*நாளொரு கேள்வி: 29.01.2021*
இன்று நம்மோடு அறிவியலாளர் முனைவர் *த.வி.வெங்கடேசுவரன்*
####################
*கேள்வி:* பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?
*த.வி. வெங்கடேசுவரன்*
உலகெங்கும் மாட்டு சாணம் பல்வேறு வகையில் பயன் தருகிறது. இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணியை வைத்து உருவாக்கப்படும் வரட்டி சமையல் செய்ய எரிபொருளாகப் பயன்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளோம். மண் தரை, மண் சுவர் போன்றவற்றின் மீது மாட்டு சாணம் பூசும்போது பிணைப்பு பொருளாக மாறி மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணையப் பயன்படுகிறது. *காலம் காலமாக, உலகெங்கும், விவசாயிகள் மாட்டு சாணம் உட்பட கால்நடை கழிவுகளை எரு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.*
கடந்த சில நாட்களாக மாட்டு சாணம் அதுவும் குறிப்பாக நாட்டு *பசுவின் சாணம் கதிரியக்கத்தை அறுபது சதம் தடுத்துவிடுகிறது என ஆய்வு கூறுவதாக* பத்திரிக்கை செய்திகள் வருகின்றன. அதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன? அந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து அறிவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு குஜராத்தை சார்ந்த ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவர் பேராசியர் *மிஹிர் ஜோஷி* ஆய்வு செய்த முறை அதில் கிடைத்த தகவல்களை அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முனைவர் பட்டம் கற்க பல்கலைக் கழகத்தில் சேரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவி கூட இது போன்ற அபத்தமான ஆய்வைச் செய்யமாட்டார்கள். இந்தத் துறையில் இயற்பியல் கற்கும் மாணவ மாணவிகள் கல்வி குறித்த கவலை தான் இந்த ஆய்வு அறிக்கையைப் படித்ததும் என் மனதில் எழுந்தது.
இந்த ஆய்வில் அவர்கள் *சீசியம் 137* எனும் கதிரியக்க ஐசொடோப்பை பயன்படுத்தினார்கள். இயற்கை கதிரியக்க தன்மை வாய்ந்த சீசியம் 137 கதிரியக்கத்தை வெளியிட்டு பேரியம் 137 எனும் ஐசொடோப்பாக மாறிவிடும். அடுக்குச் சிதைவுக்கு
(Exponential decay) உட்பட்டிருக்கும் சீசியம் 137 இன் அரைவாழ்வுக் காலம்
(half-life) 30.17 ஆண்டுகள் ஆகும். அதாவது முதலில் தொடக்க அளவில் இருந்த சீசியம் 137 சிதைந்து பாதி அளவாக குறைய எடுக்கும் காலமே *அரைவாழ்வுக் காலம்.*
ஆல்பா பீட்டா மற்றும் காமா என மூன்று வகை கதிரியக்கம் உள்ளது என நாம் அறிவோம். சீசிய கதிரியக்க சிதைவின் போது பீட்டா கதிர்களும் காமா கதிர்களும் வெளிப்படும். இதில் பீட்டா கதிரியக்க ஆற்றல் அளவு 0.5120 MeV எனவும் காமா கதிர்களின் ஆற்றல் அளவு 0.6617MeV எனவும் அமையும்.
கதிரியக்கத்தை அளவிடும் ஒரு கருவி *கைகர் எண்ணி* (geiger counter). கதிரியக்க பொருள் குறிப்பிட்ட திசையில் உமிழும் ஆல்பா பீட்டா மற்றும் காமா துகள்களை எண் தொகை செய்து ஒரு நொடியில் எவ்வளவு ஆல்பா பீட்டா மற்றும் காமா துகள்கள் கருவியை வந்தடைந்தது எனக் கண்டறியும். இந்த எண் தொகை கூடுதல் எனில் வீரியமிக்க கதிரியக்கம்; குறைவு எனில் குறைவான கதிரியக்கம்.
*ஒருபுறம் சீசியம் 137 மறுபுறம் கைகர் எண்ணி இதுதான் ஆய்வின் அடிப்படை அமைப்பு.* முதலில் ஒரு நொடியில் கைகர் எண்ணி எத்துனை துகள்களை இனம் காண்கிறது எனக் கண்டறிந்தனர். 798 துகள்களை கைகர் எண்ணி இனம் கண்டது.
சீசியம் 137 மற்றும் கைகர் எண்ணி இடையே இடைவெளியை மாற்றிவிடாமல் இரண்டுக்கும் இடையே பல்வேறு வடிவங்களில் மாட்டு சாணியை உலரவைத்து உருவாக்கிய கட்டியை வைத்து பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதில் 16 மில்லிமீட்டர் தடிமனில் எண்கோண வடிவில் சாணியை வரட்டி தட்டி இடையே வைத்து ஆராய்ந்தபோது போது கைகர் எண்ணி ஒருநொடியில் 335 துகள்கள் பதிவாகியது. அதாவது கதிரியக்க அளவு சுமார் 58.2 சதவிகிதம் குறைந்து போனது. அதுவே ஒரு மில்லிமீட்டர் தடிமனில் சாணியை வைத்துப் பார்த்தபோது கைகர் எண்ணி ஒருநொடியில் வெறும் 325 துகள்கள் மட்டுமே பதிவாகியது. அதாவது கதிரியக்கத்தில் 59.27 சதவிகிதம் குறைவு.
சொற்குற்றமும் பொருட்குற்றமும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
*முதலாவதாக* கதிரியக்க ஆய்வுகள் செய்யும்போது குறைந்த பட்சம் மூன்று முறை ஆய்வைச் செய்து அதில் கிடைக்கும் விடைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் அளவில் இருந்தால் மூன்றின் சராசரியை தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஏன்? கதிரியக்கம் ஒரு தற்செயல் நிகழ்வு. கதிரியக்க கதிர்கள் எந்தத் திசையிலும் செல்லலாம். கைகர் எண்ணி பொருத்தியுள்ள திசையில் மட்டும் கதிரியக்கம் செல்லாது. எனவே தான் பொதுவாக அறிவியல் ஆய்வுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அளவீடு செய்து சராசரியை கொள்வார்கள். இந்த ஆய்வில் ஒரே ஒருமுறை தான் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
*இரண்டாவதாக* குறிப்பிட்ட பொருளை மட்டும் சோதனை செய்யாமல் பல்வேறு பொருட்களை சோதனை செய்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மில்லிமீட்டர் வரட்டி வைத்துச் சோதனை செய்தது போல ஒரு மில்லிமீட்டர் பேப்பர் வைத்துச் சோதனை செய்தால் கதிரியக்கம் தடைபடுகிறதா? தடைபடுகிறது என்றால் எவ்வளவு? பேப்பருக்கு பதிலாகப் பிளாஸ்டிக், உலோகம், துணி எனப் பல்வேறு பொருள்களை வைத்து ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போது தான் தெளிவு கிடைக்கும்.
ஏன் போலி ஆய்வு? சீசிய கதிரியக்க சிதைவின் பொது 0.5120 MeV அளவு ஆற்றலில் பீட்டா கதிர்களும் 0.6617MeV ஆற்றலில் காமா கதிர்களும் வெளிப்படும் என ஏற்கனவே கண்டோம். ஆல்பா பீட்டா மற்றும் காமா கதிர்களில் வெறும் பேப்பர் கொண்டு ஆல்பா கதிர்களைத் தடுத்து விடலாம். சற்றே தடிமன் பேப்பர், மெல்லிய உலோக தகடு முதலிய பீட்டா கதிர்களைத் தடுத்துவிடும். பீட்டா கதிர்கள் என்பது அடிப்படையில் எலக்ட்ரான்கள் தான். காற்று கூடப் பீட்டா கதிர்களை உட்கொண்டு விடும். காமா கதிர்களைத் தடுக்க தான் சிக்கல். எனவே கதிரியக்க தடுப்பு எனும்போது ஆல்பா பீட்டா கதிர்கள் சிக்கலே இல்லை. காமா கதிர்கள் மட்டும் தாம் பெரும் சிக்கல்.
சீசியம் 137 கதிரியக்க சிதைவில் வெளிவருவதில் பாதியளவு பீட்டா... பாதியளவு காமா... *எனவே சாணி மட்டுமல்ல, பேப்பர், உலக தகடு முதலியவையும் பீட்டா கதிர்களை தடுத்து பாதிக்கும் கூடுதல் கதிரியக்கத்தை தடுப்பு செய்யும்.*
அல்பா பீட்டா மற்றும் காமா கதிர்களை ஒருசேர கைகர் எண்ணி அளவிடும். எனவே சாணியால் ஆபத்தான காமா கதிர்களைத் தடுக்க முடிந்ததா என்பதை கைகர் எண்ணி கொண்டு அளவிட முடியாது.
முக்கண்ணன் ஆயினும்...
*பசுவின் சாணிக்கு தான் மகத்துவம் என்றால் ஆட்டின் சாணி, எருமையின் சாணி ஒட்டகத்தின் சாணி குதிரையின் சாணி இவற்றையும் எடுத்து அதே அளவு தடிமனில் செய்து ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வெறும் பசு சாணி கொண்டு ஆய்வு செய்தால் அது அறிவியல் ஆய்வே இல்லை.*
மொபைல் போனில் பயன்படுத்துவது காமா கதிர்கள் அல்ல. மைக்ரோவேவ் கதிர்கள். கைகர் எண்ணியால் மைக்ரோவேவ் கதிர்களை இனம் காணமுடியாது. *மேலும் சாணி கொண்டு செய்யப்பட்ட சிப் மொபைல் செல்பேசியின் கதிர்களைத் தடுத்துவிடும் என்றால் செல்பேசி கோபுரத்திலிருந்து கதிர்கள் எப்படி செல்பேசியை வந்து அடையும்?* நாம் பேசும்போது ஏற்படும் கதிர்கள் எப்படி செல்பேசியிலிருந்து வெளிப்பட்டுக் கோபுரத்தை அடையும்?
சில காலம் முன்பு *நாட்டு பசு சாணியில் தங்கம் இருக்கிறது என்ற செய்தியும்* வெளிவந்தது. உள்ளபடியே மாட்டு சாணியிலிருந்து வெண்ணிலா நறுமனசுவை பொருளை பிரித்து எடுத்து ஆய்வு செய்தவர் ஒருவருக்கு இக்நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பசுவில் மட்டுமல்ல மனித உடலிலும் சுமார் 0.2 மில்லிகிராம் தங்கம் இருக்கும். *சிறு அளவில் எதிலும் எங்கும் தங்கம் உட்பட பல்வேறு தாதுப்பொருள்கள் இருக்கும்.* எனவே நுண்ணளவில் தங்கம் உட்பட பல வேதிப்பொருள்களை சாணி உட்பட பல்வேறு பொருள்களில் இனம் காண்பது ஒன்றும் வியப்பு இல்லை.
அடிப்டையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளாமல் *எடுத்தேன் கவிழ்த்தேன் என அலங்கோலமாக இந்த ஆய்வை* மேற்கொண்டுள்ளனர். ஒரு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் என்றாலும் அவரது ஆய்வு முறை முடிவுகள் எல்லாம் அறிவியலற்றது. போலியானது. யாரையோ திருப்தி செய்யப் போலியாக மேற்கொண்ட ஆய்வு என்று தான் இதைக் காணமுடிகிறது.
பல்கலைகழகப் பேராசிரியரை அச்சுறுத்தப்பட்டோ ஆசைகாட்டியோ இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழல் மாணவ மாணவியரின் அறிவியல் கல்வி மற்றும் சுதந்திரமான அறிவியல் ஆய்வை பாதிக்கும். இதில் தோல்வியுறுவது எதிர்கால இந்தியாவும் இன்றைய இளைஞர்களும் தான்.
*****************
*செவ்வானம்*
No comments:
Post a Comment