தஞ்சாவூரிலிருந்து வெ.ஜீவக்குமார்
காவிரி தஞ்சைக்கு இடப்பெயர்ச்சி பெற்றதாக கூறும் சில ஆய்வுகள் உண்டு. வலுவாக இதை மறுப்போரும் உண்டு. எப்படி இருந்தபோதிலும் காவிரி டெல்டாவின் வாழ்க்கை கி.பி,- கி.மு என்பது போல் கஜா புயலுக்கு முன் - கஜா புயலுக்கு பின் என மாற்றப்பட்டது. பேரளவு மருதமும் ஓரளவு நெய்தலும் கலந்த நிலம் தன் வடிவை இழந்தது. புதிய எதையும் அது பெறவில்லை. அதன் பண்பாடும் நாகரிகமும் கண் முன்னே நொறுங்கித் தகர்கிறது.இயல்பாகவே சோழ மண்டலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கீர்த்தி உண்டு. தமிழகத்தில் குடிசைகள் இப்போது அதிகம் உள்ள மாவட்டம் நாகப்பட்டினம். ஆனால் அதன் பூர்வீகம் அப்படி அல்ல. பேரரசன் ராஜராஜன் ஆட்சியில் (985-1014) நாகை மாபெரும் துறைமுகம் ஆகும். 13ஆம் நூற்றாண்டில் சீனர்கள் நாகையை நா-கியா-போ-டன்- நா என அழைத்தனர்.
1520ல் நாகை சர்வதேச வணிக மையம் ஆகும். இதன் வர்த்தக வனப்பு போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சுக்காரர்களின் கண்களை உறுத்தியது. அரிசி, வெண்ணெய், உப்பு, இரும்பு, மரம், பீரங்கி குண்டு போன்றவை இங்கிருந்து ஏற்றுமதியாயின. சீனாவிடம் பட்டுத்துணியை நாகை பெற்றது. அரிசியை திரும்ப தந்தது. 1500களில் முத்து மாலைகளாலும் மாணிக்கப் பரல்களாலும் வளம் பெற்று இருந்த நாகையில் கடற்கொள்ளை நடந்தது.நாகை அருகில் 2018லும் அது தொடர்கிறது.நாகையிலிருந்து அரசு வாகனம் வேதார ண்யம் புறப்படுகிறது. கஜா நிவாரணத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை வாகனத்தில் உள்ளது. கீழையூர் அருகில் வாகனம் மறித்து பறிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு கழக சங்க தோழர்கள் தஞ்சையிலிருந்து திருத்துறைப்பூண்டி, வேதாரண் யத்திற்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அவர்கள் கொண்டு சென்ற 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழியில் மிரட்டி பறிக்கப்படுகிறது.
எத்தனையெத்தனை புயல்கள்
மேற்கு பகுதியை விட கிழக்கு கடற்கரை பகுதி அடிக்கடி புயல்களை சந்திக்கிறது. 1890 முதல் 2002 வரை இப்பகுதி 304 புயல்களை சந்தித்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியோ 48 புயல்களை மட்டுமே கண்டது. 2004 டிசம்பரில் சுனாமி, 2005ல் ஃபானூஸ் புயல், 2008ல் நிசா, 2010ல்... 2011ல் தானே, 2015ல் சென்னையில் வர்தா, இப்போது 2018ல் கஜா...புயலையோ சூறாவளியையோ கை நீட்டித் தடுக்கும் வல்லமை நமக்கு இல்லை. எனினும் புயலின் தாக்கத்தை, பாதிப்பை, விளைவை குறைக்க அரசாங்கத்தால் முடியும்? புயலின் நகர்வை பேரிடர் மேலாண்மையைத்துறை கணித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் ஊடகம் மூலம் அறிவித்தது.12-11-2018ல் தமிழக அரசின் உயர் மட்டக்குழு இதுகுறித்து விவாதிக்க கூடியது.
16-11-2018ல் கஜா சண்டமாருதம் செய்தது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை செய்தது. விடியலில் புயல் வீச போகிறது என நள்ளிரவில் சங்கு ஊதியது. எனினும் அதிகாலை 2 மணிக்கு தமிழக அரசு குறட்டைவிட்டது. கஜா மணிக்கு 115கி.மீ வேகத்தில் வீசியது. எச்சரித்த அரசு அமைப்பு களே அலறின. தமிழக அரசு இயந்திரம் குடை சாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் பறந்தன. அரசு அலுவலகங்கள், காவல் நிலை யங்கள், நீதிமன்றங்களில் இருந்த மரங்களே வீழ்ந்தன. குடிமக்களை மரம் மட்டையை வெட்ட சொன்ன அரசு தன் உடைமையை சரிசெய்யவில்லை.
அரசு நட்டிருந்த மின் கம்பங்கள் ஒடிந்தன. 1,03,241 மின் கம்பங்கள் அதோ கதியாயின. முனனெச்சரிக்கை செய்த அரசிடம் 7,000 புது மின் கம்பங்கள் மட்டுமே இருந்தது. துவக்கத்தில் 471 நிவாரண முகாம்கள் அமைத்து அரசு 82,000 பேரை தங்க வைத்தது. பின்னர் அமைச்சர் உதயகுமார் அறிவிப்புப்படி 465 முகாம்களில் 3,78,533 பேர் அடைக்கப்பட்டனர். ஒரு தீப்பெட்டிக்குள் 10 யானைகள், ஒரு டவுன் பேருந்துக்குள் 10,000 பேர் நுழைந்தால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது.
அரசு முன்னெச்சரிக்கையுடன் நசுவினி ஆற்றினை தூர்வாரி இருந்தால் கரிசைக்காடு கிராமம் கண்ணீரில் படகு விட்டிருக்காது. அரசு எச்சரிக்கை காட்டி யிருந்தால் கோடியக் கரையில் மான்கள் நள்ளிரவில் மாண்டு இருக்காது. குதிரைகள் சேற்றுக்குள்ளும் கடலுக்குள்ளும் வீழ்ந்து இருக்காது. சரணாலயத்தில் பறவைகள் செத்து மிதந்து இருக்காது. மன்னார் தீவில் மேய்ச்சலுக்குப் போன 300க்கும் மேற்பட்ட மாடுகள் மடிந்திருக்காது. 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். மீனவர்களின் 2000 விசை படகுகளும் பைபர் படகுகளும் காப்பாற்றப்பட்டு இருக்கும். வீடுகள் தலைகுப்புற கவிழ்ந்து இருக்காது.
தேவையான அளவு முகாம்கள் அமைத்து இருந்தால் முத்துப்பேட்டை, பின்னத்தூரில் மக்கள் சுடுகாட்டில் சமைக்கவும் சேற்று ஈரத்தில் படுக்கவும் நேர்ந்திருக்காது. கோட்டூர் அக்கரைகோட்டத்தில் கழிப்பறையில் சமையல் நடந்திருக்காது. மதுக்கூர் வானதெரியான் குடிக்காட்டில் சாலையில் சமைக்க நேர்ந்திருக்காது. மரவள்ளி கிழங்குகளையும் தேங்காய் குருத்துக்களையும் உணவாக உட்கொள்ள நேர்ந்திருக்காது. மாணவர்களின் கல்வி வெள்ளத்தில் மூழ்கியிருக்காது. காற்று வீசும் போது ஸ்விட்சை நிறுத்துவது ஒரு நடவடிக்கை. மெழுகுவர்த்தி தருவதுதான் முன்னெச்சரிக்கை. தமிழக அரசு அதை செய்யவில்லை.
இது தேசியப் பேரவலம் இல்லையா?
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என தன்னை நிறுவிக்கொண்ட ஒரு பகுதியின் அவலம் தேசிய பேரவலம் என அறிவிக்க மத்திய அரசை கெஞ்ச வேண்டும். ஒரு அட்சயபாத்திரம் திருவோடாய் மாறியது. உலகெங்கும் உலாவரும் பிரதமர் சுமார் 70பேர் இறந்தும் ஒரு பெருமூச்சு விட மறுக்கிறார். குஜராத்தில் ஒரு சிலைக்கு 3000 கோடி செலவு செய்த பிரதமர்தமிழக நிவாரணத்திற்காக இன்னும் ஒரு ரூபாய்ஒதுக்க யோசிக்கிறார். இத்தாலிய நாட்டின் சீசர் டிஃபிரடரிக், போர்த்துகீசிய கஸ்பார் கொரையா, சீனாவின் துங் ஆவோ உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் 500 ஆண்டுகளுக்கு முன்னே அதிசயித்து மிதித்த டெல்டாவின் மண்ணிற்கு நரேந்திர மோடி வர மறுக்கிறார். கஜா எனும் மத யானைப் புயலின் பிளிறலை- அதன் பேரழிப்பை மத்திய அரசு அலட்சியப் படுத்தியது. பனித்துளிகள் மலர்களுக்கு முத்தம் தருவதை போல் மத்திய அரசு கஜாவை கண்ணடிக்கிறது.
தமிழக அரசின் நிவாரண கோரிக்கைகளை புறம் தள்ளுவது மத்திய அரசின் வாடிக்கை. தமிழக அரசு ஒரு 1,02,573 கோடி கோரியது. மத்திய அரச தந்ததோ 2,012 கோடி. இப்போதும் கஜாவின் நாசத்தை மத்திய அரசின் குழு பார்வையிட்டுள்ளது. இவர்கள்பார்க்கும் போதே தென்னை மரத்தின் குருத்தைக்காட்டி இது தென்னை போட்ட முட்டையா குஞ்சு பொரிக்குமா என கேட்டுள்ளனர். ஒரத்தநாடு புலவன் காட்டில் 25-11-2018ல்அதுதான் நடந்தது. தமிழக அரசும் மனிதர் களின் சாவை ஈசலின் மரணம் போல் கடந்து செல்கிறது.
கஜா ருத்ரதாண்டவம் நடத்தியபோது சேலத்தில் முதலமைச்சர் சந்தன மணத்துடன் திறப்பு விழாக்கள் நடத்தினார். தென்னந் தோப்பும் தேக்கும் நிர்மூலம் ஆனதால் ஒரு தற்கொலை, அதிர்ச்சி மாரடைப்பில் ஒரு சாவு, புயலில் விழுந்த மரத்தை அகற்றும் போது பாம்பு கடித்து ஒரு சாவு, நிவாரணம் வாங்க முயலும் போது சில சாவுகள், பூப்படைந்த தீட்டு என தனிக்குடிசையில் வைக்கப்பட்ட சிறுமியின்கூரையில் மரம் விழுந்து ஒரு சாவு,வீடுகள் இடிந்து பல சாவுகள், மின்சாரம் பாய்ந்து சில சாவுகள், திருத்துறைப் பூண்டி கீழக்கொற்கை, மணலியில் நிவாரண முகாமில்கெட்டுப்போன உணவை சாப்பிட்டு சிலர் சாவு,தொற்று நோய் வந்து சில சாவு என குலை குலையாய் முந்திரிக்காய் என்பது போல்மரணங்கள் நடந்தன. அதேசமயம் முதலமைச்சரோ தில்லி தாஜ்மான்சிங் ஹோட்டலில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் சிறந்த நிர்வாகி என மார்பில் 3 பதக்கங்களை சூடிக்கொண்டிருந்தார். மந்திரிகள் அங்கே தங்கி இருக்கிறார்கள். அவர்களை கொசுவோ மற்றவையோ கடிப்பது இல்லை. வியர்வை போக்க பனை மட்டை விசிறியால் அவர்கள் விசிறுவதில்லை. பசியாலோ தாகத்தாலோ அவர்கள் வாடுவதில்லை.
முறையாக நிவாரணம் வழங்க அவர்களுக்கு திராணியும் இல்லை. சென்னை வர்தாவால் பாதிக்கப்பட்டபோது 20 ஆயிரம் மின் ஊழியர்கள் களத்தில் நிறுத்தப்பட்டனர். இப்போதோ 13,829 மின் ஊழியர்கள்தான். 4 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் நிவாரணம் கொடுத்தார். எடப்பாடியோ ஹெக்டேருக்கு 13,500 (ஏக்கருக்கு சுமார் 5400) தருகிறார்.தமிழக அரசு வெள்ள நிவாரண பணிகளில் கேரளா, ஒடிசா போன்றவற்றின் பாடத்தைபின்பற்றவில்லை.
உற்பத்தி பாதிக்கப்பட்டால் மன்னர்கள் ஆட்சியில் வரி தள்ளுபடி செய்யப்பட்ட முன்மாதிரி சோழ மண்டலத்தில் உண்டு. இன்றைய அரசு அதையும் பின்பற்ற வில்லை.சோறு பெருக்கெடுத்த வீதிகளின் சேற்றில்நின்று சோற்றுப் பருக்கைகளுக்காக எங்கள்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கையேந்துகின்றனர். அமுதசுரபி ஏந்திய எங்கள் மணிமேகலைகள் எச்சில் இலை பொறுக்க க்யூவில் நிற்கிறார்கள். கர்ணன் போல் வள்ளலாய் வாழ்ந்த எங்கள் விவசாயி தர்ம சத்திரத்தின் வாசலில் துணி விரித்து யாசகம் கேட்கிறார்.துயரமும் கோபமும் கொப்பளிக்க நிற்கிறோம் நாங்கள்.
தீக்கதிர் 01.12.2018
No comments:
Post a Comment