Monday, January 25, 2021

"இரவு" பற்றி

 நூல் அறிமுகம்

 


நூல்                                        இரவு

ஆசிரியர்                             எலீ வீஸல்

தமிழில்                                 ரவி.தீ.இளங்கோவன்

வெளியீடு                             எதிர் வெளியீடு,

                                                   பொள்ளாச்சி

விலை                                      ரூபாய் 230.00

 

வரலாற்றை நாம் மறப்போமானால் வரலாறு முன்னை விட இன்னும் ஆவேசமாக நிகழ்ந்தே தீரும் என்பார்கள். நாம் மறக்கக் கூடாத ஒரு வரலாறு பற்றிய ஒரு நூல். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரு சிறுவனின் அனுபவப் பகிர்வு.

 

ஹங்கேரியைச் சேர்ந்த எலீ வீஸல், பதினைந்து வயது சிறுவனாக இருக்கிற போது தங்கள் இருப்பிடங்களிலிருந்து யூதர்கள் வெளியேற்றப் படுகிற போது பெற்றோர் மட்டும் சகோதரியோடு வெளியேற்றப்படும் முதல் துயரம் நிகழ்கிறது.

 

அப்போது தொடங்கும் துயரம் அவரை துரத்திக் கொண்டே இருக்கிறது. உடமைகள் பறிக்கப்படுகின்றன. தாயும் தங்கையும் பிரிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மாடுகளை அடைப்பது போல ரயில் பெட்டிகளின் அடைத்து ஆஸ்ட்விச் வதை முகாமுக்கு அனுப்பப் படும் எலீஸின் பயணம் வேதனை ததும்பியதாக இருக்கிறது. யாராவது இறக்க நேரிகையில் சடலம் தூக்கியெறியப்பட்டு பயணம் தொடரும். கூடுதல் இடம் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடையக் கூடிய விதத்தில் மற்றவர்கள் இருந்தார்கள் என்றால் எப்படிப்பட்ட அவஸ்தை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!

 

வதை முகாம்களுக்கு செல்பவர்களுக்கு பெயர்கள் கிடையாது. அவர்கள் கையில் ஒரு எண் பச்சை குத்தப்படும். ஒவ்வொரு நாளும் வரிசையில் நிற்க வேண்டும். வேலை செய்வதற்காக தேர்வானவர்கள் நிம்மதியடைவார்ககள். ஏனென்றால் வேலை செய்ய இயலாத சிறுவர்களும் முதியவர்களும் வீண் சுமை என்று கொல்லப்படுகிறார்கள். இன்று நம் எண் அழைக்கப்படவில்லை என்று நிம்மதியாக இருந்திய முடியாது. சில நாட்களுக்குப் பின்பு கூட மரணத்திற்கான அழைப்பு வந்திடும்.

 

ஆஸ்விட்ச் முகாம் எப்போதும் பிணங்கள் எரியும் நாற்றத்தோடே இருக்கிறது.  தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே தோண்டிக் கொண்டு அருகில் நின்றால் சுட்டுக் கொல்வார்கள். அத்தனை பேர் முன்னிலையிலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு அது அவர்களுக்கான அச்சுறுத்தலாக இருக்கும்.

 

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு செல்லும் வழியில் ரொட்டித் துண்டுகளுக்காக நடக்கிற மோதல் ஜெர்மானியர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. அந்த வேடிக்கையை அனுபவிக்க மேலும் மேலும் ரொட்டித் துண்டுகளை வீசுகிறார்கள். சக மனிதனின் துயரத்தில் இன்பம் காணும் அளவிற்கு வெறியூட்டப்பட்டவர்களாக மாற்றப்பட்ட மக்கள் அவர்கள்.

 

சவுக்கடி, தடியடி ஆகியவை சர்வ சாதாரணம். ஹிட்லரின் படைகளுக்கு நெருக்கடி வருகையில் அவர்கள் யூதர்களை கொட்டும் பனியில் யூதர்களை கால் நடையாகவே பல நேரம் இழுத்துச் செல்வார்கள். உணவுக்காக மோதல் சர்வ சாதாரணம். அப்படி பயணம் போகையில் நோயுற்ற தந்தைக்காக நிதானமாக நடந்தால் தானும் இறக்க நேரிடும் என்று ஒரு மகன் தந்தையை கைவிட்டுச் செல்கிறான். இதனை விவரிக்கிற எலீ வீஸலே இப்படிப்பட்ட நிலைக்கு உள்ளாக்குகிறார்.

 

தந்தை மரணப்படுக்கையில் இருக்கையில் தன் மகனை மீண்டும் மீண்டும் அழைத்தாலும் எலீஸ் அசையவில்லை. நாஜி அதிகாரியின் குண்டாந்தடியால் தலையில் அடி வாங்க தயாராக இல்லை. மறுநாள் காலை கண் விழிக்கையில் தந்தை இருந்த படுக்கையில் வேறு நோயாளி. தந்தையின் சடலம் என்ன ஆனது என்று கூட தெரியாது.

 

ஹிட்லரின் தோல்விக்குப் பிறகு விடுவிக்கப்படுகிற வீஸல் நூலை இவ்வாறு நிறைவு செய்கிறார்.

 

“நான் கண்ணாடியைப் பார்க்கையில் அந்த கண்ணாடியின் அடியாழத்திலிருந்து ஒரு பிணம் என்னை ஆழ்ந்து பார்த்தது.  அவன் என்னை உற்று நோக்கிய போது அந்த விழிகள் என்னைப் பார்த்த பார்வை என்னை விட்டு என்றுமே அகலவில்லை.”

 

அவசியமான சில பின் குறிப்புக்கள்

 

ஒரே நாளில் படித்து முடித்தாலும் தொடர்ச்சியாக படிக்க இயலவில்லை. சில விவரிப்புக்கள் மனத்தை மிகவும் பாதிக்க வைத்து வாசிப்பை அவ்வப்போது  நிறுத்த வைத்தது.

 

வதை முகாமில் தவிக்கிறவர்கள் கடவுளிடம்

 

“நீ யாருக்கு துரோகம் இழைத்தாயோ, காட்டிக் கொடுத்தாயோ, இந்த மனிதர்களைப் பார், நீ எவரை சித்ரவதைக்குள்ளாக, வெட்டிக் கொல்லப்பட, விழ வாயுவால் மூச்சு திணறடிக்கப்பட, எரிக்கப்பட, அனுமதித்தாயோ அவர்கள் என்ன செய்கிறார்கள், உன்னை வழி படுகிறார்கள், உன் நாமத்தை துதிக்கிறார்கள்”

 

என்று புலம்புகிறார்கள்

 

அவர்கள் அனுபவித்த அத்தனை சித்தரவதைகளுக்கும் காரணமான, மிகப் பெரும் கொடூரங்களை நிகழ்த்திய ஹிட்லரின் நாஜிப்படையை இறுதியில் வீழ்த்தி முடிவு கட்டியது சோவியத் யூனியனின் செஞ்சேனை என்பதை நாம் எந்நாளும் மறந்து விடக் கூடாது.

 

இனப்படுகொலைகளுக்கு எதிரான கருத்துத் திரட்டலுக்காக எலீ வீஸல் அமைதிக்கான நோபல் பரிசை 1986 ம் ஆண்டு பெற்றார்.

 

இனத்தின் பெயரால் ஹிட்லர் யூதர்களை ஒதுக்கி வைத்து மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தியதை நினைவு கூரும் அதே வேளையில் குடியுரிமை என்பதை மதத்தின் அடிப்படையில் முடிவு செய்யும் சட்டம் இந்தியாவில் நிறைவேறியுள்ளது என்பதையும் அஸ்ஸாமில் அப்படி குடியுரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான முகாம்கள் செயல்படத் தொடங்கி விட்டது என்பதையும் நாம் மறக்கக் கூடாது. வரலாற்றை நாம் மறந்தால் நாளை அஸ்ஸாம் முகாம்களும் ஆஸ்விட்ச் வதை முகாம்களாக மாறி விடும்.

 

நூலில் இருந்த புகைப்படங்களும் வதை முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வரைந்த ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்காக. அவை அந்த கொடூரத்தைச் சொல்லும்.











No comments:

Post a Comment