"மத்யமர்" முகநூல் குழுவில் பார்த்த ஒரு பதிவின் ஸ்க்ரீன் ஷாட் கீழே இணைத்துள்ளேன்.
மேலே முகப்பில் உள்ள படம் அவர்களை வயிறெரிய வைத்துள்ளது போல. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்கும் கூட்டத்திற்கு இந்த ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் கண்டால் எரிச்சல் வருவது இயற்கைதானே!
அவர்களுக்காக தஞ்சையைச் சேர்ந்த தமுர்கச தோழர் பிம்பம் ஷாகுல் அவர்களின் பதிவை சமர்ப்பிக்கிறேன்
போய் வா மார்கழியே!
--------------------------------------------
-பிம்பம் சாகுல்
இவ்வாண்டு மார்கழி மாதம் நிறைவுறும் இந்த இறுதி மழை நாளில் எனது பால்யம் களித்த மார்கழி சுகானுபவம்...
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் (மேல ஊத்தூர் / உன்னதபுரம்) ஊரின் மையமாக கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என ஆறு அக்கிரஹாரங்களால் மையப்படுத்தப்பட்ட பேரூர்.
அக்கிரஹாரத்தின் அருகாமை தெருவான தட்டாரத் தெருவுக்குள்
செட்டியார்கள்(சைவ கோமுட்டி,நாட்டுக்கோட்டை)
வெள்ளாளர்கள் (சைவ,சோழிய)
கள்ளர்கள் (மேற்கொண்டார்,சேர்வை கொடிக்கமுண்டார்,நாட்டார்,சேதுராயர், பில்லுகட்டியார்,நாச்சாபிரியர்,) எதிரே மூப்பனார், அகமுடையார் தேவர், கோனார்,முதலியார்,நாடார்,முத்தரையர், என பலதரப்பட்ட சமூகம் சூழ்ந்திருக்க ஊருக்குள் ஒரே ஒரு இஸ்லாமிய குடும்பம் எங்களது குடும்பம்.
மார்கழி மாதம் குறித்துதானே பேசவந்தேன் ஆமாம்...
ஒரு ஆறு ஏழு வயது சிறுவனாக இருந்த எனக்கு மார்கழி குளிரிலிருந்து காத்துக் கொள்ள கருப்பில் சிவப்பு பார்டர் போட்ட காதி வஸ்திராலய போர்வை இருந்தது.
கடுங்குளிரில் சுருண்டு சுருங்கி படுத்திருந்தாலும் அந்த மார்கழி நடுநிசி என்பது எனக்கு திகிலடைந்த நேரமாகவே தூக்கமின்றி தவித்திருப்பேன்.
காரணம் சாமத்தில் ஒலிக்கும் ஒருவரின் பாடல் பிறகு வரும் சங்கொலி அதன் பின் ஒலிக்கும் டிங் டிங் டிங்...மணி தப்போசை
நடுநடுங்க வைக்கும் என்னை அதைவிட தெரு நாய்களின் குரைப்பும் கூச்சலும் என்னை மரணவாயிலுக்கே இட்டுச்செல்லும்.
பயத்தில் அருகில் படுத்துறங்கும் அப்பாவையோ அம்மாவையோ கட்டிக்கொண்டு காதுகளுக்குள் விரல்களை விட்டு பொத்திக்கொண்டு அவர்களுக்குள் என்னை புதைத்துக் கொள்வேன்.
உச்ச ஸ்தாயில் வரும் அந்த பாட்டும் ஒலியும் எங்கள் தெருவிற்குள் நுழைந்து எங்கள் வீட்டை கடந்து திரும்பும்வரை பயத்தில் எனது ஈரகுலை நடுங்கி பிறகு அடங்கி தூங்கிப்போகும்.
அதிகாலை 5-5.30.மணியளவில் திண்ணையில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் என்னை தெருவிலிருக்கும் அண்ணன்கள் அக்காக்கள் எனது காலைப்பிடித்து இழுத்து 'எலேய் நாசரு (வீட்டு செல்லப் பெயர் நாசர்)
பஜனைக்கு நேரமாச்சு வாடா!
என அரைத் தூக்கத்தில் என்னை இழுத்துப் போவார்கள்.
பத்து இருபது சிறுவர் பட்டாளம் கடைவீதிக்கு வந்தால்
அதற்குள்
பாகவத மேளா நடக்கும் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் கோவிலிலிருந்து ஒரு குழு
எட்டு முழ வேஷ்டியை நான்கு பக்கமும் குடைபோல் பிடித்தபடி கைகளில் ஜால்ரா அடித்தபடி குடுமி வைத்த பஞ்சகச்சம் அணிந்த வயதான பிராமணர்கள் எட்டு பத்து பேர் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதியபடி தெலுங்கில் கீர்த்தனைகள் பாடியவாரே காவிரி வெட்டாற்றை நோக்கி நடந்து செல்வார்கள்.
அக்குழுவை எனது ஒன்றாம் வகுப்பாசிரியர் கிருஷ்ணமூர்த்தி சார் தான் பெரும்பாலும் வழிநடத்துவார்.
அவர்கள் முன்னே செல்ல சற்று நேரம் கடந்து நாங்களும் அவர்களிடமிருந்து நீண்ட இடைவெளிவிட்டு அதே வெட்டாறு நோக்கிச்செல்வோம்.
மார்கழி பனிபடர்ந்த புகைமண்டலமாக காவிரி வெட்டாறு சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும்.
ஐயர்கள் குளித்து முடித்து சூரியநமஸ்காரம் முடிக்கும்வரை காத்திருப்போம் அல்லது கீழ்கரையில் (பெண்கள் குளிக்கும் படித்துரை) நாங்களும் குளிரில் உடல் உதற உதற நீராடிவிட்டு கரை ஏறுவோம்.
வயதில் மூத்த பதினைந்து பதினாறு வயதுள்ள அண்ணன்மார்கள் எங்கள் எல்லோர் நெற்றியிலும் உடலிலும் மூன்று விரல்களால் திருநீறு பட்டை அடித்துவிடுவார்கள்.
நாங்ளும் எங்களிடமிருக்கும் ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டே
'அம்பலத்தருசே அருமருந்தே
ஆனந்தத் தேனே புண்ணியரே...'
காக்க காக்க கனகவேல் காக்க...
திருப்புகழ்,தேவாரம்
என பற்பல தமிழ் பக்தி பாடல்களைப் பாடியவாரே அக்கிரஹாரத்தை நோக்கி நடந்து செல்வோம்.
அக்கிரஹாரத் தெருக்களில் பூசணி பூ சுமந்த வண்ணக் கோலங்களை ரசித்தபடியே வீடுவீடாகச் சென்று தானம் கேட்போம்.
மாமிகள் வெளியே வந்து எங்கள் பாத்திரத்தில் அன்போடு பச்சையரிசி,வெல்லம் போடுவார்கள்.
இப்படியே பெற்றதை எடுத்து வந்து எங்கள் தெரு திரைபெளதை அம்மன் கோவில் வளாகத்தில் வைத்துவிட்டு விறகுசுள்ளி பொறுக்க, வாழை இலை மளிகை சாமான் வாங்க சமைக்க என குழு குழுவாக பிரிந்து அடுப்பேற்றி சக்கரைப் பொங்கல் வெண்பொங்கல் என கூட்டாஞ்சோறு சமைத்து இலை பறித்து வந்து பறிமாரி பசியாறி மகிழ்ந்தாடி மாதம் முழுவதும் களித்திருப்போம்.
பள்ளி விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில் நண்பகல் 11,12 மணியளவில் எங்காவது தெரு மூலையில் வேகமாக கரும்புத்திண்ணும் போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் எனக்கு நடுநிசியில் கேட்ட அதே பாட்டு, சங்கொலி,டிங்,டிங்,டிங்... தப்போசை கேட்கும் நாய்களின் குரைப்பு மட்டும் சற்று குறைவாகயிருக்கும். பகல் பொழுதென்பதால் பயம் குறைந்திருக்க ஓடிவந்து ஒளிந்து நின்று பார்த்தால் மத்திம வயதிலோ தளர்ந்த வயதிலோ ஒரு நபர் தலைப்பாகை அணிந்து கொண்டு நெற்றி நிறைய நாமத்தோடு ஒரு கையில் பையுடன் மறுகையில் நான் குறிப்பிட்ட அந்த மூன்று இசை கருவிகளோடு எனது வீட்டுவாசலிலும் நின்றுகொண்டிருப்பார்.
போய் மீண்டும் அந்த ஈரமான பால்யத்தை கொண்டு வா மார்கழியே!
No comments:
Post a Comment