Wednesday, December 26, 2018

என்றும் நாங்கள் அவர் வழியில்



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் முதலாண்டு நினைவு நாள் இன்று.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்.

முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட சுற்றறிக்கையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண்  34/18                                                                        24.12.2018
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,

என்றும் நாங்கள் உங்கள் வழியில்  . . . .


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை நாம் இழந்து ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. 2004 ம் வருடம் டிசம்பர் 26, தமிழகத்தை சுனாமி தாக்கியதென்றால் கடந்த வருடம் டிசம்பர் இருபத்தி ஆறாம் நாள், இன்சூரன்ஸ் ஊழியர்களை தாக்கிய சுனாமியாக தோழர் என்.எம்.எஸ் அவர்களின் மறைவுச் செய்தி நம்மை பாதித்தது.

எல்.ஐ.சி பணியில் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தென் மண்டலக் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் எனும் பெரும் பொறுப்பை தன் இளந்தோள்களில் சுமக்கத் தொடங்கிய தோழர் என்.எம்.எஸ், தென் மண்டலப் பொதுச்செயலாளராக, அகில இந்திய பொதுச்செயலாளராக, அகில இந்தியத் தலைவராக, இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழின் ஆசிரியராக நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக நம்மை வழிநடத்தியவர்.

வங்கித்துறை சங்கங்களை கூட்டுப் போராட்டக்குழு மூலமாக இணைத்து பென்ஷன் எனும் அற்புதமான பலனை வென்றெடுத்து இன்சூரன்ஸ் ஊழியர்களின் எதிர்காலத்தை  பாதுகாத்த பெருமை தோழர் என்.எம்.,சுந்தரம் அவர்களையே சாரும். அவருடைய முதன்மையான சாதனை பென்ஷன்.

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்த போது அதனை முறியடிக்க வலிமையான தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இன்சூரன்ஸ்துறை அரசின் இயல்பான ஏகபோகமாக அமைந்திட வேண்டும் என்பதை தன் அபாரமான வாதங்களால் நிறுவியவர்.

“மக்களிடம் செல், மக்களிடம் சொல்” என்ற அவரது முழக்கமே நாடெங்கிலும் பெரும் வீச்சோடு தொடர் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வழிவகுத்தது. “பாலிசிதாரர்களுக்கான சேவையை  சிறப்பாக செய்வதன் மூலம் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் நம்முடைய மேஜையிலிருந்து துவங்குகிறது” என்று நமக்கு போதித்தவர். இன்சூரன்ஸ் ஊழியர்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை நமக்கு கற்றுக் கொடுத்தவர். உழைக்கும் வர்க்க அரசியலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியவர்.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறையாக பாதுகாப்பதும் உழைக்கும் மக்களின் போராட்ட இயக்கங்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதே, தன் வாழ்நாள் முழுதையும் நமக்காக அர்ப்பணித்துக் கொண்ட தலைவருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

வரும் 8,9,ஜனவரி,2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மகத்தான வெற்றி மூலம் அவரது கனவுகளை நனவாக்கும் பயணத்தை தொடர்ந்திடுவோம்.

செவ்வணக்கம் தோழர் என்.எம்.எஸ் . . .

தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன் 
பொதுச்செயலாளர்

1 comment:

  1. Red salute com.NMS.we will follow your principles and teachings and strengthen working class principally.long live com.NMS.

    ReplyDelete