Wednesday, January 13, 2021

அவரின் நினைவாக . . .

நேற்று மறைந்த தோழர் சோலை சுந்தரப் பெருமாள் நினைவாக அவர் எழுதிய "தாண்டவபுரம்" நூல் குறித்து எழுதியதை மீள் பதிவு செய்துள்ளேன்.

இந்த நூலை படித்து முடித்ததும் வேறு ஒரு தேடலும் நிகழ்ந்தது. "அறம்" பேசும் ஒரு மனிதனின் பொய் முகத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த முடிந்தது.

அந்த பதிவு மாலை




தாண்டவபுரம் - ஏனய்யா எதிர்த்தீர் ?

 தாண்டவபுரம் நாவலை தடை செய்ய வேண்டும் என்று காவிகள் ஒரு போராட்டம் நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


திருஞானசம்பந்தரை இழிவு படுத்தி விட்டார் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் என்று குதித்தார்கள்.

தாண்டவபுரத்தை முழுமையாகப் படித்த பின்புதான் அந்த எதிர்ப்பும் குற்றச்சாட்டும் அபத்தமானது என்பது புரிந்தது.

தமிழகம் எங்கும் வேரூன்றியுள்ள சமண மத ஆதிக்கத்தை முறியடிக்கவும் பிராமண பரிஷத் மூலமாக கோயில்களில் வேதாகமத்தையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தும் போக்கிற்கு எதிராகவும் சிவ மதத்தை மீண்டும் நிலை நாட்டச்செய்து தமிழ் மொழி வழிபாட்டை வளர்க்க சம்பந்தர் சென்ற யாத்திரையாகத்தான் நாவலின் கதைக் களமே அமைந்துள்ளது.

இந்த நாவலில் ஆசிரியர் திருஞான சம்பந்தரை அவருடைய இயற்பெயரான ஆளுடையப் பிள்ளை என்றே அழைக்கிறார். அதனால் அவரை வேளாளர் இனத்தவர் என்று ஜாதிக்குறைப்பு செய்து விட்டார் என்பது காவிகளின் குற்றச்சாட்டு. நாவலைப் படித்திருந்தால் அந்த அனுமானம் தவறு என்பது புரியும்.

பார்வதி பால் கொடுத்து அவருக்கு ஞானம் வந்தது, அவர் விபூதி கொடுத்தவுடன் பாண்டிய மன்னனின் வெக்கை நோய் தணிந்து போனது என்ற புராண உடான்ஸ்கள் நாவலில் இல்லை. ஆனால் பாண்டிய மன்னனின் வெக்கை நோயை தணிய வைக்க அவர் கொடுத்த மூலிகைகள் அடங்கிய விபூதியும் சூரணங்களும் காரணம் என்று நம்புவதற்கு ஏற்ப லாஜிக்காக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நூலில் சம்பந்தர் மீது எந்த தெய்வீக அம்சத்தையும் திணிக்கவில்லை. சிவ மதத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் அவர் கொண்டுள்ள தீவிரமான பக்தியைத்தான் முன்னிறுத்துகிறார். நாவுக்கரசரையும் அப்படியேதான். இயல்பான மனித உணர்வுகள் கொண்ட வாலிபராகவே சம்பந்தரைக் காண்பிப்பதுதான் காவிகளுக்குப் பிரச்சினை போலும்.

பெரிய புராணத்தின் அடிப்படைப்படி பார்த்தாலுமே கூட சம்பந்தர் ஒன்றும் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல. திருமணம் செய்து கொண்டவர்தான்.

இன்னும் சொல்லப்போனால் சுந்தரரின் காதலுக்காக சிவனே தூது போனார் என்று சேக்கிழார் எழுதுகிறார். சிவனை சேக்கிழார் அவமதித்து விட்டார் என்று ஏன் இவர்கள் கலாட்டா செய்யவில்லை.

தாண்டவபுரம் நூலுக்காக யாராவது கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டுமென்றால் அதை சமணர்கள்தான் செய்ய வேண்டும். அவர்களைத்தான் நூலாசிரியர் போட்டுத் தாக்கி உள்ளார்.

தோழர் அருணன் அவர்களின் “நிழல் தரா மரம்” நாவலில் சமணர்களின் கழுவேற்றலுக்கு சம்பந்தர்தான் காரணம் என்று சித்தரித்திருப்பார்.  இங்கே அந்த பழியை நேரடியாக பாண்டிய மன்னன் தலை மீதே போட்டு விட்டார்.

இந்த நூலின் மீது விமர்சனங்களே கிடையாதா?

நிச்சயம் உண்டு.

எழுநூறு பக்கங்களுக்கு இழுத்துச் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே மாதிரியான சம்பவங்களே மீண்டும் மீண்டும் வருவது அலுப்பை உருவாக்கியது. அதிலும் காஞ்சிபுரம் ராஜாங்க தூதுவர் மித்திரன் வந்தாலே “வந்துட்டாரய்யா, வந்துட்டாரு” என்று சலிப்பும் சேர்ந்தே வருகிறது.  

தோழர் சோலை சுந்தரப் பெருமாளின் முந்தைய நாவல்களான வெண்மணி கொடுமையைப் பேசிய “செந்நெல்”, நந்தனாருக்கு இழைக்கப் பட்ட அநீதியை விளக்கிய “மரக்கால்” ஆகிய நாவல்களை படிக்கும் போது இருந்த வேகம் இதில் குறைவுதான்.

சமஸ்கிருதத்தையும் வேதாகமத்தையும் திணித்து தழிழை முடக்கும் சதியை முறியடிப்பவராக  சம்பந்தரை சித்தரித்ததை ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை மொழி ஆகியவற்றை மீண்டும் திணிப்பதையே செயல் திட்டமாகக் கொண்டுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியாது.

No comments:

Post a Comment