Friday, January 1, 2021

குற்ற உணர்வை உருவாக்கிய பதிவு

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்கள், கொல்லப்பட்ட நாடகக் கலைஞர் தோழர் சப்தர் ஹஷ்மி பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 தோழர் சப்தர் ஹஷ்மி பற்றிய “ஹல்லா போல்” என்ற ஆங்கில நூலை கடந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்கினேன். அந்த நூலை இன்னும் படிக்காமல் வைத்துள்ளேனே என்ற குற்ற உணர்வு இப்பதிவை படித்ததும் உருவானது என்பதை சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.நூலில் நுழைவதற்கு முன்பாக அவர் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட போது நிகழ்த்திய "ஹல்லா போல் (உரக்கப் பேசு") நாடகத்தை மட்டும் படித்தேன். பொங்கல் விடுமுறைக் காலத்தில் அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். பாஜக ஆட்சிக்கு அந்த நாடகம் இன்னும் பொருத்தமாக உள்ளது. 

ஜனவரி 1 அன்று சப்தர் ஹஷ்மி தாக்கப்பட்டார். அவர் மறைந்த மறு நாளே, ஜனவரி 4 அன்று அதே இடத்தில் அதே நாடகத்தை நிகழ்த்தினார்கள்.

ஹல்லா போல் தருணம் இது.

ஆம் அநீதிகளுக்கு எதிராக நாம் உரக்கப் பேச வேண்டிய தருணம் இது.  

தோழர் சப்தர் ஹஷ்மிக்கு செவ்வணக்கம்.மீள் பதிவு

என் தோழன் சப்தர் ஹாஷ்மி

வழக்கம் போலத்தான் அந்த அக்டோபர் 31ம் துவங்கியது. அது காலை 9 மணி வரைதான் வழக்கமான ஒன்றாக இருந்தது. இதழியல் படிப்பின் அன்றைய வகுப்பு அப்போதுதான் துவங்கியிருந்தது. ‘இந்திரா காந்தி’ சுடப்பட்டார்’ என்று டெலிபிரிண்டர் அலறியது.

நான் படித்த Indian Institute of Mass Communication கட்டிடத்திலிருந்து 2 கிமீக்கும் குறைவான தூரத்திலிருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திராகாந்தி கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கிருந்தோம். சக மாணவியின் சகோதரி அங்கே மருத்துவர். கொண்டுவரப்பட்ட போதே உயிரில்லை என்று எங்களிடம் சொன்னார்.

மாலைக்குள் டெல்லியின் முகமே மாறிப் போயிருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை முன்புதான் சீக்கியர்கள் மீது தாக்குதல் துவங்கியது. எங்கள் கண் முன் ஸ்கூட்டர்கள் எரிந்தன. வழியெங்கும் வன்முறைக் கும்பல்கள்.

என் அறையில் தோழர் தியாகுவும் டெல்லி வந்திருந்த அன்றைய எஸ் எப் ஐ மாநிலத் தலைவர் ராஜனும் எனக்காக கவலையுடன் காத்திருந்தனர். நான் சென்றவுடன் நாம் பாராளுமன்றத்திற்கு அருகில் இருக்கும் மத்திய எஸ் எப் ஐ அலுவலகத்திற்குச் செல்கிறோம் என்றனர். அலுவலகத்திற்கு அடுத்த அறையில் ஏழு சீக்கியர்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள் உட்பட 20 பேர் காவல்.

மூன்றாம் நாள் பதட்டம் தணியத் துவங்கியவுடன் அலுவலகத்திற்கு வெளியே இருந்த புல் வெளியில் அமர்ந்திருந்த தோழர்களில் சிலர் புரட்சிப் பாடல்கள் பாடத் துவங்கினர். அதில் எல்லோருடைய குரலுக்கும் மேலாக கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது சப்தர் ஹாஷ்மியின் குரல். (அவரை ஏறக்குறைய எல்லா மாலை நேரங்களிலும் அந்த அலுவலகத்தில்தான் சந்திப்போம்.) திடிரென்று என்னை நோக்கித் திரும்பிய சப்தர் கண்சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வரும் ‘மனிதா மனிதா’ பாடலைப் பாடச் சொன்னார். நான் பாடத் துவங்கியவுடன் ‘டடடா .. டடடா’ என்று சரியான மெட்டுடன் மொழி தெரியாமலே பாடினார். பிற தோழர்களும் இணைந்து கொண்டனர்.

இளையராஜாவின் இசை பற்றிப் பேசிய சப்தர் இந்தப் பாடலின் மார்ச்சிங் டியூனில் தன் ஜனநாட்ய மன்ச் கலைக்குழுவில் ஒரு பாடல் இயற்ற வேண்டும் என்று விரும்பினார். அந்தப் பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரச் சொன்னார். நான் சரியென்றேன்.

அடுத்த நாள் என் அறைக்குத் திரும்ப வேண்டும். பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நின்றிருந்தது. என் அறைக்குச் செல்லும் வழியில்தான் அவருடைய வீடு. சுமார் 15 கிமீ பேசிக்கொண்டே நடந்தோம்.

அவருடைய வீட்டில் மனைவி மோலோய்ஶ்ரீ எங்களுக்கு உப்புமாவும் காப்பியும் கொடுத்து உபசரித்தார். மூன்று கலவர நாட்களிலும் சரியாக சாப்பாடு கிடைக்காதால் அது பிரியாணி போலிருந்தது.

அடுத்த நாள் காலை IIMCக்கு வந்தார். அன்று ஒரு அமைதிப் பேரணியை தான் ஒருங்கிணைப்பதாகவும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

1985 ஏப்ரல் இறுதியில் இதழியல் படிப்பை முடித்து ஊர் (திரும்ப) வேண்டும். நீ டெல்லியிலே இருந்து விடு, உனக்கு PTI செய்தி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்றார். எனக்கு டெல்லி ஒத்து வராது என்று மறுத்து விட்டேன். அவருக்கு அதில் வருத்தம். மே தினப் பேரணியில் கலந்து கொண்ட பிறகாவது செல் என்றார். அதற்கும் மறுத்து விட்டேன்,

டெல்லியிலிருந்து கிளம்பும் முன் மனிதா மனிதா பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுக்க அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அவர் அங்கு இல்லை. மோலோய்ஶ்ரீயிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

அதற்குப் பிறகு சப்தரிடம் தொடர்பில்லை.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆங்கில இந்து நாளிதழில் இரவு ஷிப்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சப்தர் தாக்கப்பட்ட செய்தி வந்தது. ஹல்லா போல் (உரக்கப் பேசு) என்கிற வீதி நாடகத்தை அவர் டெல்லிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் நடத்திக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் தொழிற்சங்கம் ஏவிய குண்டர்களின் தாக்குதலுக்குள்ளான செய்தியை நான் எடிட் செய்ய வேண்டியிருந்தது.

தேதி ஜனவரி 1.

மூன்று நாட்களுக்குப் பின் அவரது மரணச் செய்தியும் என்னிடம் கொடுக்கப்பட்டது.

அதை நான் எடிட் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டேன்.
அது எப்படி முடியும் சப்தர்?


No comments:

Post a Comment