விருத்தாச்சலத்தில் நடைபெற்ற எங்களது கோட்டச்சங்க மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம் “ராஜா மகாராஜா”. நல்ல வரவேற்பு கிடைத்ததால் நேற்று வேலூரில் நடைபெற்ற இன்சூரன்ஸ்துறை பாதுகாப்பு வேலூர் மாவட்ட கருத்தரங்கிலும் நடத்தப்பட்டது.
அந்த நாடகம் இதோ வலைப்பக்க வாசகர்களுக்காக
ராஜா, மகாராஜா
பின்னணியில் ஒலிக்கும் குரல்:
ராஜா,மகாராஜா – இதோ உங்களுக்காக வேலூர் மையத்தில் பணியாற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வழங்குகிறார்கள். இது சரித்திர நாடகமா இல்லை சமூக நாடகமா? மனோரஞ்சிதப் பூவை நீங்கள் என்ன நினைத்து முகர்ந்து பார்க்கிறீர்களோ, அதைப் போன்ற வாசம் தருமாம். அது போலத்தான் இந்த நாடகம் சரித்திர நாடகமா இல்லை சம கால நாடகமா என்பதை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் காலங்கள் மாறினாலும் மக்களின் துன்பங்கள் மாறவில்லை. நேர்மையற்றவர்களின் செயல்களை நேர்மையாகச் சொல்லும் “ராஜா மகாராஜா” இதோ உங்களுக்காக.
காட்சி 1 சாலை
எங்கே செல்லும் இந்த பாதை?
என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க தலையில் சுமையை சுமந்து கொண்டு ஒருவர் நடந்து வருகிறார்.
எதிரில் வரும் இன்னொருவர்.
பயணி 2: “என்ன மச்சான்” ? மூட்டையை தலையில சுமந்து போய்க்கிட்டு இருக்க? உன் டி.வி.எஸ் பிப்டிக்கு என்னாச்சு?
பயணி 1: இந்த படுபாவி ராஜா, வாரத்துல ஒரு நாள் பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே இருந்தா என்ன செய்ய முடியும்? அதான் வண்டியை வித்துட்டேன்.
பயணி 2: சரி இப்ப எங்க போறே?
பயணி 1 : குடியாத்தம் வரைக்கும்
பயணி 2: நடந்தேவா?
பயணி 1: ஆமாம் பஸ்ஸில போக முடியாமா ட்ரெயினில சீப்பா இருக்குனு அதில போனா, அதயும் நம்ம ராஜா விலையேத்திட்டான். எல்லாம் நம்ம தலைவிதி. இப்படி ஒரு ராஜா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு. நமக்கெல்லாம் ஒரு நல்ல காலம் எப்போதான் வருமோ?
பயணி 2: இவன் போயி இன்னொரு ராஜா வந்தா வேணா நடக்கலாம். சரி பாத்து போ, நடந்து போறதுக்குக் கூட டோல்கேட்டுல காசு கேட்டுற போறான். ரோடு குண்டும் குழியுமா இருந்தா கூட காசை மட்டும் மாசம் ஒரு தடவை ஏத்திடுவான்.
காட்சி 2
இடம் அரசவை
ராஜாவும் மூன்று மந்திரிகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது.
வாயிற்காப்பாளன் : அரசே ; உங்களைப் பார்க்க பேரரசரின் தூதர் வந்துள்ளார்.
ராஜா: அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அவர் வந்தவுடன் எல்லோரும் சல்யூட் அடித்து வணக்கம் சொல்லுங்கள்.
தூதர் வருகிறார்.
அனைவரும் எழுந்து மிலிட்டரி சல்யூட் அடித்து
வணக்கம் ஐயா
தூதர் காலியாக இருந்த நாற்காலியில் உட்காரப் போகிறார். அரசர் தனது சிம்மாசனத்தில் அவரை உட்கார வைத்து தரையில் அமர்கிறார். மந்திரிகளும் அப்படியே தரையில் அமர்கிறார்கள்.
மந்திரி 3 (மனதிற்குள்) தலையெழுத்துடா சாமி, இந்தாளால நாமெல்லாம் வேற தரையில் உட்கார வேண்டியிருக்கு
தூதர் ; இந்த மரியாதைக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.
ராஜா: எஜமான் ஏதோ கோபமா இருக்கீங்க போல, ராஜான்னு நான் பெயருக்கு இருந்தாலும் நீங்க சொல்றதைத்தானே செய்யறேன். அதுக்கே என்னை அவனவன் கன்னாபின்னான்னு திட்டறாங்க.
தூதர் : உங்க நாட்டில யாரும் அரிசி தயார் செய்யக் கூடாது. நான் அனுப்பற ப்ரெட்டத்தான் சாப்பிடனும்னு சொன்னோம்.
மந்திரி 1 : எங்க ஊர்ல இப்பல்லாம் யாரும் காய்ச்சலுக்குக்கூட பிரெட் சாப்பிடறதில்லை.
மந்திரி 2 : நீ வேற, சும்மா இருய்யா, அப்படியெல்லாம் கிடையாது. எங்க பசங்களையெல்லாம் இப்போ நூடுல்ஸ், பீஸா இதை மட்டுமே சாப்பிட பழக்கிட்டு இருக்கோம்.
தூதர் : உங்க நாட்டுல இருக்கிற எல்லா பாங்கு, இன்சூரன்ஸ் எல்லாத்தையும் இடிக்கச் சொன்னோம் இல்லை.
மந்திரி 3 : (மனதிற்குள்) அதெல்லாம் அவங்க நாட்டுல இடிபட்டு இருக்கு. அதனால இங்கயும் இடிக்கச் சொல்றான்.
பின்பு சத்தமாக: நல்ல மனசுக்காரன் சார் நீங்க.
மந்திரி 2 : ஏரியில பில்டிங் கட்டி ஏற்கனவே இடிஞ்சு விழுந்து கிட்டு இருக்கு. இது போதாதா?
தூதர் : உங்க ஊர்ல எதுக்குய்யா பொட்டிக்கடை? உங்களுக்கெல்லாம் பீடி, சிகரெட் விற்கத் தெரியுமா? இல்லை கூல் ட்ரிங்க்ஸ் செய்யத் தெரியுமா? அப்புறம் எதுக்கய்யா விற்கறீங்க. இனிமே இங்கே எல்லாம் நாங்கதான்.
கோபமாக அவர் வெளியேறுகிறார்.
மந்திரி 1 : ராஜா அவர் சொன்னதை செய்யப் போறீங்களா?
மந்திரி 2 : வேற வழி?
மந்திரி 3 : வேணாம் ராஜா, இப்பவே உங்களை மோசமா திட்டிக்கிட்டு இருக்காங்க, இதெல்லாம் செஞ்சா அடிக்கவே வந்துடுவாங்க.
ராஜா: நான் வெளிநாட்டுல படிச்சவன். அவங்களாலதான் ராஜாவா இருக்கேன். எனக்கு மட்டும் நல்லவன்னு பெயர் வாங்க ஆசை இருக்காதா? என்னை எல்லாரும் திட்டறாங்கனு தெரியும். ஆனா மக்களுக்கு நல்லது செய்யனும்னு தோணவே மாட்டேங்குதே.
பேசும் போதே தொண்டை அடிக்கிறது.
மந்திரி 3: இதுக்குதான் எப்பவும் போல பேசாம இருக்கனும்.. எப்பவாவது பேசினா இப்படித்தான் ஆகும்.
மந்திரி 2 : யாரங்கே மருத்துவரைக் கூப்பிடுங்கள்
ராஜா : வேண்டாம். என்னோட முடிவு நெருங்குது. இளவரசனை வரச் சொல்லுங்க.
இளவரசன் வருகிறார்.
மந்திரி 3 : (மனதிற்குள்) வரான் பாரு, தாடி வச்ச கேடி, இவனும் இவன் பேச்சும், இவன் ட்ரெஸ்ஸும், இவனெல்லாம் இளவரசன்.
இளவரசன்: நைனா என்னாச்சு உனக்கு?
ராஜா: மகனே நான் மேலே போகிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. அதை நிறைவேற்றுவாயா?
இளவரசன் : நைநை னு பேசாத, விஷயத்தை சொல்லு நைனா.
ராஜா : இந்த நாட்டு மக்களெல்லாம் என்னை ரொம்ப கெட்டவன்னு பேசறாங்க. அவங்க எல்லாம் என்னை நல்லவன்னு சொல்லனும்.
இளவரசன் : அவ்வளவுதானே, விடு நான் பாத்துக்கிறேன்.
ராஜா தலை தொங்குகிறது.
காட்சி 3
இடம் :சாலை
“இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
பயணி 2 : என்ன மச்சான், ரொம்ப சந்தோஷமா இருக்க?
பயணி 1 : ஒழிஞ்சான்யா ராஜா. இன்னிக்கு புது ராஜா பதவியேற்கிறாரு. இனிமே எல்லாம் மாறிடும். எல்லாம் மாறிடும்.
பயணி 2 ; அப்படிங்கறே?
பயணி 1 : ஆமாம் மாப்ள, இளவரசன் ரொம்ப நல்லவராம், வல்லவராம், பலசாலியாம், நம்ம ஊரு ஆளுங்க போன மாசம் பாலாறு வெள்ளத்தில மாட்டிக்கிட்டபோது ஒத்தக்கையாலயே நூறு பேரை தூக்கிக்கிட்டு வந்தவராம்.
பயணி 2 : ஏம்பா உனக்கு என்ன மூளை வயித்துலயா இருக்கு? பாலாறுல தண்ணி வந்தே பத்து வருஷமாச்சு, இதுல போன மாசம் வெள்ளம் வந்ததாம். அதில இவரு நூறு பேரை காப்பாத்தினாராம், அதுவும் ஒத்தக்கையால? காஷ்மீருல போய் காப்பாத்தச் சொல்லேன்.
பயணி 1 : ஆமாம் இல்லை? நான் கூட ஏமாந்துட்டேனே.
பயணி 2 : நீ மட்டுமா ஏமாந்த ?
காட்சி 4
இடம் அரசவை
மந்திரி 1 : நமது அரசர் மறைவிற்குப் பின் இளவரசர் அரசராக முடி சூடப் போகிறார். இந்த கிரிடத்தை அவருக்கு சூட்டப் போகிறேன்.
இளவரசர் ; ஸ்டாப், ஸ்டாப். என் தலையில நீ கிரீடத்தை வைச்சு என்னை விட பெரியாளுனு காண்பிச்சுக்கப் பாக்கிறயா? எந்த பெரிசுக்கும் என் கிட்ட வேலை இல்லை. வயசான ஆளுங்கள்ளெல்லாம் வீட்டுக்குப் போய்டுங்க. யாராவது மந்திரி பதவி, முந்திரி பதவி னு கேட்டு வந்தீங்க, தொலைச்சிடுவேன்.
இளவரசரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார்.
எங்கப்பாதான் ராஜா. ஆனா நான் இனிமே மகாராஜா. எல்லோரும் அப்படித்தான் கூப்பிடனும். நான் மகாராஜாவாக வேண்டும் என்று ஜலகண்டேஸ்வர் என் கனவில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கிட்டாரு. அதனால் நான் மகாராஜா.
மந்திரி 2 : மனதிற்குள் ( போன ராஜா பேசாம சாகடிச்சான், இவன் பேசியே சாகடிக்கிறான்) வணக்கம் மகாராஜா
மகாராஜா ; என்னது வணக்கமா? ஆப் கி சர்க்கார் ஹிந்துஸ்தான் சர்க்கார். நமஸ்தே மகாராஜா னுதான் சொல்லனும்.
மந்திரி 3 : உங்கள் வரவு நல்வரவாகட்டும் மன்னர்மன்னா?
மகாராஜா: ஏன்யா உங்களெக்கெல்லாம் அறிவு கிடையாதா? இப்பதான சொன்னேன். ஸ்வாகதம்னு சொல்லுய்யா. புதுசா மகாராஜாவிற்கு கிரீட உத்ஸவ் நடந்திருக்கு, யாரையாவது பாடச் சொல்லுங்க.
மந்திரிகள் இருவருமே எழுந்து கொண்டு பாடுகிறார்கள்.
“ராஜா, ராஜாதிராஜன் இந்த ராஜா, கூஜா, தூக்காதே, வேறு எங்கும் கூஜா, நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா, கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் நீ ராஜா”
மகாராஜா: நிறுத்து நிறுத்து, கோட்டையில்லை, கொடியில்லையா? என்னய்யா எங்கப்பா எல்லாத்தையும் தொலைச்சிட்டுரா இல்லை வித்துட்டாரா?
சரி எங்கப்பா அவரை நல்லவன்னு சொல்லனும்னு சொன்னாரா, அதுக்கு ஒரு ஐடியா குடுங்க.
மந்திரி 2 : மகாராஜா, மக்களுக்கு விலையில்லா காற்று, விலையில்லா சுடுகாடு இதையெல்லாம் வழங்கி இத்திட்டங்களுக்கு அவர் பெயரை வைத்து விடலாம்.
மகாராஜா : இங்க பாரு இந்த ஆட்சியில எது நடந்தாலும் அது என் பெயரில்தான் இருக்கனும். அப்பா திட்டமில்லாம் கிடையவே கிடையாது.
வெளிநாட்டு தூதர் வருகிறார்.
தூதர் : மகாராஜா, உங்கள் தந்தை இறந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
மகாராஜா : நானே வருத்தப்படல, உனக்கென்ன வருத்தம்? நீ விஷயத்துக்கு வா
தூதர் : உங்கள் அப்பாவிடம் நான் சில கோரிக்கைகளை
மகாராஜா : அந்த பெட்டிக்கடை, பாங்க், இன்சூரன்ஸ் இதெல்லாம்தான? இங்க பாரு, என் வழி தனி வழி. உனக்கு என்ன வேணும்மோ அதை நான் செய்வேன். அதையெல்லாம் நீ கேட்டு நான் செய்யறதா இருக்காது. நானே செய்வேன்.
தூதர் : இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
தூதர் : நம்ம வேலை ஈஸியா முடிஞ்சுது. இவன் அப்பனை விட பெரிய லூசா இருக்கானே!
மந்திரிங்களா, உடனே எல்லா பெட்டிக்கடைகளையும் மூடிடுங்க, எல்லா பேங்கு, இன்சூரன்ஸ் கம்பெனிங்களயும் இடிச்சுடுங்க, இந்த நாட்டில மக்கள் உயிர் வாழறதே என்னோட கருணையாலதான். அதனால உயிர் வரி கட்டனும்னு ஒரு தண்டோரா போட்டுடுங்க. பாலாறுல எப்பயாவது தண்ணி வந்தா அதுல குளிக்க வரி கட்டனும். எருமை மாட்டை குளிப்பாட்ட எக்ஸ்ட்ரா வரி. நான் எவ்வளவு நல்லவன்னு போய் எல்லா ஸ்கூல் பிள்ளைங்க கிட்டயும் போய் சொல்லுங்க.
மந்திரி 2 : அடப்பாவி பதவியேற்ற முதல் நாளிலேயே இப்படி என்றால், போகப் போக? இவனை விட இவன் அப்பா நிஜமாவே நல்லவன்தான்.
பின்னணியில் குரல் ஒலிக்கிறது.
முதல் நாளா இல்லை முடிந்து போன நூறு நாட்களா என்பதல்ல நம் பிரச்சினை. முகங்கள் மாறலாம். ஆனால் அந்த முகங்களுக்குப் பின்னே இருக்கிற மூளைகள் மோசமானதாக உள்ளவரை, அவை முதலாளிகளை மட்டுமே நேசிக்கிறதாக உள்ளவரை மக்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
மக்களை உண்மையாகவே நேசிப்பவர்கள் யார் என்பதை மக்களும் இனியாவது புரிந்து கொண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மகாராஜாக்களின் கொட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்ன செய்யப் போகிறோம்? வெற்று முழக்கங்களுக்கு மயங்கிய பேதைகளாக இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோம்.? சிந்தியுங்கள், உங்களுக்காகவும், இந்த தேசத்திற்காகவும் கூட. .
பயணி 1 : தோழர் சி.ஸ்ரீதர்
பயணி 2 : தோழர் வி.திருமாவளவன்
ராஜா :தோழர் ஆர்.குமரேசன்
மகாராஜா :தோழர் சி.சோமசுந்தரம்
வாயிற்காப்போன் : தோழர் சி.கணேசன்
மந்திரி 1 : தோழர் சி.சேகரன்
மந்திரி 2 : தோழர் ஜி.ரவி
மத்திரி 3 : தோழர் பி.எஸ்.பாலாஜி
தூதர் : தோழர் கே.அதாவூர் ரஹ்மான்
No comments:
Post a Comment