Monday, January 18, 2021

பெண்கள் விவசாயிகள் கிடையாதா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்திலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும் என்று சொன்ன கருத்துக்கு அருமையான பதிலடி.

வாழ்த்துக்கள் தோழர் இந்திரா





 *நாளொரு கேள்வி: 17.01.2021*


இன்று நம்மோடு கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் *இந்திரா*
####################

*பெண்கள் விவசாயிகள் இல்லையா?*

கேள்வி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 
"முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறார்கள்?" என வருத்தம் தெரிவித்து "அவர்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்களே? இதை *பெண்களின் மீது அனுதாபம் கலந்த  அக்கறை* எனக் கொள்ளலாமா?

*இந்திரா:* 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 55 நாட்களாக விவசாயிகள்  கடும் குளிரிலும் மழையிலும் போராடி வருகின்றனர். கடந்த பதினோன்றாம் தேதியன்று விவசாயிகள் போராடும் இடத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பான மனு மீதான விசாரணையில்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் 
*"முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறார்கள்"* என வருத்தம் தெரிவித்து *"அவர்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேற வேண்டும்"* என்ற வகையிலும் கூறியிருந்தார்கள். இது வருந்தத்தக்கது. 

ஏனெனில்

*1.* விவசாயிகள் என்ற சொல்லில் பெண்கள் அடங்கவில்லையா?

*2.* நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தில் 75 சதத்திற்கும் மேல் பெண்கள் பணி செய்கிறார்களா இல்லையா?  நாட்டின் மொத்த உற்பத்தியில் வேளாண் செய்யும் பெண்களின் பங்கு அதிகம்தானே?

*3.* விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பெண்களை ஏன் விவசாயிகள் என்ற வரையறுப்பதில்லை? அவ்வாறு அழைப்பதுமில்லை?

*4.* கடினமான விவசாய வேலைகளில் நாற்று நடுதல் களையெடுத்தல் ஏன் தற்போது ட்ராக்டர் ஓட்டுதல் போன்ற பல வேலைகளில் பெண்கள் ஈடுபடுகிறார்களே அதெல்லாம் விவசாயம் சார்ந்த தொழில் இல்லையா?

*5.* தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் போக மற்றவர்கள் விவசாய வேலைகளில் ஈடுபட்டும் போராட்ட காரர்களுக்கு பொருட்கள் அனுப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்களே! 

*6.* போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்ன டெல்லியை சுற்றி பார்க்கவா வந்துள்ளார்கள்?

*7.* ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தியும்  பேசியும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கூட்டத்தை பெண்கள் திரட்டுகிறார்களே? அவர்களுக்கு வேளாண்மை பற்றி அறியாமலா எதிர்க்கிறார்கள்.

*8.* வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப் பட்டால் முதலில் பாதிப்பது பெண்கள் தானே அவர்களுடைய வேலைவாய்ப்பு தானே?

*9.* 75 சதவீதத்திற்கும் மேலாக விவசாயத்தில் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும் வெறும் 12 சதவிகித பெண்கள் மட்டுமே விவசாயிகளாக அதாவது நில உடைமையாளர்களாக உள்ளார்கள். அதற்கு காரணம் இந்த ஆணாதிக்க சமுதாயம்.  

ஆகவே பெண்கள் எதிர்பார்ப்பது அனுதாபம் அல்ல... அப்படிப்பட்ட அக்கறையும் அல்ல... பெண்களுக்கு விவசாயிகள் என்ற அங்கீகாரம்தான். 

வருகின்ற 18 ம் தேதி  பெண் விவசாயிகள் தினம். அந்த நாளில்
"பெண் விவசாயிகளுக்கும்  போராட்டம் என்பது அடிப்படை உரிமை" என்பதை உரக்கச் சொல்வோம்.

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment