Wednesday, December 5, 2018

சஞ்சாரத்திற்கு விருது. வாழ்த்துக்கள் எஸ்.ரா


இந்த வருட சாகித்ய அகாடமி விருது "சஞ்சாரம்" நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொதுவாக சாகித்ய அகாடமி அளிக்கப்பட்ட நூல்களை விருது அறிவிக்கப்பட்ட  பிறகே வாங்கிப் படித்துள்ளேன் (போன வருடம் விருது அளிக்கப்பட்ட தோழர் இன்குலாபின் "காந்தள் நாட்கள்" உட்பட).

சஞ்சாரம் நாவலை 2015 ம் வருடம் சென்னை புத்தக விழாவில் உயிர்மை பதிப்பக அரங்கில் வாங்கினேன். அப்போது எஸ்.ரா அங்கிருந்ததால் அவருடைய கையெழுத்தையும் அதில் பெற்றுக் கொண்டேன்.  

அந்த வருடம்  எங்கள் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்காக புவனேஸ்வர் சென்ற போது இரயிலில் படிக்கத் தொடங்கினேன். கூட்டம் முடிந்து திரும்பி வருகையிலும் ரயில் சினேகிதனாக சஞ்சாரமே இருந்தது. 

அவமதிப்புக்கு உள்ளாகிற நாகஸ்வரக் கலைஞன் பக்கிரி, பழி வாங்குவதற்காக திருவிழாப் பந்தலை கொளுத்தி விட்டு தப்பித்துச் செல்வதில் தொடங்குகிற நாவல், பல்வேறு நாகஸ்வரக் கலைஞர்களின் வாழ்வை, பலத்தை, பலவீனத்தை சொல்கிற கதைகளின் தொகுப்பாக, ஒன்றோடு ஒன்று தொடுக்கப்பட்ட மாலையாக விரியும்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நாகஸ்வரக் கலை வளர்க்கப்பட வில்லை, நெல்லை மாவட்டத்திற்கும் அந்த பாரம்பரியம் உண்டு என்பதை நாவல் அழுத்தமாக பதிவு செய்து கொண்டே இருக்கும். 

வேகமாக நகர்கிற, சிறந்த வாசிப்பனுபவம் தந்த நாவல் "சஞ்சாரம்". 

அந்த நூலுக்கு விருது அளிக்கப்பட்டது மிகவும் பொருத்தமே. 

திரு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள். 

பிகு:

இது தொடர்பாக ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது. அதை என்னவென்று கணிப்பவர்களுக்கு சாகித்ய அதிசயம் விருது வழங்கப்படும். கணிக்க முடியாதவர்கள், அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். 


2 comments:

  1. சஞ்சாரம் படித்திருக்கிறேன்
    அருமையான நூல்
    எஸ் ரா அவர்களை வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete