Sunday, January 31, 2021

கேக்குன்னா திங்கத்தான்யா செய்வான்!

 



அமேசானில் விற்கப்படும் மாட்டுச் சாண வறட்டி விளம்பரத்தில் ஒரு புத்திசாலி 

 “அதன் சுவை சகிக்க முடியவில்லை. இனியாவது ஒழுங்காக தயாரியுங்கள்”

 என்று எழுதியிருந்தார்.

 வாட்ஸப்பில் வந்த தகவல் உண்மையா என்று அறிய அமேசான் தளத்திற்குச் சென்று பார்த்தேன்.

 ஆம்

 உண்மைதான்.

 அந்த கமெண்டும் உண்மை.

 


இது தின்பண்டம் அல்ல, பூஜைக்கானது என்று அமேசான் ஒரு டிஸ்க்ளெய்மர் வெளியிட்டுள்ளதும் உண்மைதான்.



 

ஆனால் பிரச்சினைக்குக் காரணம் அதை சாப்பிட்டவர் அல்ல. மாட்டுச்சாண வறட்டிக்கு வைத்திருந்த பெயர்தான்.

 

ஆம்

 

Holy Cow Dung Cake

 என்று பெயர் வைத்ததால் பாவம் தின்பண்டம் என்று நினைத்து விட்டார் போல!

 கேக்குன்னு பெயர் வச்சா திங்கத்தான்யா செய்வான்!

மாட்டுச்சாண வறட்டி குறித்த ஒரு அறிவியல் ஆய்வு பற்றி அடுத்த பதிவு 

 

அராஜகமின்றி வேறில்லை.

 குடியரசு தினத்தில் உத்திர பிரதேச மாநிலத்தின் சார்பாக பவனி வந்த அலங்கார ஊர்தி இதுதான்.

 

ஒரு கிரிமினல் நடவடிக்கை மூலமாக (மசூதியை இடித்தது  கிரிமினல் செயல் என்றே உச்ச நீதி மன்றம் சொன்னது) மூலமாக கிடைத்த இடத்தில் ஒரு தனியார் மத அமைப்பு கட்டப்ப்போகிற ஒரு கட்டுமானத்தின் மாதிரியை அலங்கார ஊர்தியாக “மதச்சார்பின்மை” என்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனம் அமலாவதை கொண்டாடும் விழாவில் பவனி வர வைப்பது என்பது அராஜகமன்றி வேறில்லை.

இதனை கண்டு கொள்ளாதவர்கள், கண்டிக்காதவர்கள் மற்றவர்கள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லது. 

Saturday, January 30, 2021

சின்னதும் பெரியதுமாய் இன்ப அதிர்ச்சி

 இந்த வாரம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இரண்டு தோழர்கள் "முற்றுகை" குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.



மதுரை வாலிபர் சங்கத் தோழர் யமுனா சரவணகுமார் முக நூலில் சுருக்கமாக பகிர்ந்த கருத்துக்கள் இங்கே


சரோஜ்தாவே காளிசிலையை செய்வாரென நினைத்தேன்! உங்கள் நடை 100km வேகம் . அனைவரின் முகமும் கண்முன்னே வந்தது.
மே 3 டல்ஹௌசி சதுக்கத்தில் நானும் ஆவலாய் கைகளைகட்டிக்கொண்டு எட்டி பார்த்துக்கொண்டிருந்தேன் தோழர்.ஜோதிபாசுகூட்டத்திற்குள் நுழையும் போது கூட்ட நெரிசலில் இடிபட்டேன் நன்றி தோழா.
(பி.கு-இவ்வளவு தாமதமாகவாவது வாசிக்கவைத்த கொரானா இரண்டாவதலைக்கு நன்றி)

பதிவுலகம் மூலம் நண்பரான ஆசிரியர் தோழர் கரந்தை ஜெயகுமார், தன் வலைப்பக்கத்தில் விரிவாகவே எழுதியுள்ளார்.


இரண்டு தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி

கோட்ஸேக்களை கண்டு கொள்வோம்

 


அன்றொரு காலத்தில்

அண்ணல் மீது
தோட்டாக்களை ஏவியவன்
இறந்து போய்விடவில்லை.

 தூக்கில் தொங்கியவன்
இன்னும் உயிரோடுதான் உலாவுகிறான்,
முன்னை விட மூர்க்கமாக.
 
இப்போது துப்பாக்கி மட்டும்
அவன் ஆயுதமில்லை.
 
நாகத்தை விட விஷம்
அதிகம் கக்கும்
மத வெறிப் பேச்சில்
இருக்கிறான் கோட்சே.
 
உண்மைகளை திரிக்கின்ற
விலை போன ஊடகங்கள்
வடிவில் உலவுகிறான் கோட்சே.
 
உரிமையைக் கேட்கும் உழைப்பாளியை
தாக்கும் சட்டத்தில் சிரிக்கிறான் கோட்சே.
 
பெரும் பணம் படைத்தவருக்கு
தரகு வேலை செய்யும் சேவகனாய்
இளிக்கிறான் கோட்சே.
 
போலி தேச பக்தி முலாம் பேசி
மாற்றுக்  கருத்து கொண்டோரை
தேச விரோதி என்றழைக்கிறான் கோட்சே.
 
ஹிட்லரின் வாரிசுகளாய்
தொடரும் ஒவ்வொரு சங்கியாக
இப்போதும் தொடர்கிறான் கோட்சே.
 
அன்று கொன்றது ஒரு மகாத்மாவை.
எத்தனையோ ஆத்மாக்களை
நித்தம் நித்தம் கொல்கிறார்கள்
இன்றைய கோட்சேக்கள்.

 


Friday, January 29, 2021

புதிய சபதம் என்னமா சின்னம்மா?

 


A 2 சிறையிலிருந்து அதிகாரபூர்வமாக விடுதலையாகி விட்டார். முன்னர் அவர் என்றால் நினைவுக்கு வருவது அவரும் A 1 ம் நகைக்கடையாக காட்சி தரும் புகைப்படம்.

இப்போது நினைவுக்கு வருவது தவழ்ந்து சென்று அவர் காலடியில் வீழ்ந்த எடுபிடியின் காணொளியும், A 1 சமாதியில் அவர் செய்த ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் சபதங்களுமே.

அன்று அவர் என்னென்ன சபதங்கள் செய்தாரோ, நாம் அறிவோம்.

இப்போதோ நிலைமை மாறி விட்டது. 

ஒருவேளை பெங்களூர் மருத்துவமனையில் இட்லி கொடுக்கப்படாமல் அவர் நல்லபடியாக வெளியே வந்தால் இப்போது A1 சமாதியில் அவர் என்ன சபதம் மேற்கொள்வார்?

உங்களைப் போலவே நானும் அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Thursday, January 28, 2021

நீங்கள்தான் குற்றவாளிகள்

 

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு. பில்லா ரங்கா கூட்டாளிகளின் கிரிமினல் புத்தியை விளக்குகிறது.



நீங்கள்தான் குற்றவாளிகள், அவர்கள் அல்ல – ஒரு நேரடி சாட்சியின் குமுறல்

(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது.
தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்)

இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான் நம்புகிறேன்
நான் ஒரு பெருமைமிகு இந்தியன்
வன்முறை என்கிற சிந்தனையையே வெறுக்கிறேன்
நான் காந்தியின் விசிறி
நான் டெல்லியை நேசிக்கிறேன்,
நான் தேசியத் திருநாட்களை நேசிக்கிறேன்
இவற்றையெல்லாம் நான் யாரிடமும் விளக்காமல் இருக்கவே விரும்புகிறேன்.

ஆனால் ஒரு அமைதியான போராட்டம் குரோதமான ஒன்றாக மாறிப் போனதால் நான் யாரென்று நினைப்பதற்கான காரணங்கள் அனைத்துமே இன்று சந்தேகத்திற்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களாக நம் எல்லைகளில் தகித்துக் கொண்டிருந்த வலியையும் விரக்தியையும் நாம் பார்க்க மறுத்தோம். இன்று அது கொதித்தெழும் போது ஏதோ ஒன்று எங்கிருந்தோ நம்மைத் தாக்கியது போல் வாய் பிளந்து நிற்கிறோம்.

நீங்கள் எதை எதிர்பார்த்தீர்கள்?

20000 பேரைக் கொண்ட ராணுவப் பிரிவும், புகழ் பெற்ற காவல் துறையும், கலவர எதிர்ப்புக் குழுக்களும், துணை ராணுவப் படையும் சில நூறு ஜோக்கர்கள் செங்கோட்டைக்குள் நுழைவதைத் தடுத்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

தன்னுடைய பிரதேசத்திற்குள் விவசாயிகள் ஊடுருவிய போது உறுதியான மனிதர் என்றறியப் பட்ட உள்துறை அமைச்சர் தியானத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறீர்களா?

விவசாயிகளின் போராட்டத்தைச் சிதைப்பதற்காகப் போடப்பட்ட மிக அபாயகரமான சதிதான் இது என்று உங்களுக்குத் தெரியவில்லையா?

40 அமைப்புகளைக் கொண்ட சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் இடம் பெறாத ஒரு பிரிவு விவசாயிகள் ஏற்கெனவே டிராக்டர் பேரணிக்காக ஒப்புக் கொள்ளப் பட்ட வழியில் செல்ல மாட்டோம் என்று திடீரென சிங்கு எல்லையில் நேற்று இரவு அறிவித்த போது நான் அங்கிருந்தேன். அவர்கள் தனியான பேரணியை நடத்துவோம் என்றனர்.

பிஜேபியின் உளவாளி என்று நன்கு அறியப்பட்ட தீப் சித்து திடீரென்று மேடையில் தோன்றி, விவசாயிகளின் போராட்டத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் பிரிவினை வாதத்தைத் தூண்டும் வகையில் பேசினார்.

நூற்றுக்கணக்கில் இருந்த நாங்கள் இதை நேரடியாகப் பார்த்தோம். இது எத்தகைய அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்கிற கவலையில் நாங்கள் இரவு முழுவதும் கண்ணயர வில்லை. எனக்கு சரியாக சுவாசிக்கக் கூட முடியவில்லை.

இன்று நண்பகலில் பேரணி துவங்க வேண்டுமென்பதுதான் திட்டம். ஆனால் காலையிலேயே என்னுடன் பேரணிக்கு வர வேண்டியவர் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் காலையிலேயே ‘நடவடிக்கை தொடங்கும்’ என்று அவருக்குச் சொன்னார் என்பதுதான் அந்தச் செய்தி.

அவருக்கு எப்படி இது தெரியும் என்று இப்போது நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொன்னது போலவே சம்யுக்த கிசான் மோர்ச்சாவைச் சேராத ஒரு பிரிவு விவசாயிகள் காலை 8 மணிக்கே எல்லையில் தோன்றினர். டெல்லி போக்கு வரத்துக் கழக பஸ்களும் பிற வாகனங்களும் ‘பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதற்கும்’, அதைக் கேமராவில் படம் பிடிப்பதற்கும் வாகாக அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

இதைத்தான் அனைத்து விலை போன ஊடகங்களும் இடையறாது காட்டிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் பிஜேபியின் ஒற்றன் தீப் சித்து சினிமாத்தனமாக செங்கோட்டைக்குள் செல்ல உடனடியாக அனுமதிக்கப் படுகிறான். அதுவும் குடியரசு தினத்தன்று!

நாம் என்ன முட்டாள்களா அல்லது அப்பாவிகளா? இது என்ன நெட்பிளிக்ஸ் நாடகமா? அரசின் உளவுத் துறை போன்ற ஏஜன்சிகளின் ஈடுபாடில்லாமல் இது நடக்குமென்று நினைக்கிறீர்களா?

அதற்குப் பின் நிஷான் சாஹிம் என்கிற மதக் கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டு ஏதோ விவசாயிகள் அனைவரும் காலிஸ்தானிகள் என்று நிறுவும் முயற்சி நடந்தது. இந்தச் சொல்லாடலை முன்னிறுத்துவதற்குத்தான் அரசு தொடக்கத்திலிருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

கம் ஆன், உங்களுக்கு ஊட்டப் படும் இந்தக் கருமத்திற்கே நீங்கள் உண்மையில் வீழ்ந்து விட்டீர்களா நண்பர்களே?

இதில் சோகம் என்னவென்றால் 40 கிசான் அமைப்புகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட பாதையில் குறித்த நேரத்தில் டிராக்டர் பேரணியைத அப்பாவித்தனமாகத் துவங்கின. நானும் எனது நண்பர்களும் அந்த அமைதியான பேரணியை மணிக் கணக்கில் பார்த்தோம். டெல்லிவாழ் மக்கள் பேரணியை மலர் தூவி வரவேற்றனர்.

ஒரு தேசிய ஊடகம் கூட இந்த அதிகாரபூர்வ பேரணியைக் காட்டவில்லை. இது சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் இணைய தளத்தின் மூலமாக சமூக வலைத் தளங்களில் வரக் கூடாது என்பதற்காக இணைய சேவை நிறுத்தப் பட்டது.

முகநூலில் நெளியும் சில புழுக்கள் வன்முறைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு செய்திகள் அனுப்பின. உங்கள் செய்திகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு திணித்துக் கொள்ளுங்கள்! குடியரசு தினம் உங்கள் தாத்தாவின் திருமண நாள் அல்ல!

குடியரசு தினம் பிறரைப் போலவே என்னுடையதும் ஆகும். தொலை தூரத்திலிருந்து வந்து, தங்கள் டிராக்டர்களை அலங்கரித்து, புதிய துணிகளை அணிந்து தங்களுடையை குடியரசு தினப் பேரணியை நடத்திய விவசாயிகளை உங்களுடைய அழுக்கான அரசியலின் பகடைக் காய்களாக மாற்றுவதைக் காணும் போது வலிக்கிறது. 72ஆவது குடியரசு தினத்தின் புனிதத்தை மாசுபடுத்தும் உங்களின் அழுக்கான அரசியல் என்னைப் புண் படுத்துகிறது.

நீங்கள்தான் குற்றவாளிகள். அவர்கள் அல்ல.

--- குர்ப்ரீத் சிங் வாசி

ஆஜான் குண்டர் படை தளபதியின் அறம் . . ..



ஆஜான் குண்டர் படையின் தளபதி லச்சூ மணிவண்ணனின் முகத்திரையை மதுரை பத்திரிக்கையாளர் தோழர் ப.கவிதா குமார் கிழித்துள்ளார். "அறம், முறம்" பேசுபவர்களின் யோக்கியதை கிழிந்து தொங்குகிறது.

நன்றி தோழர் ப.கவிதா குமார்.


 போதைக் கவிஞனின் போதனை

__________________________________
மதுரை தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் கவிதை வாசிப்பு அரங்கில்தான் முதன் முதலாக அந்த கவிஞனைப் பார்த்தேன். புல் மப்பில் இருந்தார். கவிதை வாசிக்க வந்தவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து என்னென்னமோ செய்துகொண்டிருந்தார் அந்த நவீனக் கவிஞர்.

மேடையில் ஏறி, அவர் ரசித்த கவிதைகள் மற்றும் அவரது கவிதையை வாசிக்க வேண்டும். நிலைகொள்ள முடியாத நிலையில் இருந்தவர் கவிதைப் பேப்பரை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் வாசிக்காமல் மைக் முன் நின்று கொண்டிருந்தார்.

இதயக்கோவில் படத்தில் சரக்கு அடித்து விட்டு பாட்டு பாடாமல் சிரித்துக்கொண்டிருக்கும் பாகவதர் கவுண்டமணிதான் சட்டென மனதிற்குள் வந்தார்.

"கவிதையை வாசிங்க, கவிதையை வாசிங்க" என கூட்டம் அவரை சத்தம் போட்டது. (மொத்த கூட்டமே 20, 30 பேர்தான். அதில், அப்படி என்ன வாசிக்கிறார்கள் என பார்க்கப்போன நான் ஒரு ஆள். தோழர் விஜயபாஸ்கர் வந்திருந்தார் என நினைக்கிறேன்).

மைக் முன் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த அந்த லட்சுமிகரமான கவிஞர் மப்போடு கவிதைகளை வாசித்துவிட்டு இறங்காமல் அப்படியே சிலை போல நின்றார். அவரை இறக்கிவிடச் சென்றவரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

முதன் முதலில் கமல்ஹாசன் பட எபெக்ட்டில் ஒரு கவியரங்கத்தை என் வாழ்நாளில் அங்குதான் பார்த்தேன்! நானும் பல கவியரங்களில் கலந்துகொண்டுள்ளேன். ஆனால், இப்படி ஒரு முத்தக்கவியைக் கண்டதில்லை. இந்த கவியரங்கம் குறித்து பத்திரிகையிலும் எழுதினேன்.

இப்போது அதை ஏன் ஞாபகப்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்களா? அந்த முத்தக்கவிஞர், தனது முகநூல் பக்கத்தில் விவசாயப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பதிவுகளிட்டுள்ளார்.
இப்படி அவர் எழுதியுள்ளார்...

"இந்தியத் திருநாட்டின் குடியரசு தின சீர்குலைப்பு முயற்சியை கொண்டாடும் எவருடனும் தொடர்பு கொள்ளவோ, நட்பு கொள்ளவோ விரும்பவில்லை. அவர்கள் கீழ் ஜென்மங்கள் என்பதே என் நிலைபாடு. நட்பிலிருந்து யாராக இருந்தாலும் விலகி ஓடி விடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை... "இந்திய எதிர்ப்பையும், அரச எதிர்ப்பையும் கலந்துதான் ஒருவன் விவசாயிகளை ஆதரிப்பான் எனில் அவன் பொய்யன். இந்த பொய்யர்கள் உண்மையான பிரச்சனைகளை கூட சீர்குலைக்கிறார்கள். தமிழ் முற்போக்காளர்களும் இந்த பண்புகளைக் கொண்ட அழிவு சக்திகளே. இல்லையெனில் குடியரசு தின சீர்குலைப்பைக் கொண்டாடுவார்களா?" என்றும் எழுதியுள்ளார்.

ஒரு கவிதை வாசிப்பரங்கத்தில் குடித்து விட்டு, பார்த்தவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இந்த கவிஞன்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுபவர்களை அழிவு சக்தி என்கிறான்.

ஜெயமோகன் போன்றோருக்கு சொம்படித்துப் பிழைக்கும் இந்த நபர், தமிழக முற்போக்காளர்களையும் அழிவு சக்திகள் என்று சலம்புகிறார். தங்கள் வாழ்வே அழிந்து போகிறது என போராடும் விவசாயிகளை அழிவு சக்தி என்று எழுதும் இந்த நபர், ஒரு மாவு பாக்கெட்டிற்காக ஜெயமோகன் சலம்பல் செய்த அன்று போதையில் மயங்கிக் கிடந்தாரா எனத் தெரியவில்லை.

புதிய வேளாண் கொள்கைகளை எதற்காக எதிர்க்கிறோம் என்று விவசாயிகளும், முற்போக்காளர்களும் பட்டியலிட்டுள்ளனர். விவாதம் நடத்த தயாராக உள்ளனர். இந்த குடிகார கவிஞன், இந்திய அரசை ஆதரிக்கட்டும். பாஜகவிற்கு ஆள் சேர்க்க தனது கவிஞர் குழாமிற்கு மிஸ்டு கால்கூட கொடுக்கட்டும். ஆனால், புதிய வேளாண் சட்டங்களை ஏன் ஆதரிக்கிறேன் என எழுதட்டும். அதை விட்டு விட்டு "இந்திய எதிர்ப்பு, அரச எதிர்ப்பு உங்களுக்கு இந்த இரண்டு அஜண்டாக்கள் தவிர்த்து வேறு எதுவும் மண்டையிலேயே இல்லை. வெறுப்பர் கூட்டமாகி விட்டீர்கள்" என்று சலம்பக்கூடாது.




குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றியவன் யார் என போதை கவிக்குத் தெரியுமா?...

பாஜக எம்பி சன்னி தியோலின் நண்பனான நடிகர் தீப் சித்துதான். பாஜகவை சேர்ந்தவன். நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருடன் அவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக செய்த ஏற்பாடுதான் இவர்கள் என்பதை அறியாத மண்டூகம், தமிழக முற்போக்காளர்கள் மீது அவதூறு சேற்றை வாரி இறைக்கிறது.

பாஜகவிற்கு ஆதரவாக மாலன் போன்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இது போன்ற கவிகளும் எழுதும் புரட்டுகள் ஒருநாள் அம்பலமாகும். அதனால்தான் அன்றே சொல்லிவிட்டுப் போனான் மகாகவி...

“படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோன்னு போவான்”

தீட்டலங்காரம் - ஆஜானுக்கு சவால்

 


வெளியே போன போது ஆனந்த விகடன் வாங்கி வந்தேன். தோழர் ஆதவன் தீட்சண்யாவின் "தீட்டலங்காரம்" கதை கண்ணில் பட்டது. சுடச் சுட படித்தேன். சுடச் சுட எழுதுகிறேன்.

தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் பாமக வெறியர்கள் நடத்திய கலவரம் மற்றும் கொள்ளையின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. 

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உருமாற்றம் ஆனாலும் அதற்கு உயிர் இருந்து அணிந்துள்ளவரோடு பேசினால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் கதை. மனசாட்சியுள்ள பெண்ணின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அறிய கதையை படியுங்கள்.

புளிச்ச மாவு ஆஜானே, அறம் என்றால் இதுதான். உம்மால் முச்சந்தி பேச்சாளர் என்று அவதூறு சொல்லப்பட்டவர் போல உம்மால் ஒரு கதையாவது நேர்மையின் பக்கம் நின்று எழுத முடியுமா? சவாலாகவே கேட்கிறேன்.

அற்புதமான சிறுகதை ஒன்றை அளித்த தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிகு: மனசாட்சியுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் பெயர் "திவ்யா" 

பிகு: ஆஜான் குண்டர் படை தளபதி பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் படித்தேன். அது மாலையில்

பின் குறிப்புக்கள் -பழையதும் புதியதும்

 


நேற்று பார்த்த ஒரு காணொளியின் ஒரு காட்சி இது. அதைப் பார்த்ததும் இரண்டு வருடங்கள் முன்பாக கலைஞரின் பிறந்த நாளன்று எழுதிய ஒரு பதிவின் இரண்டு பின் குறிப்புகள் நினைவுக்கு வந்தது. 

அவை இங்கே

பின் குறிப்பு 2



கடந்த வருடம் ஒரு சென்னைப் பயணத்தின் போது கடற்கரைச் சாலை வழியே செல்ல நேரிட்டது. அன்றைக்கு அரை மணி நேர அவகாசமும் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றேன்.

மரணத்திற்குப் பின்னும் அவர் பெற்ற வெற்றியையும் எடுபிடி அடிமை அரசின் சில்லறைத்தனத்தையும்  அந்த நினைவிடம்  காலம் முழுதும் சொல்லிக் கொண்டே இருக்கும்.


பின் குறிப்பு 4

கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றாலும் சசிகலா ஓங்கியடித்து சபதம் செய்த, ஓபிஎஸ் தர்ம யுத்த நாடகம் நடத்திய ஜெ நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவேயில்லை.

புதிய பின் குறிப்பு

பழைய பதிவில் நான்கு பின் குறிப்புக்கள் இருந்தாலும் இந்த பதிவுக்கு அவசியமான இரண்டு பின் குறிப்புக்களை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Wednesday, January 27, 2021

அறிவுக் கொழுந்து திண்டுக்கல்லார்

 


உங்க அம்மா உயிரோட இருந்திருந்தா ஏன்யா நினைவிடம்?

ஊடகப் பொறுக்கி ?????

 


வேல் யாத்திரை என்ற பெயரில் குத்தாட்டம், வெறியாட்டம், விஷப் பிரச்சாரம் செய்த போது வாய் மூடி இருந்து விட்டு மு.க.ஸ்டாலின் கையில் வேலைப் பார்த்த உடனே மட்டும் பொங்கி எழுந்தால்

அதனை எப்படி அழைப்பது?

"ஊடகப் பொறுக்கி"

என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.

மூமூமூமூத்த்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளரின் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்.



நீங்களும் சொல்வீர்கள்

"ஊடகப் பொறுக்கிகள்" என்று


Tuesday, January 26, 2021

செங்கோட்டையும் மூவர்ணக் கொடியும் மகிழ்ந்திருக்கும்

 டெல்லி எல்லையில் போராடிய விவசாடிகள் தங்கள் டிராக்டர்களில் இன்று டெல்லிக்குள் அணிவகுத்து செங்கோட்டையையும் வந்தடைந்துள்ளனர்.








வரலாற்றுச் சின்னத்தை போராட்ட களமாக மாற்றலாமா? 

மூவர்ணக் கொடி ஏற்றும் இடத்தில் வேறு கொடி ஏற்றலாமா?

காலிஸ்தான் கொடி அல்லவா அது! நியாயமா இது?

இப்படிப்பட்ட கேள்விகளோடு சங்கிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காலிஸ்தான் கொடி என்பது சங்கிகளின் வழக்கமான கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.

டெல்லி செங்கோட்டைக்கு வரலாற்று பின்னணி என்பது என்ன? முகலாயர்கள் காலத்தில் கட்டப் பட்டது என்பது ஒரு புறம் இருக்கட்டும், விடுதலை அடைந்ததும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட இடம். விவசாயிகள் போராட்டமும் அடிப்படையில் விடுதலைக்கான போராட்டம்தானே! இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மாற்ற விடாமல் நடப்பதற்கான விடுதலைப் போராட்டம்தான். 

வேலூர் காரனாக எழுதுகிறேன். வேலூர் கோட்டைக்கு சிறப்பு அதன் அழகோ, அகழிகளோ அல்ல, இந்திய விடுதலைக்கான முதல் போராட்டம் இந்து முஸ்லீம் வீரர்களின் ஒற்றுமையால் நடந்தது என்பதால்தான். எனவே வரலாற்றுச் சின்னத்தில் போராட்டம் நடைபெறுவது என்பதுதான் அந்த வரலாற்றுக்கே பெருமை.

இருபது ஆண்டுகள் முன்பு வரை மூவர்ணக் கொடியை ஏற்காத கூட்டம், விடுதலையைக் காட்டிக் கொடுத்த துரோகிகளின் வாரிசுகள் ஏற்றும் போதுதான் மூவர்ணக் கொடி வருந்தியிருக்கும். முகம் துடைக்கும் துண்டாக தன்னை பயன்படுத்திய மோடி போன்ற பாவிகள் ஏற்றும் அளவிற்கு நம் தரம் தாழ்ந்து விட்டதே என்று வேதனைப் பட்டிருக்கும்.

உண்மையான விடுதலை வீரர்கள் ஏற்றிய கொடி தன் அருகில் உள்ளதே என்று மூவர்ணக் கொடி மகிழ்ந்திருக்கும், செங்கோட்டை பெருமிதம் அடைந்திருக்கும்.




Monday, January 25, 2021

"இரவு" பற்றி

 நூல் அறிமுகம்

 


நூல்                                        இரவு

ஆசிரியர்                             எலீ வீஸல்

தமிழில்                                 ரவி.தீ.இளங்கோவன்

வெளியீடு                             எதிர் வெளியீடு,

                                                   பொள்ளாச்சி

விலை                                      ரூபாய் 230.00

 

வரலாற்றை நாம் மறப்போமானால் வரலாறு முன்னை விட இன்னும் ஆவேசமாக நிகழ்ந்தே தீரும் என்பார்கள். நாம் மறக்கக் கூடாத ஒரு வரலாறு பற்றிய ஒரு நூல். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரு சிறுவனின் அனுபவப் பகிர்வு.

 

ஹங்கேரியைச் சேர்ந்த எலீ வீஸல், பதினைந்து வயது சிறுவனாக இருக்கிற போது தங்கள் இருப்பிடங்களிலிருந்து யூதர்கள் வெளியேற்றப் படுகிற போது பெற்றோர் மட்டும் சகோதரியோடு வெளியேற்றப்படும் முதல் துயரம் நிகழ்கிறது.

 

அப்போது தொடங்கும் துயரம் அவரை துரத்திக் கொண்டே இருக்கிறது. உடமைகள் பறிக்கப்படுகின்றன. தாயும் தங்கையும் பிரிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மாடுகளை அடைப்பது போல ரயில் பெட்டிகளின் அடைத்து ஆஸ்ட்விச் வதை முகாமுக்கு அனுப்பப் படும் எலீஸின் பயணம் வேதனை ததும்பியதாக இருக்கிறது. யாராவது இறக்க நேரிகையில் சடலம் தூக்கியெறியப்பட்டு பயணம் தொடரும். கூடுதல் இடம் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடையக் கூடிய விதத்தில் மற்றவர்கள் இருந்தார்கள் என்றால் எப்படிப்பட்ட அவஸ்தை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!

 

வதை முகாம்களுக்கு செல்பவர்களுக்கு பெயர்கள் கிடையாது. அவர்கள் கையில் ஒரு எண் பச்சை குத்தப்படும். ஒவ்வொரு நாளும் வரிசையில் நிற்க வேண்டும். வேலை செய்வதற்காக தேர்வானவர்கள் நிம்மதியடைவார்ககள். ஏனென்றால் வேலை செய்ய இயலாத சிறுவர்களும் முதியவர்களும் வீண் சுமை என்று கொல்லப்படுகிறார்கள். இன்று நம் எண் அழைக்கப்படவில்லை என்று நிம்மதியாக இருந்திய முடியாது. சில நாட்களுக்குப் பின்பு கூட மரணத்திற்கான அழைப்பு வந்திடும்.

 

ஆஸ்விட்ச் முகாம் எப்போதும் பிணங்கள் எரியும் நாற்றத்தோடே இருக்கிறது.  தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே தோண்டிக் கொண்டு அருகில் நின்றால் சுட்டுக் கொல்வார்கள். அத்தனை பேர் முன்னிலையிலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு அது அவர்களுக்கான அச்சுறுத்தலாக இருக்கும்.

 

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு செல்லும் வழியில் ரொட்டித் துண்டுகளுக்காக நடக்கிற மோதல் ஜெர்மானியர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. அந்த வேடிக்கையை அனுபவிக்க மேலும் மேலும் ரொட்டித் துண்டுகளை வீசுகிறார்கள். சக மனிதனின் துயரத்தில் இன்பம் காணும் அளவிற்கு வெறியூட்டப்பட்டவர்களாக மாற்றப்பட்ட மக்கள் அவர்கள்.

 

சவுக்கடி, தடியடி ஆகியவை சர்வ சாதாரணம். ஹிட்லரின் படைகளுக்கு நெருக்கடி வருகையில் அவர்கள் யூதர்களை கொட்டும் பனியில் யூதர்களை கால் நடையாகவே பல நேரம் இழுத்துச் செல்வார்கள். உணவுக்காக மோதல் சர்வ சாதாரணம். அப்படி பயணம் போகையில் நோயுற்ற தந்தைக்காக நிதானமாக நடந்தால் தானும் இறக்க நேரிடும் என்று ஒரு மகன் தந்தையை கைவிட்டுச் செல்கிறான். இதனை விவரிக்கிற எலீ வீஸலே இப்படிப்பட்ட நிலைக்கு உள்ளாக்குகிறார்.

 

தந்தை மரணப்படுக்கையில் இருக்கையில் தன் மகனை மீண்டும் மீண்டும் அழைத்தாலும் எலீஸ் அசையவில்லை. நாஜி அதிகாரியின் குண்டாந்தடியால் தலையில் அடி வாங்க தயாராக இல்லை. மறுநாள் காலை கண் விழிக்கையில் தந்தை இருந்த படுக்கையில் வேறு நோயாளி. தந்தையின் சடலம் என்ன ஆனது என்று கூட தெரியாது.

 

ஹிட்லரின் தோல்விக்குப் பிறகு விடுவிக்கப்படுகிற வீஸல் நூலை இவ்வாறு நிறைவு செய்கிறார்.

 

“நான் கண்ணாடியைப் பார்க்கையில் அந்த கண்ணாடியின் அடியாழத்திலிருந்து ஒரு பிணம் என்னை ஆழ்ந்து பார்த்தது.  அவன் என்னை உற்று நோக்கிய போது அந்த விழிகள் என்னைப் பார்த்த பார்வை என்னை விட்டு என்றுமே அகலவில்லை.”

 

அவசியமான சில பின் குறிப்புக்கள்

 

ஒரே நாளில் படித்து முடித்தாலும் தொடர்ச்சியாக படிக்க இயலவில்லை. சில விவரிப்புக்கள் மனத்தை மிகவும் பாதிக்க வைத்து வாசிப்பை அவ்வப்போது  நிறுத்த வைத்தது.

 

வதை முகாமில் தவிக்கிறவர்கள் கடவுளிடம்

 

“நீ யாருக்கு துரோகம் இழைத்தாயோ, காட்டிக் கொடுத்தாயோ, இந்த மனிதர்களைப் பார், நீ எவரை சித்ரவதைக்குள்ளாக, வெட்டிக் கொல்லப்பட, விழ வாயுவால் மூச்சு திணறடிக்கப்பட, எரிக்கப்பட, அனுமதித்தாயோ அவர்கள் என்ன செய்கிறார்கள், உன்னை வழி படுகிறார்கள், உன் நாமத்தை துதிக்கிறார்கள்”

 

என்று புலம்புகிறார்கள்

 

அவர்கள் அனுபவித்த அத்தனை சித்தரவதைகளுக்கும் காரணமான, மிகப் பெரும் கொடூரங்களை நிகழ்த்திய ஹிட்லரின் நாஜிப்படையை இறுதியில் வீழ்த்தி முடிவு கட்டியது சோவியத் யூனியனின் செஞ்சேனை என்பதை நாம் எந்நாளும் மறந்து விடக் கூடாது.

 

இனப்படுகொலைகளுக்கு எதிரான கருத்துத் திரட்டலுக்காக எலீ வீஸல் அமைதிக்கான நோபல் பரிசை 1986 ம் ஆண்டு பெற்றார்.

 

இனத்தின் பெயரால் ஹிட்லர் யூதர்களை ஒதுக்கி வைத்து மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தியதை நினைவு கூரும் அதே வேளையில் குடியுரிமை என்பதை மதத்தின் அடிப்படையில் முடிவு செய்யும் சட்டம் இந்தியாவில் நிறைவேறியுள்ளது என்பதையும் அஸ்ஸாமில் அப்படி குடியுரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான முகாம்கள் செயல்படத் தொடங்கி விட்டது என்பதையும் நாம் மறக்கக் கூடாது. வரலாற்றை நாம் மறந்தால் நாளை அஸ்ஸாம் முகாம்களும் ஆஸ்விட்ச் வதை முகாம்களாக மாறி விடும்.

 

நூலில் இருந்த புகைப்படங்களும் வதை முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வரைந்த ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்காக. அவை அந்த கொடூரத்தைச் சொல்லும்.











Sunday, January 24, 2021

மொட்டைச்சாமியார் பாணியில் ருபாணி

யோகி ஊர்களின் பெயர்களை மாற்றினார். அவரது பாணியில் குஜராத் முதல்வர் ரூபாணி ட்ராகன் பழத்தின் பெயரின் கமலம் என்று மாற்றியுள்ளார்.

 


ஆகவே இனி ப்ரூஸ் லீயின் பிரபல திரைப்படத்தின் பெயர்

எண்டர் தி கமலம்.

 

உங்க ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வதற்காகவே பெயர் மாற்றும் வேலையை பாஜக முதல்வர்கள் செய்கிறார்கள் போல.