பொருளியல் அரங்கம்-க.சுவாமிநாதன்
உலக ஊட்டச்சத்து அறிக்கை - 2018 வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. உலகில் ‘குட்டை’ குழந்தைகளும் ‘மெலிவான’ குழந்தைகளும் இந்தியாவிலேயே அதிகம் என்கிறது அவ்வறிக்கை. கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றித் தவிப்பதன் வெளிப்பாடு இது. இதோ அது குறித்த தொகுப்பு.
v ‘உலக ஊட்டச்சத்து அறிக்கை’ என்றால் என்ன?
லண்டனில் 2013ல் முதல் “வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து
மாநாடு” நடைபெற்றது. ஆங்கிலத்தில் என்ஃபார்ஜி (N4G-NUTRITION FOR GROWTH) என்று அம்மாநாடு அழைக்கப்பட்டது. பிரிட்டன், பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், கொடையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் இம்மாநாட்டை முன்னின்று நடத்தினர். 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு உறுதிமொழிகளையும் தந்தார்கள். 2014ல் உலக ஊட்டச்சத்து அறிக்கை வெளியீடு துவக்கப்பட்டது.
என்னென்ன நடவடிக்கைகள் ஊட்டச்சத்து தொடர்பாக பின்தொடர்ந்து எடுக்கப்பட்டன?
2014ல் இரண்டாவது சர்வதேச மாநாடு இத்தாலியின் தலைநகரான ரோமில் நடைபெற்றது. 170 அரசாங்கங்கள், 100 தொழிலகங்கள் உள்ளிட்டு 2200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ரோம் பிரகடனம் வெளியிடப்பட்டது. ‘‘எல்லோருக்கும் ஊட்டச்சத்து உணவு’’ என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் சத்துணவுக் குறைபாட்டை ஒழித்தல், உணவு முறைகளை மாற்றுதல் ஆகியனவற்றைப் பரிந்துரைத்தது.
2015-ல் “நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள்” வெளியிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக 2030-இல் சத்துணவு குறைபாட்டை ஒழிப்பதென்ற கால வரையறையும் அறிவிக்கப்பட்டது. 2016-இல் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான முதலீடுகளை அதிகரிப்பதற்கான இலக்குகள் 2025-இல் எட்டப்படுமென்று அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் “ஊட்டச்சத்திற்கான பத்தாண்டு செயல்திட்டம்” ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டது. 2017-இல் இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடைபெற்ற சர்வதேச ஊட்டச்சத்து மாநாட்டில் உலகம் முழுமைக்கான நிதி உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
2018 - உலக ஊட்டச்சத்து அறிக்கை தருகிற அதிர்ச்சிகரமான தகவல்கள் என்ன?
நவம்பர் 29, 2018 அன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள “குட்டையான” குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவிலே உள்ளது. அதாவது 4 கோடியே 66 லட்சம் குழந்தைகள் வயதுக்கேற்ற உயர்த்தோடு இல்லை. ஆங்கிலத்தில் STUNTED CHILDREN என்கிறார்கள். இதற்கு காரணம் நீண்டகாலம் சத்துணவின்றி இருப்பதும், அடிக்கடி நோய்வாய்ப்படுவதுமே ஆகும்.
எடைகுறைவான “மெலிந்த” குழந்தைகளும் இந்தியாவில்தான் அதிகம். அதாவது உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் 2 கோடியே 55 லட்சம். இவர்களை ஆங்கிலத்தில் WASTED CHILDREN என்பார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் அதிகமாக இருப்பதற்கு இந்நிலைமையே காரணம். உணவு போதாமை, நோய்கள் ஆகியனவே காரணிகளாகும்.
உலகம் முழுவதிலும் 15 கோடியே 80 லட்சம் குழந்தைகள் உயரம் குறைந்தவர்களாகவும், 5 கோடியே 50 லட்சம் குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர்.
“வளர்ச்சி” என்றும் “வல்லரசுக்கனவு” என்றும் பேசுகிற இந்தியாவே இதில் முதலிடம் என்பதே வேதனையான உண்மையாகும்.
குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் போல உள்ளதே!
அதிலென்ன சந்தேகம். வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் உலக சராசரி 21 சதவீதம் எனில் இந்தியாவில் 40 சதவீதக் குழந்தைகள் இக்குறைபாட்டோடு உள்ளன.
எடைக்குறைவிலோ உலக சராசரியை விட இந்திய சராசரி மிக மிக மோசம். உலக சராசரி 6 சதவீதம் எனில் இந்திய சராசரி கிட்டத்தட்ட 21 சதவீதம்.
மொத்தக் குழந்தைகளில் இத்தனை சதவீதம் இப்படி உடல்நலம் குன்றியவையாக இருந்தால் நாடு மட்டும் எப்படி நலத்தோடு இருக்க முடியும்? இப்பட்டியலைப் பாருங்கள்... மொத்தக் குழந்தைகளில் குறைபாடுடையவர்களின் சதவீதம்....
நாடு உயரம் எடை
குறைவு % குறைவு %
பாகிஸ்தான் 45.0 10.5
இந்தியா 37.9 20.8
வங்காள தேசம் 36.2 14.4
தென் ஆப்பிக்கா 27.4 2.5
சீனா 8.1 1.9
பிரேசில் 7.1 1.6
உலக சராசரி 21.44 6.07
பாகிஸ்தானை விட வளர்ச்சி குன்றுவதில் சற்று நல்ல சதவீதம் கொண்டிருந்தாலும் எடை குறைவில் பாகிஸ்தானுக்கும் கீழே இருக்கிறோமே!
இந்திய ஆட்சியாளர்களின் “தேசியம்” நம்மை எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானோடு ஒப்பிட வைக்கிறது. ஆனால் இந்திய மாநிலங்களுக்குள்ளான ஒப்பீடைப் பார்த்தால் மூச்சு நின்று விடும். உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பக்ரைன் மாவட்டத்தில் 65 சதவீதம். சிரஸ்வதி மாவட்டத்தில் 64 சதவீதம்.யோகிகள் இதைப்பற்றி யோசிக்க வேண்டாமா? ஜார்க்கண்ட் மாநிலத்து பஸ்சிமி சிங்பூம் மாவட்டத்தில் 59 சதவீதம். வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் எல்லாம் இப்படி நிலைமை மிக மோசமாக உள்ளது. தெற்கு பரவாயில்ல. 20 சதவீதத்திற்கு கீழ் உள்ளது.
மற்ற நாடுகளின் நிலைமை என்ன?
ஏற்கெனவே சதவீதத்தில் பட்டியல் தரப்பட்டுள்ளது.141 நாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 88 நாடுகளில் ஏதாவது ஒருவகை சத்துணவுக் குறைவு உடையதாய் உள்ளன. எண்ணிக்கையில் இந்தியாவிற்கு அடுத்து வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நைஜீரியாவில் அதிகம். அங்கு 1கோடியே 39 லட்சம். அதற்கடுத்து பாகிஸ்தான் 1 கோடியே 7 லட்சம். இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே உலகம் முழுவதிலும் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பாதிக்கு பாதி உள்ளனர். எடை குறைந்த குழந்தைகளில் இந்தியாவிற்கு அடுத்த இரண்டு இடங்களைப் பிடிக்கிற நாடுகள் நைஜீரியா (34 லட்சம்), இந்தோனேசியா (33 லட்சம்) உலகத்திற்கே மருந்து சீட்டு என்று பரிந்துரைக்கப்பட்ட உலகமயப் பொருளாதாரப் பாதை இன்னோரு தலைமுறையின் எதிர்காலத்தையே பாதித்திருக்கிறது என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.
என்னதான் தீர்வு?
மாநிலத்திற்கு மாநிலம் சத்துணவு குறித்த சதவீதங்கள் மாறுபடுகின்றன. அரசியல் உறுதி, நிர்வாகத் திறன், கல்வியறிவு, பெண்களுக்கு அதிகாரம் ஆகியனவும் குழந்தைகளின் உடல் நலனில் பிரதிபலிப்பவை என்பதன் வெளிப்பாடே இது. இந்து நாளிதழின் டிசம்பர் 5 தலையங்கத்தின் ஒரு கருத்து முக்கியமானது. “உணவும் சுதந்திரமும் கைகோர்த்து நடைபோட வேண்டும்” என்பதே அது. இவை இரண்டும் ஒன்றையொன்று வலுப்பெறச் செய்பவை. வறுமையற்ற சூழலே திறனை வளர்ப்பதற்கான உந்துதலைத் தரும். அங்கன்வாடிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். பெண்கல்வி, திருமண வயது, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பு ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
அடுத்து “ரெடிமேட்” உணவுகள். இந்தியாவில் விற்பனையாகும் பாக்கெட் உணவுகளில் 21 சதவீதமானவை மட்டுமே தரமானவை ஆகும். அதாவது, சர்க்கரை , உப்பு, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்றவை உரிய அளவில் இல்லாத உணவுகளே 79 சதவீதம் ரெடிமேட் வகையறாக்களாக கிடைக்கின்றன.மூன்றாவது உடல் நலத்திற்கான அரசின் ஒதுக்கீடு. 2017-18 பொருளாதார ஆய்வின்படி உடல் நலத்திற்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) 6.6 சதவீதம் ஆகும். ரொம்ப காலமாக 6 சதவீதத்தை ஒட்டியே உடல் நலத்திற்கான ஒதுக்கீடுகள் உள்ளன. இது ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க போதாது.ஒருபக்கம் ஒதுக்கீடுகள் வெட்டப்படும் போது, மருத்துவச் செலவுகளின் பாய்ச்சல் பணவீக்க விகிதத்தை விட இரண்டு மடங்கு உள்ளது. மருத்துவ செலவின போக்கு விகிதம் (ஆநனiஉயட கூசநனே சயவந) 10 சதவீதம் ஆகும். பணவீக்கம் 5 சதவீதம். மருத்துவமனை உள்நோயாளி செலவுகளை விட புறநோயாளி செலவுகளே அதிகமென்று ஆய்வுகள் கூறுகின்றன.
2020-இல் வல்லரசு என்றார்கள். 2030 என்று இப்போது சொல்கிறார்கள். வளர்ச்சி விகிதங்கள் பற்றியும் புருவங்கள் விரிய விரிய அமைச்சர்கள் பேசுவதைப்பார்க்கிறோம்.
56 இன்ச் மார்பு உள்ள பிரதமர் என்று வேறு பெருமை பேசுகிறார்கள். ஏழுகோடி குழந்தைகளை குள்ளர்களாக, எலும்பர்களாக வைத்துள்ள தேசம் எப்படி வல்லரசு ஆக முடியும்?
நன்றி - தீக்கதிர் 09.12.2018
எமன் வேஷமே போட்டுட்டானா..கச்சிதமா பொருந்துறான்யா
ReplyDelete