Friday, January 22, 2021

ஃபெரோஸ் காந்தி -பாஜக ஆராய வேண்டும்

 

ஃபெரோஸ் காந்தியின் கன்னிப்பேச்சு கீழே உள்ளது. அவரைப் பற்றிய மத ஆராய்ச்சிக்குப் பதிலாக அவரது நாடாளுமன்ற உரைகளை ஆராய்ந்தால் நேருவிற்கு எதிராக அவர் மருமகனே என்னவெல்லாம் பேசியுள்ளார் என்று ஒரு ஆக்கபூர்வமான அரசியலாவது செய்யலாம்.

ஆனால் அதில் பாஜகவிற்கே ஒரு பிரச்சினை வரும். நேரு எந்த அளவிற்கு ஒரு ஜனநாயகவாதியாக இருந்துள்ளார் (இ.எம்.எஸ் அரசை கவிழ்த்தது போன்ற கறைகள் இருந்த போதிலும்)  என்பதும் தெரிய வரும். மோடியோடு ஒப்பீடு வேறு வரும். 

 


*நாளொரு கேள்வி: 20.01.2021* 

 

*ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயம் குறித்து.*

 

[இந்திய நாட்டின் பொருளாதார வரலாறு கொண்டாடும் திருநாள். தனி நபர்கள் வரலாறைப் படைப்பதில்லை. ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு, இயக்கம் சார்ந்த முயற்சிகள் உண்டு. என்றாலும் தனி நபர்களின் பாத்திரமும் வரலாற்றில் முக்கியம். அப்படியொரு தனி நபர் பாத்திரத்தை நினைவு கூருகிற பகிர்வை இன்று நம்மோடு "பயனியர்" *(Pioneer)* இதழ் கட்டுரையாளர் *.சூர்ய பிரகாஷ்*]

####################

 

*யானைக்கு தேவை கால் சங்கிலி*

 

கேள்வி: ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயத்தில் *ஃபெரோஸ் காந்தி* (முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் இணையர்) ஆற்றிய பங்கு என்ன?

 

*. சூர்யபிரகாஷ்*

 

ஊழல் எதிர்ப்பு போராளியாய்த் திகழ்ந்த ஃபெரோஸ் காந்தியின் பங்கை காங்கிரஸ் கட்சி போதிய அளவில் பதிவு செய்யாமலிருப்பது துரதிருஷ்டமே. அவர் *இந்தியாவின் முதன்மையான, புலனாய்வு நாடாளுமன்றவாதியாவார்.*

 

இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் எதிர்க் கட்சிகளின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அரசாங்கத்தை தங்களின் வாதங்களால் வீழ்த்திய பதிவுகள் நிறைய இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் வெளிப்படைத் தன்மைக்காகவும், மோசடிகளுக்கு எதிராகவும் தோட்டாக்களைத் தொடுத்த உதாரணம் அரிதானது. அப்படிப்பட்டவர் ஃபெரோஸ் காந்தி. அவர் விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறை சென்றவர். பொது வாழ்வில் தூய்மைக்காக அவர் கொடுத்த குரல் மத்திய அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியின் பதவியைப் பறித்தது. அவரின் முக்கியமான பங்களிப்பு பளிச்சிட்ட இன்னொரு முக்கியமான நிகழ்வு *ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயம்.*

 

ஆரம்பகால நாடாளுமன்றப் பணியில் *கடைசி பெஞ்சுக் காரராகவே* இருந்த ஃபெரோஸ் காந்தியின் *கன்னிப் பேச்சு* டிசம்பர் 1955 ல் பலரையும் பரபரக்க வைத்தது. அவையில் ஒவ்வொருவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவரின் உரையை உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. *இன்சூரன்ஸ் (திருத்த) மசோதாவின் மீது அவர் ஆற்றிய உரையே அது.*

 

இரண்டு மணி நேர அதிசயம் அது. *தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தீங்கான செயல்பாடுகளை* அவர் அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்தார். *அவரின் வாதங்கள் இரும்பிலான அரண்களைக் கொண்டதாக* இருந்ததால் அவற்றை யாராலும் உடைக்க இயலவில்லை. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்களின் சேமிப்பை பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என அவர் தந்த அழுத்தம் அரசை அசைய வைத்தது. (இந்த உரையில்தான் அவர் *'கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் 40 வகை மோசடிகளைப் பற்றி எழுதினார். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோ கௌடில்யர் போட்ட பட்டியலையே விஞ்சி விட்டனர்'* என்று பேச பின்னர் பேசிய அன்றைய நிதியமைச்சர் *சிந்தாமணி தேஷ்முக்* கௌடில்யர் பட்டியல் இட்டது 42 வகை மோசடிகள் என்று திருத்தினார்.)

 

*அவர் உரையை முடித்த தருணம்,* தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் எதிர்காலம் இருண்டு விட்டதான உணர்வை நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நாடாளுமன்ற விவாதங்கள் நடந்தேறி இரண்டாவது மாதத்தில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயத்திற்கான அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்டது. அப்போது அரசாங்கத்தைப் பாராட்டி அவர் சொன்ன வார்த்தைகள் *"குதிரையை கட்டுக்குள் வைக்க கடிவாளம் தேவை. யானையைக் கட்டுக்குள் வைக்க சங்கிலிகள் தேவை"*(பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை வலியுறுத்துகிற எளிமையான வார்த்தைகள். நவீன தாராளமய காலத்தில் தேவைப்படுகிற சிந்தனை. *செ.வா*)

 

ஃபெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் தருண்குமார் முகோபாத்யாயா வார்த்தைகளில் *"ஃபெரோஸ் காந்தியின் கன்னிப் பேச்சு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கல்லறைப் பெட்டியின் கடைசி ஆணியாக இருந்தது".*

 

தேசியமயத்தைத் தொடர்ந்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்..சி) பிறந்தது

 

(ஜனவரி 19- வரலாற்றை அசை போடும் நாள். 2019 செப் 10 அன்றைய பயனீர் (Pioneer) இதழ் கட்டுரை நம்மை வரலாற்றுக்குள் அழைத்துச் செல்கிறது. தனி நபர்கள் பாத்திரங்கள் சிறியதாகவோ, பெரியதாகவோ இருந்திருக்கலாம். ஆனால் அவற்றின் சமகால முக்கியத்துவம் மறக்கக் கூடாததுஆனால் *வரலாற்றுக்கு பல வாசல்கள் உண்டு.* அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னோடித் தலைவர் *சந்திரசேகர போஸ்* அவர்களின் *Talking about times past"* நூலில் எவ்வாறு காங்கிரசில் உள்ள முக்கியத் தலைவர்களுக்கு நிறையத் தரவுகளைத் தந்து ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயத்திற்கான கருத்துக்களை வலுப்படுத்தினோம் என்று பதிவு செய்துள்ளார். வாசிப்பில் பல நிகழ்வுகளை இணைத்துப் புரிந்து கொள்ள முடியும்கம்யூனிஸ்டுகள் எப்படி பொதுத் துறை உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தைத் திரட்டினார்கள்; வலதுசாரிக் கருத்தியலைப் பிரதிநிதித்துவம் செய்த அன்றைய ஜனசங்கம் -இன்றைய பா.. வின் மூதாதையர்கள்- அன்றே இன்சூரன்ஸ் தேசிய மயத்தை எதிர்த்தனர் என்பதும் வரலாறு. நினைவு கூர்தல் என்பது சுவாரசியமானது மட்டுமல்ல; நிகழ் கால இருளை அகற்றும் வெளிச்சமும் கூட. *செ.வா*)

 

******************

*செவ்வானம்*

No comments:

Post a Comment