யாருக்காக... இந்தக் கடிதம் யாருக்காக?
மத்திய வேளாண்துறை அமைச்சர் அவர்களே.
தாங்கள் விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் நான்ஒரு விவசாயி என்கிற முறையில் எனக்கும் கிடைத்தது. நான் அக்கடிதத்தை முழுமையாக படித்து பார்த்தேன். விவசாயிகள் படும் கஷ்டங்களை நீங்களும் அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள்.இதுபோன்ற செய்திகளை என்னை முழுமையாக விவசாயத்திலிருந்து வெளியேற்றும் வார்த்தைகளாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் எந்த ஒரு விசயத்திற்கும் ஏதாவது ஒரு அதிகாரியையோ அல்லது பெரிய மனிதர்களையோ சந்திக்கின்ற போது, அவர்கள் என்ன கோரிக்கைக்காக வந்தார்களோ அந்த கோரிக்கை குறித்து அல்லது எதிர்தரப்பு செயல்பாடுகள் குறித்து ஆதரித்துப் பேசுபவர்களாக அதிகாரிகள் அல்லதுபெரிய மனிதர்கள் மாறி விடுவார்கள். அது போன்று தான் நீங்களும் நானும் ஒரு விவசாயி தான். நள்ளிரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏற்படும் கஷ்டங்களை நானும் அனுபவித்துள்ளேன். அறுவடை செய்த பொருட்களை விற்பனை செய்திட வாரக்கணக்கில் காத்துக்கிடந்துள்ளேன் என்கிறீர்கள்.
விவசாயிகள் நலன் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக இருந்து வருகிறது என்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்கள் வாழ்வில் வளம் பெருகவும், பிரதமர் தலைமையில் இந்த அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கடிதத்தில் நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். மேலும் பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3 தவணைகளில் விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.6000 அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிக்கடன் வாங்கும் கட்டாயம் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளீர்கள்.
அமைச்சர் அவர்களே, 2019-20ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 10287 விவசாயிகள் தற்கொலை செய்துமாண்டுபோயுள்ளனர். உங்களுடைய அரசு விவசாயிகளுக்காக செயல்பட்டிருந்தால் இந்த விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க முடிந்திருக்கும் அல்லது எண்ணிக்கையாவது குறைந்திருக்கும். இது எதுவுமே நடக்கவில்லையே. ஆண்டுக்காண்டு விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.6000 என்பது “யானைப்பசிக்கு சோளப்பொரி” கொடுப்பது போன்றது உங்கள் அரசின் செயல்பாடு.
தற்போது 23 பொருட்களுக்கு ஆதாரவிலை அரசு அறிவித்தாலும் அந்த விலைக்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் பொருட்களை வாங்குவது இல்லை. இது குறித்து தங்களது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? அல்லது இந்த அரசு விவசாயிகளின் பொருட்களை முழுமையாக கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொண்டதா? இந்த இரண்டும் இல்லையே. பிறகு எப்படி இந்த அரசால் விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் ? மண்டிகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். மேலும் விவசாயிகள் வீட்டுவாசலிலே பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு வெளிச்சந்தை விற்பனைக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளீர்கள். ஏ.பி.எம்.சி என்கிற வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிகள் பல்வேறு மாநிலங்களில் அவர்களின் மாநில சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநில ஏஜென்சிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் அல்லது அரசே நேரடியாக கொள்முதல் செய்வது மூலம் ஓர் இடத்தில் தங்கள் விளைவித்த பொருட்களை வாங்கவும், விற்கவும் வசதி ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த மண்டிகள். உதாரணமாக மகாராஷ்டிராவில் மட்டும் 300 கமிட்டிகள் (மண்டிகள்) உள்ளன. பீகாரில் 2006ஆம் ஆண்டிலேயே தனது ஏ.பி.எம்.சி சட்டத்தை மாநில அரசு ரத்து செய்துவிட்டது. பஞ்சாபில்மட்டும் ஏ.பி.எம்.சி மூலம் 90 சதவீத வேளாண் விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்கிறது. இதே அளவுஹரியானா, உத்தரப்பிரதேசத்திலும் மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மண்டிகள்இருப்பதால் பெரிய கார்ப்பரேட்டுகள் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு சிரமம் இருக்கும் என்று கருதி மண்டிகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவே நாங்கள் அறிகிறோம்.
வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் முழுமையாக நிறைவேற்றக்கூடிய ஓர் அரசாங்கத்தை இப்போது தான் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு மக்கள் மத்தியில் ஆசிகள் அதிகரித்து வருவதைப் பார்த்து விவசாயிகள் மத்தியில் பொய்களையும், புரளிகளையும் பரப்புவதன் மூலம் அரசியலில் இழந்த ஆதரவை மீட்கலாம் என்று கருதியுள்ளனர் என்று கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். 2014ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். அதில் முக்கியமானது சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையான 1 1/2 மடங்கு விலை. அதனை நிறைவேற்றுவோம்என்று கூறினீர்கள். இன்று வரை நிறைவேற்றவில்லை. ஒரு பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சாத்தியமில்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளீர்கள்.
தேர்தல் காலங்களில் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று உங்கள் கட்சியின் தலைவர்களே பேசுகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் கட்டுபடியான விலை கேட்டுப் போராடிய விவசாயிகளை மண்சாரியில் காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு விவசாயிகளை கொன்று குவித்தீர்கள். நீங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்டால் செய்யமுடியாது என்கிறீர்கள். போராடும் ஜனநாயக உரிமையை பறிக்கக்கூடிய வகையில் போராடுகின்ற விவசாயிகளை சுட்டுக் கொல்கிறீர்கள். போராட்டத்தை அரசியல் அமைப்புகள் தூண்டி விடுகிறார்கள் என்று கருத்து பிரச்சாரம் செய்துவருகிறீர்கள். இது எந்த வகையில் ஜனநாயகம்? போராடுகின்ற உரிமையை எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாங்கள் பயன்படுத்துகிறோம். இது தவறு என்றால் நாங்கள் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அவரவர் தாய்மொழியில் கடிதம் எழுதியுள்ளீர்கள். அந்த கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் விவசாயிகளையும் அவர்களது குடும்பங்களையும் எங்கள் அரசு பாதுகாத்துள்ளது என்று உங்களால் சொல்ல முடியவில்லை. வேளாண் சட்டங்களை எப்படியாவது அமல்படுத்தி விட வேண்டும் என்கிற வேட்கை தான் அந்த கடிதத்தில் உள்ளது. எனவே, எத்தனை கடிதங்கள் எழுதினாலும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களிலிருந்து பின்வாங்க வாய்ப்பில்லை. உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுங்கள். அப்போது தான் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவார்கள் என்பதை தங்களுக்கு இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, கே.பி.பெருமாள், ஒட்டப்பிடாரம் விவசாயி
நன்றி - தீக்கதிர் 08.01.2021
No comments:
Post a Comment