற்கு உண்டு. கடுமையான போட்டிக்கு மத்தியிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிகச்சந்தையில் தங்களின் மேலாதிக்கத்தை நிலையாக தக்க வைத்துக் கொண்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் சமீபத்திய சூழலிலும் கூட பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அற்புதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தற்போது அக்கம்பெனிகள் ஏதேனும் சிக்கல்களை சந்திக்கின்றன என்றால் அதற்கு வணிகச் செயல்பாட்டில் மந்தம் நிலவுகிறது என்பது காரணம் அல்ல. எதிர்காலத்தில் பங்கு விற்பனை கவர்ச்சிகரமாக இருக்க வேண்டுமென்பதால் கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவை நிர்ப்பந்திக்கப்பட்டதுதான் காரணம். மத்தியரசு ஏதோ ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்குப் பதிலாக அனைத்து பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக கட்டமைத்து போட்டியை வெற்றிகரமாக சந்திக்க வைக்க வேண்டும் என்றே செயலகம் கருதுகிறது.

 

எல்.ஐ.சி பங்கு விற்பனையை வரும் நிதியாண்டிலேயே நிகழ்த்துவது என்ற பட்ஜெட் முன்மொழிவு செயலகக் கூட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது தேசியமயமாக்கலின் அடிப்படை நோக்கங்களையே சிதைத்து விடும் என்பதே செயலகத்தின் கருத்து. தேசத்திற்கும் பாலிசிதாரர்களுக்கும் சொத்து மதிப்பை உருவாக்கி பகிர்வதற்குப் பதிலாக பங்குதாரர்களுக்கு லாபத்தை பெருக்கும் நோக்கில் செயல்படும் நிலைக்கு தள்ளப்படும். அனைத்து இந்திய மக்களுக்குமான சொத்து சில செல்வந்தர்களின் லாபத்திற்காக சீரழிக்கப்படும் என்றே செயலகம் உணர்கிறது.

 

எல்.ஐ.சி பங்கு விற்பனையை எப்படியாவது அமலாக்கும் தறி கெட்ட வேகத்தில் மத்தியரசு இருப்பதாக தெரிகிறது.அதனை சட்டபூர்வமாக செய்ய எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை காத்திருக்க அரசு தயாரில்லை. எந்த வழியிலாவது எல்.ஐ.சி பங்குகளை விற்க அரசு துடிக்கிறது. எனவே பட்ஜெட்டுக்கான நிதி மசோதாவிலேயே எல்.ஐ.சி சட்டத்திற்கான திருத்தங்களை திருட்டுத்தனமாக நுழைத்துள்ளது. நிதி மசோதா 2021 ஐ மேலோட்டமாக பார்க்கிற போதே எல்.ஐ.சி சட்டம் 1956 ல் எல்.ஐ.சி யின் மூலதனக் கட்டமைப்பில், எல்.ஐ.சி யின் மேலாண்மைக் குழுவில், பாலிசிதாரர்களுக்கான லாபப் பகிர்வு, எல்.ஐ.சி யின் செயல்பாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றில் அரசு கொண்டு வர விழையும் திருத்தங்களை அறிந்து கொள்ள முடியும்.

 

இத்திருத்தங்கள் மூலமாக அரசு எல்.ஐ.சி யின் மூலதனத்தை 100 கோடி ரூபாயிலிருந்து 25,000 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பத்து ரூபாய் மதிப்புள்ள 2500 கோடி பங்குகளாக அவை பிரிக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு குறைந்தபட்சம் 75 % பங்குகளையாவது அரசு வைத்துக் கொள்ளும். அதன் பின்பு குறைந்த பட்சம் 51 % பங்குகளையாவது அரசு வைத்திருக்குமென்று சொல்லப்பட்டுள்ளது. பாலிசிதாரர்கள் நலனை கடுமையாக பாதிக்கிற வகையில் உபரி பகிர்வுக்கான வரையறைகளை மாற்றும் முன்மொழிவும் உள்ளது.

 

எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தின் முதல் கட்டம் என்றே செயலகம் கருதுகிறது.பொதுத்துறை வங்கிகளிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் அரசு வைத்திருக்கும் பங்குகளின் அளவு   

51 % த்திற்கு குறையாது என்று சட்டங்களின் வாயிலாகவே உறுதியளிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் குறிப்பிட வேண்டும். அப்படிப்பட்ட சட்டபூர்வமான உறுதிமொழி இருந்தும் இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார்மயமாக்கப் போவதென்ற அறிவிப்பு இந்த அரசின் நம்பிக்கை துரோகத்தையும் நவீன தாராளமயமாக்கல் செயல்திட்டத்தின் மீது உள்ள பிடிப்பையும் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

 

பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவை விரிவாக திரட்டி இத்தாக்குதலுக்கு எதிராக உறுதியோடு போராடுவது என்று செயலகம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. பொதுத்துறை நிதி நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பிரச்சினையில் நிதித்துறை அமைப்புக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிதித்துறையையும் தாண்டி ஒற்றுமையை உருவாக்க நாம் பாடுபடுவது என்றும் கூட்டம் முடிவு செய்துள்ளது.

 

எல்.ஐ.சி யிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் கூட்டு போராட்ட அணியில் நம்மோடு உள்ள அமைப்புக்களோடு ஆலோசித்து உரிய போராட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய தலைமையகத்திற்கு அதிகாரம் செயலகத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

 

பொதுத்துறை இன்சூரன்ஸை பலவீனப்படுத்தும் அரசின் மோசமான முயற்சிக்கு எதிராக சக்தி மிக்க இயக்கங்களை மேற்கொள்ள தயாராக இருக்குமாறு அனைத்து ஊழியர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள

ஸ்ரீகாந்த் மிஸ்ரா

பொதுச்செயலாளர்

 

No comments:

Post a Comment